×
 

ஸ்டாலினுக்கு ஆணவம் விமர்சனம்.. ஆளுநரை கண்டுகொள்ளாத பெருந்தலைகள்.. பொங்கி எழுந்த திமுக எம்.பி!

முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு ஆணவம் நல்லதல்ல என்று ஆளுநர் ஆர்.என். ரவி விமர்சித்திருந்த நிலையில், ஆளுநருக்கு திமுக எம்.பி. வில்சன் மட்டும் பதிலடி கொடுத்திருக்கிறார்.

2021இல் தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டது முதலே ஆளுநர் மாளிகைக்கும் ஆளுங்கட்சிக்கும் ஏழாம் பொருத்தம்தான். என்னதான் மோதல் போக்கு நிலவினாலும் தனிப்பட்ட முறையில் ஆளுநரும் - முதல்வரும் வார்த்தைப் போர் நடத்தியதில்லை. ஆனால், இந்த ஆண்டு முதல் சட்டப்பேரவைக் கூட்டத்துக்குப் பிறகு நேரிடையாக விமர்சித்துகொள்ளும் அளவுக்கு ஆளுநர் -  முதல்வர் இடையேயான உறவு சீர்குலைந்துள்ளது. நேற்று முன் தினம் ஆளுநர் மாளிகை வெளியிட்ட சமூக வலைத்தளப் பதிவில் அது எதிரொலித்தது.

குறிப்பாக, "இந்தியாவை ஒரு தேசமாக; இந்திய அரசியலமைப்பை ஏற்றுக்கொள்ளாத மற்றும் மதிக்காத ஒரு தலைவராக இருக்கும் அவர் (ஸ்டாலின்), கூட்டு நலன்கள் மற்றும் சித்தாந்தங்களின் உண்மையான நோக்கங்களை வஞ்சகம் செய்ததற்கு நன்றி. இத்தகைய ஆணவம் நல்லதல்ல. பாரதமே உயர்ந்த தாய் என்பதையும், அவளது குழந்தைகளுக்கு அரசியலமைப்பே உயர்ந்த நம்பிக்கை என்பதையும் மறந்துவிடாதீர்கள். அவர்கள் இத்தகைய வெட்கக்கேடான அவமானத்தை விரும்பவோ பொறுத்துக்கொள்ளவோ மாட்டார்கள்” என்று ஆளுநர் மாளிகை கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தியிருந்தது.

இதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் எதிர்வினையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முதல்வரிடமிருந்து எந்தப் பதிவும் வரவில்லை. இதேபோல் திமுக மூத்தத் தலைவர்கள் எதிர்வினையாற்றுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி எந்த அறிக்கையும் திமுக மூத்தத் தலைவர்களிடமிருந்து வெளிவரவில்லை. திமுக எம்.பி. வில்சன் மட்டும் காட்டமாக எதிர்வினையாற்றியுள்ளார்.

இதையும் படிங்க: ஆணவம் நல்லதல்ல.. முதல்வர் ஸ்டாலின் மீது ஆளுநர் மாளிகை அட்டாக்!

 இதுதொடர்பாக அவர் பதிவில், "மேதகு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு தன்னிலை மறந்துவிட்டதா? ஆளுநர் எனும் பொறுப்பிற்கு அவமானச் சின்னம் அவர். தமிழக அரசையும், முதலமைச்சரையும் தொடர்ந்து எதிர்முகமாக எண்ணும் அவரது போக்கும், தி.மு.க.வுடன் கருத்தியல் மற்றும் அரசியல் போரில் ஈடுபடுவதும் அரசியல் சாசன பதவிக்கு அவர் தகுதியற்றவர் என்பதைக் காட்டுகிறது. அரசியல்வாதியாக வேண்டும் என்ற ஆசை இருந்தால் அவர் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் போட்டியிட வேண்டும்.

52 ஆண்டுகளாக தேசியக் கொடியை ஏற்றாத ஒரு அமைப்பின் கைக்கூலிகள் தமிழகத்திற்கு தேசபக்தி குறித்து சொற்பொழிவாற்றுவது வேடிக்கையாக உள்ளது. எங்களைப் பொறுத்தவரை, இந்தியாவும் தமிழகமும் எங்கள் இரண்டு கண்களைப் போன்றவை. இரண்டும் சம அளவில் முக்கியமானவை. ஒருவரை மகிழ்விக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் மற்றொருவரை காயப்படுத்துவதில்லை. அதை நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது ஆளுநர் அவர்களே.


ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அரசியலமைப்பு கண்ணியத்தை நீங்கள் அவமதித்திருக்கும்போது, அந்த அரசியலமைப்பைப் பற்றி பேச உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை. உச்ச நீதிமன்றம் கூட உங்களுக்கு குட்டு வைத்து உங்கள் வேலையைச் சரியாகச் செய்யச் சொல்ல வேண்டியுள்ளது!

ஆளுநர் ஆர்.என். ரவியின் இத்தகைய சட்டவிரோத செயல்களுக்கு ராஜ் பவனில் உள்ள அரசு ஊழியர்கள் உதவுவதைக் கண்டு நான் ஆச்சரியம் கொள்கிறேன். அவர்கள் தமிழ்நாடு அரசின் ஊழியர்கள் என்பதையும், தமிழ்நாடு அரசையோ அதன் கொள்கைகளையோ விமர்சிப்பது, நடத்தை விதிகளின்படி ஒரு அரசுப் பணியாளரை பணிநீக்கம் செய்வதற்கு போதுமான காரணம் என்பதையும் அவர்களுக்கு நினைவூட்ட வேண்டும்." என்று
 வில்சன் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

 

இதையும் படிங்க: சீமானுக்கு கொஞ்சம் மகிழ்ச்சி, கொஞ்சம் சோகம்.. தேர்தல் ஆணையம் கொடுத்த ஷாக்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share