சென்னை தரமணியில் அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி செயல்படுகிறது. இந்த கல்லூரி விடுதியில் இருந்து முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி கடந்த வெள்ளிக்கிழமை தனது தோழியுடன் வெளியே சென்றுள்ளார். மாணவிகள் இருவரும் மாலை 6 மணி வரை விடுதிக்கு திரும்பாத நிலையில், இரவு 10 மணியளவில் ஒரு மாணவி மட்டும் விடுதிக்கு திரும்பி வந்துள்ளார். அவரிடம் கல்லூரி விடுதி காப்பாளர், மற்றொரு மாணவியை பற்றி அவரிடம் கேட்டபோது தனக்கு தெரியாது என அந்த மாணவி கூறியுள்ளார். மாணவி திரும்ப வராத நிலையில் அதுகுறித்து போலீசாருக்கு கல்லூரி நிர்வாகம் எந்தவித தகவலும் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் அடுத்த நாள், சனிக்கிழமை காலை உடல் முழுதும் காயத்துடன் மாணவி கல்லூரி விடுதிக்கு வந்துள்ளார். மாணவியை சோதனை செய்தபோது உடலின் பல இடங்களில் பல்லால் கடித்த காயம் இருந்தது தெரிந்தது. மாணவியிடம் நடத்திய விசாரணையில், இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான நண்பர் அழைத்ததால் சென்றதாகவும், அங்கு போதை பொருளை கொடுத்து ஏழு பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: போதை பழக்கி சீரழித்த கயவன்.. 5 ஆண்டுகளாக தொடர்ந்த பாலியல் கொடுமை.. கேரள மாணவியின் கண்ணீர் கதை..!

நடந்ததை அறிந்த கல்லூரி நிர்வாகம் அதுபற்றி போலீசுக்கு தெரிவிக்காமல் மறைத்துவிட்டதாக கூறப்படுகிறது. கல்லூரி நிர்வாகத்தின் இந்த செயலை கண்டித்தும், பாலியல் வன்கொடுமை செய்தவர்களை கைது செய்து தண்டிக்க வலியுறுத்தியும் இந்திய மாணவர் சங்கத்தினர் கல்லூரி முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது திடீரென கோஷமிட்டபடி கல்லூரிக்குள் நுழைந்தனர். அங்கு பாதுகாப்புக்கு வந்திருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அதற்கு மாணவர் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போலீசை தள்ளி விட்டனர்.

தள்ளிவிட்ட இளைஞரை சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் தாக்க, அடுத்த நொடி அனைத்து இளைஞர்களும் அவரை பாய்ந்து தாக்கினர். மேலும் சப் இன்ஸ்பெக்டரின் சீருடையை பிடித்து மிரட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சப் இன்ஸ்பெக்டரை தாக்க முயன்ற இளைஞர்களை பிடித்து இழுத்த மற்ற போலீசுடனும் கடும் வாக்குவாதம் செய்தனர். பின்னர் சக மாணவர்களே மாணவர் அமைப்பினரை விலக்கிவிட்டு சமாதானப்படுத்தியதை அடுத்து கல்லூரி வளாகத்திலேயே அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து அனைத்திந்திய மாதர் சங்கம் மாநில பொருளாளர் பிரமிளா கூறியதாவது, கல்லூரி முதல்வர் ஒரு மாதிரியும், காவல் துறையினர் ஒரு மாதிரியும் தகவல்களை கூறுகின்றனர். மாறி மாறி கூறுவதால் உண்மையான தகவல் வெளியாகவில்லை என்பதை புரிந்து கொள்கிறோம். மாணவி இரவு காணாமல் போகி உள்ளார் என்றால் உடனடியாக காவல்துறையில் கல்லூரி நிர்வாகம் புகார் அளித்திருக்க வேண்டும். எந்த ஆதாரமும், இல்லாமல் பெண்ணை கல்லூரியில் இருந்து நிர்வாகம் நீக்கி உள்ளார்கள் என்பது பெண்ணுக்கு அச்சுறுத்தல் நடந்துள்ளதாக பார்க்கிறோம்.
கல்லூரி நிர்வாகமும் தமிழக அரசும் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாதர் சங்கமும் , இந்திய மாணவர் சங்கமும் இணைந்து மாபெரும் போராட்டத்தை நடத்துவோம். பெரும்பாடுபட்டு பெற்ற பெண் கல்வியை பெற தற்போது அவல நிலை தமிழகத்தில் உள்ளது. பெண் ஏன் இரவில் வெளியே சென்றார் என கேட்கும் முதல்வர் மீது கடுமையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
கல்லூரி நிர்வாகம் பெயர் கெட்டுவிடும் என தகவல் வெளியே சொல்லாமல் இருக்கும் கல்லூரியின் முதல்வர் செயலை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த வழக்கு முறையாக விசாரணை செய்ய வில்லை என்றால் காவல்துறையையும், தமிழக அரசையும் கண்டித்து வழக்கு தொடுக்க கோரி மிக வீரியமான போராட்டத்தை எங்களுடைய அமைப்புகள் எடுக்கும் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: அக்கா, தங்கைக்கு பாலியல் தொல்லை.. வீடுபுகுந்து சிறுமிகளை சிதைத்த கொடூரம்.. ஓசூரில் 5 சிறுவர்கள் போக்சோவில் கைது..