விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் உள்ள கழிவுநீர் தொட்டியில் விழுந்து யூகேஜி வகுப்பில் பயிலும் மாணவி லியா லட்சுமி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. பள்ளி இடைவேளையின் போது வெளியே சென்ற மாணவி லியா லட்சுமி, மீண்டும் வகுப்பறைக்கு வராததால் பல்வேறு இடங்களிலும் ஆசிரியர்கள் தேடியதாக கூறப்படுகிறது.அப்போது அந்த சிறுமி திறந்து வைக்கப்பட்டிருந்த பள்ளியின் கழிவுநீர் தொட்டியில் விழுந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கழிவுநீர் தொட்டியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட மாணவி லியா லட்சுமியின் உடல், பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
பள்ளிக்கு பின்புறத்தில் மைதானத்திற்கு செல்லும் வழியில் உள்ள கழிவுநீர் தொட்டி மூடப்படாமல் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்ததாக பள்ளி நிர்வாகத்தினர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. தொடர்ந்து, பள்ளி முதல்வர் டொமினிக் மேரி உட்பட மூன்று பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். மாணவி லியா லட்சுமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
மாணவியின் உடல் விக்கிரவாண்டி கிராமத்தில் உள்ள அவரது வீட்டின் முன்பு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கண்ணீர் மல்க மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் க.பொன்முடி, மாவட்ட ஆட்சியர் சி.பழனி ஆகியோர் குழந்தையின் உடலுக்கு, மாலை அணிவித்து அரசு சார்பில் மரியாதை செலுத்தினர்.

குழந்தையின் உடல் அருகே கதறி அழுது கொண்டிருந்த தாயாரிடம் அமைச்சர் பொன்முடி, முதல்வர் அறிவித்த நிவாரணத்தொகையின் காசோலையை வழங்க முற்பட்டார். முதலில், அதனை சிறுமியின் தாயார் ஏற்க மறுத்து, நிவாரணத்தை நிராகரித்தார். மேலும், அந்த குழந்தையை நீண்ட நாள் காத்திருப்புக்கு பின் பெற்றதாக கூறி, மகளின் இறப்பை தாங்கிக்கொள்ள இயலாமல் கதறித் துடித்தார்.தொடர்ந்து, பலரும் அவருக்கு ஆறுதல் கூறி சமாதானப்படுத்தினர். இதை அடுத்து, தமிழக முதல்வர் அறிவித்த ரூபாய் மூன்று லட்சத்திற்கான காசோலையை குழந்தையின் பெற்றோர்களிடம் பொன்முடி வழங்கினார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, பள்ளியில் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிந்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.தமிழகம் முழுவதும் உள்ள தனியார் மற்றும் அரசு உள்ளிட்ட அனைத்து பள்ளிகளிலும் அரசு தரப்பில் உரிய ஆய்வு நடத்தி, இதுபோன்று ஒரு குழந்தை மீண்டும் உயிரிழக்காதவாறு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் பொன்முடி உறுதி அளித்தார்
இதையும் படிங்க: அடிப்படை கொள்கை மீறி திமுகவுடன் 8 ஆண்டுகள் கூட்டணி...மாநில மாநாட்டில் கே.பாலகிருஷ்ணன் ஒப்புதல்...தொண்டர்கள் சரமாரி கேள்வி...