தேனி: திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில், கடந்த வாரம் நடந்த பஞ்சாயத்து ஒன்று தேனி மாவட்ட உடன்பிறப்புகள் மத்தியில் பேசு பொருளாகியுள்ளது.

தேனி மாவட்ட திமுக:
தேனி மாவட்ட திமுகவை பொறுத்தவரை தெற்கு மாவட்ட செயலாளராக கம்பம் ராமகிருஷ்ணன், எம்.எல்.ஏவும், வடக்கு மாவட்ட செயலாளராக தங்கத் தமிழ்ச் செல்வன் எம்.பி.யும் உள்ளார்கள். இவர்கள் இருவருக்கும் இடையேயான பனிப்போர் இன்று நேற்று என்றில்லாமல் கடந்த 4 ஆண்டுகளாகவே இருந்து வருகிறது.

அவ்வப்போது இருவரையும் தலைமைக்கழகத்திற்கு அழைத்து வார்னிங்கும், அட்வைசும் கொடுத்து அனுப்பி வந்த திமுக தலைமை, இந்த முறை சற்று சீரியஸாக இந்த விவகாரத்தை கையிலெடுத்திருக்கிறது.
இதையும் படிங்க: அவர்கள் விரலை எடுத்தே திமுகவினர் கண்ணை குத்தும் அண்ணாமலை... தமிழ்த்தாய் வாழ்த்து எங்கே என விளாசல்..!

முற்றிய வாக்குவாதம்:
கடந்த வாரம் தங்கத் தமிழ்ச்செல்வனும், கம்பம் ராமகிருஷ்ணனும் திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேச முயற்சித்ததாகவும், ஆனால் முதல்வர் அவர்கள் இருவரிடமும் முகம் கொடுத்து பேசாமல் அமைப்புச் செயலாளரை பார்க்குமாறு கூறிவிட்டுச் சென்றுவிட்தாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து அண்ணா அறிவாலயத்தில் ஆர்.எஸ்.பாரதி அறையில் நடந்த பஞ்சாயத்தில் கம்பம் ராமகிருஷ்ணனுக்கு எதிராக தங்கத் தமிழ்ச்செல்வன் புகார் மழை பொழிந்திருக்கிறார். குறிப்பாக கம்பம் ராமகிருஷ்ணன் தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளரா அல்லது அவரது உதவியாளர் நந்தன் மாவட்டச் செயலாளரா என ஆர்.எஸ்.பாரதி முன்னிலையிலேயே தங்கத் தமிழ்ச்செல்வன் கேள்வி எழுப்பியதால் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ஈகோ யுத்தம்:
நிலைமை கைமீறி செல்வதை உணர்ந்த ஆர்.எஸ்.பாரதி, இரண்டு பேரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்திருக்கிறார். இதனிடையே தேனி மாவட்டத் திமுகவில் இருவரிடையே நிலவும் ஈகோ யுத்தத்தால், மார்ச் 1ல் கொண்டாடப்படும் முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாளுக்கு கூட மாவட்டத்தில் பெரியளவில் சுவர் விளம்பரங்கள் ஏதும் கொடுக்கப்படவில்லை. இதனை தங்களுக்கு கிடைத்த நல்வாய்ப்பாக கருதிய அதிமுக நிர்வாகிகள், எடப்பாடி பழனிசாமியின் மார்ச் 2 தேனி வருகையை கொண்டாடும் விதமாக மாவட்டம் முழுவதும் சுவர் விளம்பரங்கள் கொடுத்து அசத்தி விட்டனர்.
இதையும் படிங்க: நாங்க பி.எச்.டி. தம்பி... நீ LKG விஜய்க்கு பதிலடி கொடுத்த சேகர் பாபு...!