ரம்மி விளையாட்டால் பறிபோன உயிர்.. தாயின்றி பறிதவிக்கும் இரண்டு வயது பெண் குழந்தை..!
திருப்பத்தூர் அருகே பலமுறை கூறியும் கணவன் ரம்மி விளையாட்டை கைவிடாததால் மனம் உடைந்த மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த தும்பேரி ஊராட்சிக்கு உட்பட்ட மிட்னாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் மதன். கூலித் தொழிலாளி. இவரது மனைவி வெண்ணிலா. இவர்களுக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆகின்றன. தற்போது தம்பதிக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.
மதன் ஆன்லைன் ரம்மிக்கு அடிமை ஆனதாக கூறப்படுகிறது. இதனால் மனைவி உள்ளிட்ட யாருடைய பேச்சையும் கேட்காமல் தொடர்ந்து வீட்டில் இருந்த தங்க நகைகளை அடகு வைத்து ஆன்லைன் ரம்மி விளையாடி வந்துள்ளார்.
ஆன்லைன் ரம்மி விளையாடுவதை கைவிட கோரி மனைவி வெண்ணிலா தொடர்ந்து கணவன் மதனை வலியுறுத்தி வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வெண்ணிலா இதுதொடர்பாக புகார் அளித்து இருத்திருந்தார். அப்போது கணவன், மனைவி இருவரையும் அழைத்த காவல் துறையினர் சமாதானம் செய்து அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இதன் பிறகும் தொடர்ந்து மதன் ஆன்லைன் ரம்மி விளையாடி வந்துள்ளார்.
இதையும் படிங்க: புனித ரமலான் பண்டிகை.. உலக அமைதி வேண்டி தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்
ரம்மி விளையாடுவதை கைவிடுமாறு பலமுறை சொல்லியும் கேட்காததால் மனம் உடைந்த வெண்ணிலா வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அம்பலூர் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வெண்ணிலாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அம்பலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அஜிதா பேகம் தலைமையிலான அதிகாரிகளும் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: அடுத்த 3 மாதத்திற்கு நீலகிரியில் படப்பிடிப்புகளுக்கு தடை.. சுற்றுலாப் பயணிகளுக்கே முக்கியத்துவம்..!