மாநிலங்களவையில் மத்திய அரசுக்கு எதிராக கடுமையான கருத்துகளை வைகோ முன் வைத்தார். தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் துப்பாக்கிச் சூடு விவகாரத்தில் இலங்கை கடற்படையுடன் இந்திய கடற்படை இணக்கமாக உள்ளது என்றும், தமிழர்கள் மத்திய அரசு வரி செலுத்தவில்லையா என்றும் வைகோ குற்றம் சாட்டியிருந்தார். வைகோ தெரிவித்த கருத்துகளில் இலங்கை - இந்திய கடற்படை இணக்கமாக இருப்பதாக தெரிவித்த கருத்தை மட்டும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தலின் பேரில் அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டது.

இந்நிலையில் இதுகுறித்து ஏ.என்.எஸ். பிரசாத் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "தமிழக மீனவர்களுக்கு தீங்கு விளைவிப்பதற்காக இந்திய ராணுவம் இலங்கை கடற்படையுடன் இணக்கமாக இருந்து வருவதாக மாநிலங்களவையில் வைகோ அவதூறான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். இது ஒரு அப்பட்டமான பொய். மேலும், இந்திய ராணுவத்தின் மீது அவதூறு பரப்பும் முயற்சி ஆகும்.
வைகோவின் கருத்து, இந்திய ராணுவம் மற்றும் கடற்படையை அவமதிக்கிறது. நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் குறைமதிப்புக்கு உட்படுத்துகிறது. அதுமட்டுமில்லாமல், இந்திய அரசு மீது மக்களின் அதிருப்தியை உருவாக்குவதற்கும், இரு பிரிவினரிடையே பகை, வெறுப்பை ஊக்குவிக்கும் வகையிலும் உள்ளது.
இதையும் படிங்க: ‘மக்களின் உடல்நலனுக்காக பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்குங்கள்’.. மத்திய அரசுக்கு மாநிலங்களவை எம்.பி.க்கள் வலியுறுத்தல்..!

திமுக தலைவரும், வைகோவும் இந்திய ராணுவத்துக்கு எதிராக மோசமான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இவர்களது உறவு தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தானது. வைகோவின் மாநிலங்களவை உறுப்பினர் பதவி ரத்து செய்ய வேண்டும். மேலும் அவர் மீது வழக்குத் தொடர வேண்டும்." என்று அறிக்கையில் பிரசாத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் நிரந்தரம்.. பொதுமக்களுக்கு ஷாக் கொடுத்த நிதின் கட்கரி..!!