கோலி என்ன கிரிக்கெட்டின் தேவதூதரா..? சொதப்பல் மன்னன்… போலி பில்ட் அப்களின் அண்ணன்..! தாறுமாறு விமர்சனம்..!
ஏம்பா...ஏன் அவரைபோய் இப்படி..? உனக்கும், விராட் கோலிக்கும் என்ன வாய்க்கால் தகராறா..? அட அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லீங்க.. 'வாய்ப்பு' தகராறுதான்.
'அப்போ அப்படி இருந்த .. இப்போவும் அப்படியா இருக்கே..? என வடிவேலு மாடுலேஷானில் விராட் கோலியின் ஃபார்மை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள் கிரிக்கெட் விமர்சகர்கள்...
''உள்ளூரில் ஓணான் பிடிக்காதவன், உடையார்பாளையம் போய் உடும்பு பிடிப்பான்" என்பது இப்போது விராட்கோலிக்கு மிகக்கச்சிதமாக பொருந்தும்… கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு வீரர் உள்நாட்டுக் கிரிக்கெட்டை ஆடுகிறார். 2019-க்குப் பிறகே கடுமையாகச் சொதப்பி வரும் விராட் கோலி ரஞ்சி டிராபியில் இன்று டெல்லி அணிக்காக ரயில்வே அணிக்கு எதிராகக் களமிறங்கினார் என்றவுடன் கொடுக்கப்படும் பில்ட்-அப் ஒரு கட்டத்துக்கு மேல் அருவருக்கத்தக்கதாக மாறிவிடுகிறது. கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக விராட் கோலி டெஸ்ட் அணியில் ஒரு சுமையாகவே இருந்து வருகிறார். அவர் அவுட் ஆகும் விதங்களிலும் எந்த வித மாற்றமும் ஏற்படவில்லை.
அவரது அணுகுமுறையிலும் எந்த ஒரு மாற்றமும் ஏற்படவில்லை. ஆனால் அவர் உள்நாட்டுக் கிரிக்கெட்டில் ஆடுகிறார் என்றவுடன் ஏதோ 13 ஆண்டுகளுக்குப் பிறகு திருவிழா நடக்கிறது என்று சில கிராமிய தமிழ்ப்படங்களில் கொடுப்பார்களே ஒரு பில்ட் அப். அது போல் விராட் கோலிக்குக் கொடுத்து வருகின்றனர்.உண்மையில் கோலி என்ன ஆடிவிட்டார் என்பது அவரது டெஸ்ட் ஸ்கோர்களை எடுத்துப் பார்த்தாலே கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையா? என்பது போல் வெட்டவெளிச்சமாகவே இருக்கும்.
இதையும் படிங்க: ரோஹித், கோலிக்கு குட்டு வைத்த பிசிசிஐ? ரஞ்சிப் போட்டிகளில் சீனியர் வீரர்கள் விளையாட உத்தரவு
வங்கதேசத்துக்கு எதிராக 2019 நவம்பரில் அவர் ஈடன் கார்டனில் 136 ரன்களை எடுத்தார். அதன் பிறகு இந்த 5 ஆண்டுகளில் 2023-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அகமதாபாத்தில் மட்டைப் பிட்சில் 186 ரன்களை அதிமந்த கதியில் எடுத்தார். அதன் பிறகு பெர்த்தில் இந்திய அணி 300 ரன்களுக்கும் மேல் எடுத்து நல்ல நிலையில் இருந்த போது மேலும் வலுப்படுத்தும் விதமாக 100 ரன்கள் என்று சதம் கண்டார். உடனே கிங் இஸ் பேக், என்றெல்லாம் அவரது பி.ஆர்.கள் பயங்கரமாக பில்ட் அப் கொடுத்தனர்.
ஆனால் அடுத்தடுத்து என்ன நடந்தது என்பது நம் எல்லோருக்கும் கண் கூடு. அவுட் சைட் த ஆஃப் ஸ்டம்ப் என்ற பந்து தேவதையை மட்டையினால் தீண்டி செமயாக சொதப்பி ஆட்டமிழந்தார். வங்கதேசத்துக்கு எதிராக எடுத்த 2019-ம் ஆண்டின் 136 ரன்களுக்குப் பிறகு 2021 வரை ஐந்தே ஐந்து அரைசதங்கள். 2 ஆண்டுகளில் சதங்களே இல்லை. பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அகமதாபாத்தில் 186, அதன் பிறகு பார்த்தோமானால் தொடர்ச்சியாக சொதப்பலாக ஆடி குறைந்த ஸ்கோர்களில் ஆட்டமிழந்துள்ளார்.
இவருக்கு இந்த 5 ஆண்டுகளில் கொடுத்த வாய்ப்பை கொஞ்சம் நிறுத்தி வைத்து வேறு வீரருக்கு வாய்ப்பளித்திருந்தால் உண்மையில் இன்று விராட் கோலி போல இன்னொரு வீரர் உருவாகியிருப்பார் என்பதே உண்மை. ஆனால் இவரே நீடிக்கிறார். பி.ஆர் வேலைகளை கன கச்சிதமாகச் செய்து மைய நீரோட்ட ஊடகங்களைத் தன்னைப்பற்றியே பேசச் செய்கிறார், எழுதச் செய்கிறார். இப்போது ரிட்டையர்மெண்ட் அறிவிக்க வேண்டிய சொதப்பல்களுக்குப் பிறகு உள்நாட்டுக் கிரிக்கெட்டில் ஆடுகிறார். இவரது இத்தகைய போக்கை விமர்சிப்பார் யாருமில்லை. மாறாக பில்ட்-அப்கள்தான் அதிகமாகி வருகிறது.
அதுவும் இன்று டெல்லி-ரயில்வேஸ் அணி போட்டியில் ரயில்வே பேட்டர்களை, டெல்லி பவுலர்களை, டெல்லியின் இளம் கேப்டன் ஆயுஷ் பதோனியைக் காட்டாமல் இவர் நகம் கடித்துத் துப்புவதையும், தலையைச் சொறிவதையும் தொப்பியைக் கழற்றுவதையும், ரசிகர்கள் அங்கு காட்டும் கோலி புகழ் பதாகைகளையும் தொலைக்காட்சி நிறுவனம் நேரலையில் அதிகம் காட்டி நாயக வழிப்பாட்டு பிம்பக் கட்டுமானம் செய்து வருகின்றனர். அதுவும் இவர் டெல்லி அணிக்காக வலைப்பயிற்சியில் ஆடி விட்டாராம். உடனே அதற்கு ஒரு பில்ட் அப், ஒரு வீடியோ வெளியீடு. கோலி தன் பேட்டிங்கை சரி செய்து கொண்டு விட்டதைப் போல ஒரு பில்ட்-அப். ஒரு தலைசிறந்த வீரருக்கு இவையெல்லாம் தேவையா? யாரை நம்பவைக்க இந்த ஏற்பாடு?
இதையெல்லாம் பார்க்கும் போது இந்திய டெஸ்ட் அணியில் இனி புதிய வீரர்கள் வர முடியுமா என்ற சந்தேகங்கள் எழுகின்றன. இவர் மட்டுமல்ல ரோஹித் சர்மாவுக்கும் இதே பில்ட் அப்கள் கொடுக்கப்படுகின்றன. இந்திய அணி என்பது இவர்களுக்கும் இவர்களது ஸ்பான்சர்களுக்கும் பட்டயம் அளிக்கப்பட்ட ஒன்றா? பிசிசிஐ ஊடகங்களை பார்ட்னர்கள் என்று அழைப்பதால் ஊடகங்களும் சிறந்த பார்ட்னர்களாகச் செயல்பட்டு பி.ஆர். வேலைகளைக் கனக் கச்சிதமாகச் செய்து வருகின்றனர்.
ஏம்பா...ஏன் அவரைபோய் இப்படி..? உனக்கும், விராட் கோலிக்கும் என்ன வாய்க்கால் தகராறா..? அட அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லீங்க.. 'வாய்ப்பு'தகராறுதான். அவர் ஆட்டத்த அப்போ ரொம்ப பிடிக்கும்... இப்போ கொஞ்சம்கூட பிடிக்கல.. அந்த வருத்தம்தான் ஆவ்வ்வ்வ்ங்ங்...
இதையும் படிங்க: ’அவரைப்போல நான் திறமையாளர்களை தடுப்பதில்லை...’ரோஹித் சர்மாவை போட்டுத் தாக்கிய சூர்யகுமார் யாதவ்..!