×
 

காயமடைந்த சிறுவனை டோலி கட்டி தூக்கி சென்ற கிராம மக்கள்.. 5கி.மீ காட்டுப்பாதையில் நடந்த அவலம்..

தேனி அருகே காயமடைந்த சிறுவனை 5கி.மீ டோலி கட்டி அப்பகுதி மக்கள் தூக்கி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் போடிநாயக்கனூர் தாலுகாவிற்கு உட்பட்ட அகமலை ஊராட்சியில் சொக்கநிலை என்ற மலை கிராமம் உள்ளது. இந்த மலை கிராமத்தில் 40-க்கும் மேற்பட்ட ஆதிவாசி பழங்குடியின பளியர் இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் அந்த பகுதியில் காய்கறி போன்றவற்றை பயிரிட்டு விவசாயம் செய்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்பவரின் மகன் ரஜினி (வயது 17) நேற்று அவர்களது தோட்டத்தில் மரத்திலிருந்த மிளகை பறித்துக் கொண்டிருந்தார். அப்போது ரஜினி எதிர்பாராத விதமாக மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். அப்போது அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அவரை தூக்கினர். இதில் சிறுவன் ரஜினிக்கு கால் மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து சிறுவன் ரஜினியை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனையடுத்து ஆதிவாசி பழங்குடியின மக்கள், அப் பகுதியில் சாலை வசதி இல்லாததால் 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கண்ணகரை வரை டோலி கட்டி தூக்கி சென்றுள்ளனர். பின்னர் கண்ணகரை பகுதியில் இருந்த ஆம்புலன்சில் அழைத்து சென்று நேற்று பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதையும் படிங்க: லால்குடி அன்பில் மாரியம்மன் கோயில் தேரோட்டம்.. திரளான பக்தர்கள் பங்கேற்பு

பின்னர் மரத்திலிருந்து கீழே விழுந்த சிறுவன் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததால் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சாலை வசதி இல்லாததால் படுகாயம் அடைந்த சிறுவனை ஆதிவாசி பழங்குடியின மக்கள் டோலி கட்டி தூக்கி வரும் நிலை குறித்து சமூக வலைதளங்கள் மற்றும் வாட்ஸ்அப் களில் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: டாஸ்மாக் முறைகேட்டை மறைக்கவே நீட் நாடகம்.. மு.க. ஸ்டாலினை விளாசிய எல். முருகன்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share