10.5% விட அதிகம் அனுபவிக்கும் வன்னியர்கள்... 15% ஆக உயர்த்தி திமுகவுக்கு நெருக்கடி... அன்புமணியை ஆட்டி வைக்கும் டேட்டா..!
வன்னியர்களுக்கு செய்யும் துரோகம் என்றும் சொல்லி வந்த நிலையில், அதை 15% இடஒதுக்கீடாக திடீரென உயர்த்தி இருக்கிறார் அன்புமணி.
வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு கொடுக்கவில்லையென்றால் அண்டம் நடுநடுங்க, தமிழகம் கிடுகிடுக்க போராட்டம் நடைபெறும் என்று பேசிவந்தார் பாமக நிறுவனர் ராமதாஸ். 10.5% இட ஒதுக்கீடு வன்னியர்களுக்கு கொடுக்கப்படவில்லை என்றால் அது வன்னியர்களுக்கு செய்யும் துரோகம் என்றும் சொல்லி வந்த நிலையில், அதை 15% இடஒதுக்கீடாக திடீரென உயர்த்தி இருக்கிறார் அன்புமணி.
வன்னியர் இட ஒதுக்கீட்டு சட்டத்தை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து, பாமக சார்பில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றார் பாமக தலைவர் அன்புமணி.
அப்போது பேசிய அன்புமணி, ‘‘வன்னியர்களுக்கு 15 விழுக்காடு இடஒதுக்கீடு கொடுத்தீர்கள் என்றால் அடுத்த தேர்தலில் தி.மு.க.,விற்கு நிபந்தனை இல்லாமல் ஆதரவளிப்போம் ஒரு சீட்டுக்கூட கொடுக்க வேண்டாம். வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க திமுக அரசுக்கு மனதில்லை. திமுக துரைமுருகனை துணை முதல்வராக்காதது ஏன்? துரைமுருகன் வன்னியர் சமுதாயத்தில் பிறந்ததால் துணை முதல்வர் பதவி மறுக்கப்பட்டுள்ளது. மூத்த அமைச்சர் துரைமுருகனுக்கு துணை முதல்வர் பதவி கொடுத்தால் என்ன..? அவர் என்ன உழைக்கவில்லையா..? எவ்வளவோ தியாகம் செய்திருக்கிறார்?’’ என திமுக உட்கட்சி விவகாரத்தில் சாதியை நுழைத்திருக்கிறார் அன்புமணி.
இதையும் படிங்க: பள்ளியை மூடாதீங்க மா.. காலில் விழுந்து கெஞ்சிய பா.ம.க MLA..
இதற்கு வினையாற்றி இருக்கும் திமுகவினர், ‘‘மற்ற கட்சி உள்விவாரத்தில் தேவையில்லாமல் தலையிட வேண்டாம். அதுவும் சாதியின் அடிப்படையில் கேள்வி கேட்கிறீர்கள்? எப்போதுதான் திருந்துவீர்கள்? பாட்டாளி மக்கள் கட்சியில் முதிர்ந்த அரசியல்வாதிகள் இருந்த நிலையில் எந்த அடிப்படையில் 2004-ல் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு ஒன்றியஅரசில் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சராகப் பணியாற்றினீர்கள்? உங்கள் கட்சியில் வேற தகுதியான நபர்களை அப்போது இல்லையா?’’ என பதிலடி கொடுத்து வருகிறனர்.
மேலும் பேசிய அவர், ‘‘இது ஜாதி பிரச்னை அல்ல... சமூக நீதி பிரச்சனை. திமுக அரசு திட்டங்களால் வன்னியர் மக்கள் எந்த பலன் அடையவில்லை’’ என அன்புமணி பேசியதற்கும் கட்டையைப்போட்டுள்ள திமுகவினர், ‘‘பாட்டாளி மக்கள் கட்சி ஒரு ஜாதி கட்சி இல்லை. அது அனைத்து தமிழர்களுக்குமான கட்சி என்று சொல்வீர்களே. ஆனால், எப்போதுமே வன்னியருக்கு மட்டும் தான் இட ஒதுக்கீடு கேட்டு போராடுகிறீர்கள். அப்படியானால் பாமகவை ஜாதி கட்சி என்று தானே சொல்வார்கள்’’ என்றும் முணுமுணுக்கிறார்கள்.
சரி, 10.5 சதவிகித இட ஒதுக்கீடே தொங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அதை 15 சதவிகிதமாக திடீரென உயர்த்திக் கேட்கும் காரணம் என்ன? அதற்கு சமீபத்தில் வெளியான ஒரு டேட்டாதான் காரணம் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.
பத்திரிக்கையாளர் கார்த்திகேயன் பாமக இடஒதுக்கீடு குறித்து ஆர்.டி.ஐ தகவல்களை பெற்றுள்ளார். அதில், தற்போதைய நிலவரப்படி 10.5% சதவீதத்திற்கும் அதிகமான இடங்களை கல்வி, வேலைவாய்ப்பு இரண்டிலும் வன்னியர்கள் அனுபவித்து வருவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. போராடி பெற்ற எம்.பி.சி இடஒதுக்கீட்டில் 108 சாதிகள் இடம்பெற்றுள்ளன. கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் வன்னியர்களுக்கான போதுமான இடங்கள் எம்.பி.சி பிரிவில் கிடைப்பதில்லை என்கிறார் ராமதாஸ். அதற்காக 10.5% இடஒதுக்கீட்டை வன்னியர்களுக்கு மட்டும் வழங்க வேண்டும் என்று கேட்டு வந்தார் ராமதாஸ்.
கொண்டையன்கோட்டை மறவன் சங்கத்தைச் சேர்ந்த பி.பொன்பாண்டியனும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறையிடம் எம்.பி.சி இட ஒதுக்கீட்டின் கீழ் வன்னியர்கள் பெற்றுள்ள இடங்கள் குறித்த தகவல்களைக் கேட்டுப் பெற்றிருக்கிறார்.
அதில், டி.என்.பி.எஸ்.சி பணியிடங்கள், ஆசிரியர் பணி, காவல்துறை, மருத்துவப் பணியிடங்கள் உள்ளிட்டவற்றில் வன்னியர்களுக்கு எத்தனை இடங்கள் கிடைத்துள்ளன என்ற தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
எம்.பி.பி.எஸ் படிப்பைப் பொறுத்தவரை 2018 முதல் 2022 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில் தமிழ்நாட்டில் மொத்தம் 24,330 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இதில் 4873 மாணவர்கள் 20% சதவீத எம்.பி.சி இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்ந்துள்ளனர். இந்த 4873 மாணவர்களில் 2781 பேர் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இது மொத்த எண்ணிக்கையில் 11.4% சதவீதம் ஆகும். இது பாமக நிறுவனர் ராமதாஸ் முன்வைக்கும் கோரிக்கையான 10.5% சதவீதத்தை விட அதிகம். மீதமுள்ள இடங்களில் 678 இடங்கள் டி.என்.சி பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கும், 1414 இடங்கள் (5.8%) எம்.பி.சி பிரிவில் உள்ள மற்ற சாதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும் கிடைத்துள்ளன.
பொதுப்பிரிவு இடங்களையும் சேர்த்து மொத்தம் 3,354 இடங்கள் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு கிடைத்துள்ளன. இது மொத்த எண்ணிக்கையில் 13.8% சதவீதம். இதேபோல் பி.ஜி. மருத்துவப் படிப்பில் மொத்தம் 6966 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இதில் 20% எம்.பி.சி இட ஒதுக்கீட்டில் 1363 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இந்த 1363 மாணவர்களில் 694 மாணவர்கள் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இது 10.2% சதவீதம். மற்ற எம்.பி.சி பிரிவு சாதிகளைச் சேர்ந்தவர்கள் 9.1% சதவீத இடங்களையும், சீர்மரபினர் பிரிவைச் சேர்ந்தவர்கள் 4% இடங்களையும் பெற்றுள்ளனர்.
சப் இன்ஸ்பெக்டர்கள்நீதிமன்ற நியமனங்களைப் பொறுத்தவரை, டி.என்.பி.எஸ்.சி-யால் நடத்தப்பட்ட சிவில் நீதிபதிகளுக்கான தேர்வில் எம்.பி.சி இடஒதுக்கீட்டின் கீழ் 79 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் 39 பேர், அதாவது 9.9% பேர் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இந்த ஆர்.டி.ஐ தகவல்களின் அடிப்படையில் பார்க்கும்போது கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட மேலே குறிப்பிட்ட முக்கிய துறைகளில் 10.5% சதவீதத்திற்கும் அதிகமான எண்ணிக்கையில் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்த தகவல்களை இன்னொரு வகையில் 10.5 சதவீத இடஒதுக்கீடு ஒரு சில இடங்களில் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு பின்னடைவாகவும் மாறுகிறது. மருத்துவக் கல்வியில் எம்.பி.சி ஒதுக்கீட்டில் 11.4% இடங்களை வன்னியர் சமூக மாணவர்கள் பெற்றுள்ளனர். ராமதாசின் கோரிக்கையான 10.5% இட ஒதுக்கீடு அடிப்படையில் பார்த்தால் வன்னியர் சமூக மாணவர்கள் இதில் 0.9% இடங்களை இழப்பார்கள். கிட்டத்தட்ட 218 வன்னியர் சமூக மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி வாய்ப்பு கிடைக்காமல் போகும்.
அதேபோல் ஆசிரியர் பணியிடங்களில் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த 12.5% பேருக்கு, அதாவது 383 பேருக்கு எம்.பி.சி இட ஒதுக்கீட்டின் கீழ் வேலை கிடைத்துள்ளது. 10.5% இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பார்த்தோமென்றால் 2% பேருக்கு வேலைவாய்ப்பு குறையும். வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த 60 பேருக்கு ஆசிரியர் வேலை கிடைக்காது.
இந்த 10.5 சதவிகிதம் நிறைவேற்றாமலே இத்தனை இடஒதுக்கீட்டை அனுபவித்து வருவது வெளியே தெரிந்தால் அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தும் என்பதாலேயே அன்புமணி 15 சதவிகித இடஒதுக்கீடு வேண்டும் என 4.5 சதவிகிதத்தை உயர்த்தி கேட்க ஆரம்பித்துள்ளார்’’ என்கிறார்கள் விபரமறிந்தவர்கள்.
இதையும் படிங்க: பழசை மறக்கலையே...எம்ஜிஆர் ஜெயலலிதா சிலைக்கு மரியாதை செய்த திமுக அமைச்சர் ..!