பிப்ரவரி 24ஆம் தேதி ஜெயலலிதாவின் பிறந்த நாள். ஆனால் அதற்கு முன்னதாகவே ஆக்சிஜன் தேவைப்படுகின்ற நிலையில் இருக்கிறது அதிமுக. ஒரு பக்கம் சரமாரியாக அஸ்திரங்களை வீசிக்கொண்டிருக்கிறார் செங்கோட்டையன். இன்னொரு பக்கம் தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என்கிற அனுமதி என நாலா பக்கமும் எடப்பாடியாருக்கு இடி. இன்னொரு பக்கம் ஓபிஎஸ் வீசுகின்ற அரசியல் கத்திகள். இவை அனைத்திற்கும் பின்னணியில் பாஜக இருக்கிறது என்கிற சந்தேகங்கள். அதே நேரத்தில் இதையெல்லாம் சரி கட்டி விடுவார் என்கிறார்கள் எடப்பாடியின் ஆதரவாளர்கள்.
அமைதியாக இருந்த செங்கோட்டையன் ஆத்திரத்தில் பொங்குவதும், அவரை எடப்பாடியாரின் ஆதரவாளர்கள் தாஜா செய்வதுமாக சென்றாலும் செங்கோட்டையன் சர்ச்சையில் ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட். செங்கோட்டையனை எஸ்.பி.வேலுமணி சந்திக்க வர இருக்கிறார். இந்நிலையில், தனது வீட்டில் இருந்து ரகசியமாக செங்கோட்டையன் ஆடி காரில் தனி சென்று 2 மணி நேரத்திற்கு பிறகு வீடு திரும்பியது அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கோபிச்செட்டி பாளையத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் செங்கோட்டையன். அங்கிருந்து குள்ளம்பாளையத்தில் உள்ள தனது தோட்டத்து வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவருடன் இருந்த அதிமுக முன்னாள் எம்.பி சத்தியபாமா, செங்கோட்டையனின் உதவியாளர் சபேசன், ஒன்றிய செயலாளர் குறிஞ்சிநாதன் உள்ளிட்ட நிர்வாகிகளை அவசர அவசரமாக செங்கோட்டையன் வெளியேற்றியுள்ளார். அடுத்து சற்று நிமிடங்களில் சென்னையின் பதிவெண்ணில் உள்ள ஒரு ஆடி கார் செங்கோட்டையனின் வீட்டிற்கு வந்துள்ளது.
இதையும் படிங்க: விஜய்யை பாஜக வளைத்தால்... விஜய்யை மறைமுகமாக எச்சரிக்கும் கே.பி. முனுசாமி..!
சில நிமிடங்களில் அந்த கார் செங்கோட்டையனை ஏற்றிக் கொண்டு வெளியேறி இருக்கிறது.கண்ணாடிகளில் கருப்பு கலர் சன் கண்ட்ரோல் பிலிம் ஒட்டப்பட்டிருந்ததால் உள்ளே இருப்பவர்களை வெளியில் இருந்து அடையாளம் காண முடியாது. 2 மணி நேரத்திற்கு பிறகு அந்த ஆடி காரில் தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார் செங்கோட்டையன். அந்த இரண்டு மணி நேரத்தில் வெளியே சென்றபோது செங்கோட்டையன் யாரைச் சந்தித்தார்? என்ன பேசினார்? என்பது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சொந்தக் கட்சி அரசியல் எதிரிகளை அரசியல் ரீதியாக ஒழிப்பதில் தயக்கம் காட்டாத எடப்பாடியோடு சரணாகதியையே அரசியல் உத்தியாக வைத்திருக்கும் செங்கோட்டையன் சண்டைக்குத் தயார் என சிக்னல் கொடுக்கிறார் என்றால் அது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றே கருத வேண்டும். செங்கோட்டையன் இப்படி பேசும் அளவுக்கு எடப்பாடி என்ன செய்தார் அல்லது எடப்பாடியாரோடு மோதும் அளவுக்கு செங்கோட்டையனுக்கு சப்போர்ட் எங்கிருந்து கிடைக்கிறது என்பதுதான் இதில் தீர்க்கப்பட வேண்டிய புதிர். எடப்பாடியாருக்கு எதிராக குரல் கொடுக்கத் தொடங்கிட முதல் நாள் பிப்ரவரி 9 ஆம் தேதி நாமக்கல்லில் செங்கோட்டையன் ரகசியமாக சந்தித்த பிரமுகர் யார்? என்கிற கேள்வி அப்போதே எழுந்தது. இப்போது செங்கோட்டையன் ஆடி காரில் ரகசியமாக சந்தித்து வந்த அந்தப்புள்ளி யார் என்கிற சந்தேகத்திற்கு 9ம் தேதி நடந்த சந்திப்பும் வலுச் சேர்த்துள்ளது.

அதிகாரத்தைக் கைப்பற்றியது முதலே எடப்பாடி பழனிசாமி தரப்பு செங்கோட்டையனை ஓரங்கட்டத் தொடங்கிவிட்டது. கொங்கு மண்டலத்தில் வேலுமணியை வளர்த்துவிட்டார். இது சீனியரான செங்கோட்டையனுக்கு வருத்தத்தைக் கொடுத்தது. ஆனாலும், பெரிதாக வெளியில் பேசாமல் இருந்தார். இந்த சூழலில்தான் செங்கோட்டையனிடமிருந்த தலைமை நிலையச் செயலாளர் பதவியையும் வேலுமணிக்குக் கொடுத்து அழகு பார்த்தார், எடப்பாடி. இப்படி தொடர்ச்சியாக அடிமேல் அடி விழுந்துகொண்டிருந்தது. இந்த சூழலில்தான் பாராட்டு விழாவுக்கான அழைப்பிதழில், வேலுமணிக்குக் கீழே செங்கோட்டையனின் பெயர் போடப்பட்டிருந்ததுதான். இது ஏற்கெனவே கோபத்தில் இருந் செங்கோட்டையனை மேலும் சூடாக்கிவிட்டது. ஆக மொத்தத்தில் அதிமுகவில் இந்தப் பிரளயம் இப்போதைக்கு ஓய்வதாக இல்லை.
இதையும் படிங்க: எடப்பாடி குறித்து கிடுக்கிடுப்பிடி கேள்வி... செய்தியாளரிடம் மழுப்பிய செங்கோட்டையன்...!