தற்போது இந்தியாவில் ஐபிஎல் போட்டி நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கிய இந்த போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைட்சர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகிறது. இதனிடையே ஆஸ்திரெலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 3க்கு 1 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது.

அதற்கு முன்பு நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் இந்திய அணி 3க்கு பூஜ்யம் என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. இதன் காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்திய அணியால் தகுதி பெற முடியாமல் போனது. ஆனால் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் தோல்விகளுக்கு நடவடிக்கை எடுக்கும் வகையில், பயிற்சியாளர்கள் குழு மீது நடவடிக்கை எடுக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
இதையும் படிங்க: ஒருநாள் தொடரில் இந்த வீரர்களுக்கு வாய்ப்பு இல்லை.. பிசிசிஐ அதிரடி முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி!!

டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கம்பீர் கொண்டு வரப்பட்டார். அப்போது கம்பீர் தரப்பில் பவுலிங் பயிற்சியாளராக மோர்னே மோர்க்கல், துணைப் பயிற்சியாளர்களாக அபிஷேக் நாயர் மற்றும் ரியான் டென்டஸ்காட்டே ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். அதேபோல் ஃபீல்டிங் பயிற்சியாளராக டி திலீப் தொடர்வதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி அடுத்தடுத்து தோல்வியை சந்திப்பதால், பிசிசிஐ உடனடியாக நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பிசிசிஐ தரப்பில் துணைப் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் 3 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய அணியின் பயணித்து வரும் நிர்வாகிகளையும் வெளியேற்ற நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஃபீல்டிங் பயிற்சியாளர் டி திலீப் மற்றும் ட்ரெய்னர் சோஹம் ஆகியோரும் நீக்கப்பட உள்ளனர்.
இதையும் படிங்க: ஐபிஎல் டி20 திருவிழா இன்று ஆரம்பம்... பிசிசிஐ அறிவித்த 4 புதிய விதிகள் என்ன..?