மதிமுக நிர்வாகக்குழு ஆலோசனை கூட்டத்தில் பொதுச்செயலாளர் வைகோவின் அறிவுறுத்தலின் படி தனது ராஜினாமாவை துரை வைகோ வாபஸ் பெற்றுள்ளார். நிர்வாகக்குழு கூட்டத்திற்கு பிறகு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முதன்மைச் செயலாளர் துரை வைகோ, பொதுச்செயலாளர் மல்லை சத்யா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசினர்.
அப்போது துரை வைகோ – மல்லை சத்யா விவாகரம் தொடர்பாக பேசிய வைகோ, இருவருக்கும் இடையில் இருந்த மனக்கசப்பு விலகியதாகவும், ஒற்றுமையாக இருந்து இயக்கத்தை வலுப்படுத்துவோம் என துரை வைக்கோவிடம் மல்லை சத்யா தெரிவித்ததாகவும் கூறினார். நடந்தது நடந்தவையாக இருக்கட்டும் என துரை வைக்கோவும் மல்லை சத்யாவிடம் கூறியதாக தெரிவித்தார். இருவரும் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவிக் கொண்டு இணைந்து செயலாற்றுவோம் என உறுதியளித்ததாகவும், தனது வலது பக்கத்தில் துரை வைகோவும், இடது பக்கத்தில் மல்லை சத்யாவும் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், இஸ்லாமியர்களுக்கு விரோதமான சட்ட திருத்தத்தை கொண்டு வந்து, அநீதியும் அக்கிரமும் நிறைந்த வக்ஃபு திருத்த மசோதாவை நிறைவேற்றிய நரேந்திர மோடி அரசை கண்டித்து வருகிற 26 ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னையில் மதிமுக ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது என தெரிவித்தார். இதில் சென்னை மாநகரில் தானும், மல்லை சத்யாவும், ஏ.கே. மணியும் கலந்து கொள்ள உள்ளதாக கூறினார்.
மதுரையில் முதன்மைச் செயலாளர் துரை வைகோவும், சட்டமன்ற உறுப்பினர் புதூர் கோபிநாதனும், துணை பொதுச்செயலாளர் ராஜேந்திரனும் தலைமை தாங்கி போராட்டம் நடத்துவார்கள் என்றும் கோவையில் அவைத்தலைவர் ஆடிட்டர் அற்புதராஜ், கழக பொருளாளர் செந்தில் அதிபன், மேலும் அந்த மண்டலத்தில் உள்ள மாவட்ட செயலாளர்களும் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள் என கூறினார். கழகத்தின் பொது குழு ஜூன் மாதத்தில் நடைபெறும் என்று அறிவித்த அவர், தேதி, இடம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் மல்லை சத்யா கூறியதை கேட்டவுடன் தன் எடுத்த முடிவை மாற்றிக் கொள்வதாக முதன்மை செயலாளர் துரை வைகோ அறிவித்ததாகவும், நீர் அடித்து நீர் விலகாது என்றும் கூறினார்.
இதையும் படிங்க: நான் ராஜினாமா செய்கிறேன்..! மதிமுக கூட்டத்தில் மல்லை சத்யா பரபரப்பு பேச்சு..!
இதையும் படிங்க: மேடையில் துரை வைகோ.. இறுதி சீட்டில் மல்லை சத்யா.. நிர்வாகக்குழு கூட்டத்தில் நடப்பது என்ன?