×
 

நள்ளிரவில் போன் போட்ட ரோஹித்.. அணிக்கு வெளியே சென்ற கோலி... உண்மையை உடைத்த ஸ்ரேயாஸ் ஐயர்..!

நாக்பூரில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் தனக்கு எப்படி வாய்ப்பு கிடைத்தது என்பது பற்றி ஸ்ரேயாஸ் ஐயர் கூறியுள்ளது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகியுள்ளது.

இந்தியா- இங்கிலாந்து இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி நாக்பூரில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் தொடரில் 1 - 0 என்கிற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் இலக்கைத் துரத்திய இந்திய அணியில் சுப்மன் கில் 87 ரன், ஸ்ரேயாஸ் ஐயர் 59 ரன், அக்சர் படேல் 52 ரன் அடித்தது அணியின் வெற்றிக்கு உதவினர். சுப்மன் கில்லுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. 

என்றாலும் ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா, கே.எல். ராகுல் ஆகியோர் சொற்ப ரன்களின் ஆட்டமிழந்த நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் 30 பந்துகளில் அரைசதம் அடித்தது அணியின் வெற்றியை எளிதாக்கியது. இந்நிலையில் போட்டி முடிந்த பிறகு ஸ்ரேயாஸ் ஐயர் அளித்துள்ள பேட்டி தற்போது கிரிக்கெட் ரசிகர்களை அசை போட வைத்துள்ளது. இப்போட்டிக்கு முன்பாக நட்சத்திர வீரர் விராட் கோலி காயமடைந்ததால்தான் தனக்கு வாய்ப்பு கிடைத்தது என்று உண்மையை  ஸ்ரேயாஸ் ஐயர் கூறினார்.



இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "இந்த முதல் போட்டிக்கான ஆடும் லெவனில் எனக்கு இடமில்லை என்று கூறப்பட்டது. அதனால் போட்டிக்கு முந்தைய நாள் இரவு நான் ஜாலியாக படம் பார்த்துக் கொண்டிருந்தேன். நீண்ட நேரம் சினிமா பார்க்கலாம் என்று நினைத்திருந்தேன். அப்போதுதான் கேப்டன் ரோஹித்திடமிருந்து எனக்கு போன் வந்தது. விராட் கோலிக்கு கால் முட்டியில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. அதனால் முதல் போட்டியில் நீங்கள் களம் இறங்க வேண்டியிருக்கும். எனவே தயாராக இருங்கள் என்று கூறினார். அதன் பிறகுதான் படம் பார்ப்பதை நிறுத்தி விட்டு தூங்க போனேன்' என்று ஸ்ரேயாஷ் தெரிவித்துள்ளார்.

முதல் போட்டியில் ஸ்ரேயாஸ் அரை சதம் அடித்ததால், இரண்டாவது போட்டியிலும் அவரை அணியில் சேர்க்க வேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்தியிருக்கிறார். ஆனால், தற்போது சரியான ஃபார்மில் இல்லாத விராட் கோலி அணிக்கும் திரும்பும்பட்சத்தில், யாருடைய இடம் காலியாகும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விவாதிக்கத் தொடங்கியிருக்கின்றனர். இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் சரியாக விளையாடதவர்களை ஓரங்கட்டிவிட்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஃபார்மில் உள்ள வீரர்களைச் சேர்க்க வேண்டும் என்று ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். என்ன நடக்கும் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

இதையும் படிங்க: முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி... நாக்பூரில் இந்திய அணியிடம் இங்கிலாந்து சரண்டர்.!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share