அண்ணா பல்கலைக்கழக மாலை விவகாரம் சட்டசபையில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த விவகாரத்தில் திமுகவின் தோழமைக் கட்சிகள் மிக அழகாக ஆளுநர் பக்கமும், மத்திய அரசு பக்கமும் இந்த விவகாரத்தை திருப்பியதை காண முடிந்தது. வேல்முருகன் தவிர மற்ற அனைவரும் மத்திய அரசை கண்டித்து பேசினர்.
அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும், உண்மை குற்றவாளி கைது செய்ய வேண்டும், விசாரணை முறையாக நடக்க வேண்டும், மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வைத்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராடி வருகின்றன. கடந்த ஒரு வார காலத்துக்கு மேலாக இந்த விவகாரம் சூடு பிடித்து உள்ள நிலையில் சட்டசபை கூடும் முதல் நாளில் இந்த விவகாரத்தை அதிமுக பெரிதாக கையில் எடுத்தது.
ஆனால் ஆளுநர் அடித்த ஸ்டண்ட் காரணமாக இந்த விவகாரம் பின்னுக்கு தள்ளப்பட்டது. உடனடியாக தன்னை காப்பாற்றிய ஆளுநரை கண்டித்து நேற்று ஆளுங்கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தால் அண்ணா பல்கலைக்கழக விவகாரம் மேலும் பின்னுக்குச் சென்றது. ஆனாலும் அதிமுக இந்த விவகாரத்தை விடுவதாக இல்லை, தொடர்ந்து ’யார் அந்த சார்’ பிரச்சாரத்தை பல்வேறு வடிவங்களில் அதிமுகவினர் எடுத்துச் செல்கின்றனர்.
தொடர்ந்து இந்த விவகாரத்தை உயிர்ப்புடன் வைத்துக் கொள்வதில் அதிமுகவில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ’யார் அந்த சார்’ என்கிற விவகாரம் தாண்டி, எதிர்க்கட்சிகளுக்கு போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுப்பதை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கண்டித்து வருகின்றன. திமுகவின் தோழமைக் கட்சித் தலைவர்களும் தொடர்ந்து கண்டித்து வருகிறார்கள். தோழமைக் கட்சி தலைவரான கே.பாலகிருஷ்ணன் அறிவிக்கப்படாத அவசரநிலை உள்ளதை சுட்டிக்காட்டி பேசியதை திமுக கடுமையாக மறுத்தது.

இந்த நிலையில் இந்த விவகாரத்தை பாமக நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறது ஆளுங்கட்சியின் போராட்டத்துக்கு ஒரே நாளில் அனுமதி கொடுப்பதும், அவர்களை போராட அனுமதிப்பதும் எதிர்க்கட்சி போராட்டங்கள் முறையாக 5 நாட்கள் முன் அனுமதி கேட்டு விண்ணப்பித்தும் கடைசி நேரத்தில் அனுமதி மறுத்து போராட அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தி கைது செய்வது எந்த வகை என்று நீதிமன்றத்தில் பாமக வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது இந்த நிலையில் இந்த விவகாரத்தை கவன ஈர்ப்பு தீர்மானமாக கொண்டு வர அதிமுக, காங்கிரஸ், பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் நோட்டீஸ் அளித்து இருந்த நிலையில் இந்த விவகாரம் இன்று சட்டமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. விவாதத்தில் பேசிய தோழமைக் கட்சி உறுப்பினர் வேல்முருகன் கடுமையாக பேசினார். யார் அந்த சார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் காவல்துறை முறையாக விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
தொடர்ந்து பேசிய தோழமைக் கட்சி எம்எல்ஏக்களான சிபிஎம், சிபிஐ, விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் இந்த விவகாரத்தில் காவல்துறையை குற்றம் சாட்டாமல், மத்திய அரசை ஆளுநரை குற்றம் சாட்டி பேசினர். ஆளுநரே பொறுப்பு என்று விசிக எம்எல்ஏ நேரடியாக குற்றம் சாட்டினார். யார் அந்த சார் அவர் ஆளுநராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொங்கு ஈஸ்வரன் பேசினார். மத்திய அரசின் தொழில்நுட்ப கோளாறால் எஃப் ஐ ஆர் வெளியாகியது என்பது ஏற்க முடியாது என்று மார்க்சிஸ்ட் எம்எல்ஏ கோரி அவர்களையும் குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என்று வினோத கோரிக்கை ஒன்றை வைத்தார்.
இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சியான அதிமுகவினர் பேசும்பொழுது வழக்கம் போல் நேரலை துண்டிக்கப்பட்டது. அவர்கள் என்ன பேசினர் என்பது குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ள வகை செய்யாமல் நேரலை துண்டிக்கப்பட்டது. பாமக சார்பில் பேசிய ஜி.கே மணி பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டது குறித்து பேசியதற்கு தொடர்ந்து இந்த விவகாரத்தில் பேசிய முதல்வர் பல்வேறு இடங்களில் முன் அனுமதியோடு போராட்டங்கள் நடைபெற்றன, நடைபெறுகின்றன என்று சொல்லி திமுகவினரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.
ஆனால் போராட்டத்திற்கு முன் அனுமதி கேட்ட கட்சிகளுக்கு கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டு, போராட்டம் நடத்த கூட அனுமதி இல்லாமல் மடக்கி கைது செய்யப்பட்டதும், திமுகவினர் ஒரே நாளில் போராட்டம் அறிவித்து போராட்டம் நடத்த அனுமதிக்கப்பட்டு பின்னர் வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கும் வித்தியாசம் உள்ளது என்பதை முதல்வருக்கு எழுதிக் கொடுத்தவர்கள் வசதியாக மறைத்ததாக தெரிகிறது.
மொத்தமாக அனைத்து உறுப்பினர்கள் பேசிய பேச்சில் யார் அந்த சார் என்கிற அதிமுக ஹாஷ்டாக் பெரும்பாலும் ஒலித்தது. தோழமைக் கட்சியின் எம்எல்ஏக்களே யார் அந்த சார் என்பதை அறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை குறிப்பிட்டு பேசினார்கள். சட்டசபையில் அவை குறிப்பிடும் யார் அந்த சார் ஏறியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஆட்டு மந்தையில் அடைத்துவைக்கப்பட்டாரா "பாஜக குஷ்பு".. தெளிவுபடுத்திய அமைச்சர் சேகர்பாபு..!
இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை “அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை வாக்கு வங்கி அரசியல் ஆக்கிவிட்டார்கள் ஒரு விரல் மற்றவரை நோக்கி நீட்டினால் நான்கு விரல்கள் உங்களை நோக்கி நீளும், என்று சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் பேசி மனு நீதி அரசாக இந்த அரசு நடவடிக்கை எடுக்கிறது, என திடீரென தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்தும் பேசியதால் அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பாலியல் வன்கொடுமை விவரத்தை அரசியல் ஆக்குவது கொடுமை என்று அவர் பேசினார் பிஜேபி கட்டுப்பாட்டில் தான் டெலிகாம் உள்ளது இந்த விவகாரம் எப்படி வெளியானது என்பது குறித்து தெரிவிக்க வேண்டும் என்று செல்வபெருந்தகை வலியுறுத்தி பேசினார். இந்த விவகாரத்தில் முதல்வர் பதிலளித்து பேசினார். ”யார் அந்த சார் என்று கேட்கிறீர்கள்? கைது செய்யப்பட்ட குற்றவாளி குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். குற்றவாளி யாராக இருந்தாலும் 100% கண்டறிந்து சிறையில் அடைப்போம் என்பதை இந்த அவையில் உறுதியாக தெரிவிக்கிறேன். குற்றவாளிகளுக்கு நிச்சயம் தண்டனை வாங்கி கொடுப்போம்.
எதிர்க்கட்சிகளுக்கு யார் அந்த சார் என்று கேட்கிறீர்கள், உங்களுக்கு சொல்கிறேன் யார் அந்த சார் என்று சந்தேகம் இருந்தால் அதை உயர் நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வுக்குழுவில் சொல்லுங்கள் அதைவிடுத்து மலிவான அரசியலில் ஈடுபட வேண்டாம். பெண்களுக்கு பாதுகாப்பான அரசு இது, உங்கள் பிரச்சாரம் எடுபடாது என்று பேசினார். நீதிமன்றமே இதை அரசியல் ஆக்காதீர்கள் என்று கேட்டுக்கொண்டதை இங்கு நினைவூட்டுகிறேன்”.
இதையும் படிங்க: த.வெ.க தலைவர் விஜய் ஏன் ஆளுநரை சந்தித்தார்..?புயலை கிளப்பிய எஸ்.ஏ.சந்திரசேகர்..!