×
 

சென்னை சேப்பாக்கத்தில் இன்று இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி.. இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியாவின் ஆதிக்கம் தொடருமா.?

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரண்டாவது டி20 போட்டி நடைபெறுகிறது.

இந்தியாவுக்கு எதிராக 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து விளையாடி வருகிறது.  கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இதன் மூலம் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இரண்டாவது போட்டி இரு அணிகளுக்கும் இடையே இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகின்றன.

முதல் போட்டியில் இங்கிலாந்தை ஆதிக்கம் செலுத்தவிடாமல் இந்திய வீரர்கள் கட்டுப்படுத்தி வெற்றி பெற்றனர். பந்து வீச்சில் வருண் சக்கரவர்த்தி, அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் அபாரமாக செயல்பட்டனர்.  பேட்டிங்கில் அபிஷேக் சர்மா 232.35 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடி மிரட்டினார். இதனால் இந்திய அணி 43 பந்துகளை மிச்சம் வைத்து வெற்றி பெற்றது. சஞ்சு சாம்சன், திலக் வர்மா ஆகியோரும் அணியின் வெற்றிக்குப் பங்களிப்பு வழங்கினர்.
இன்றைய போட்டியில் இவர்களிடமிருந்து மீண்டும் இதே போன்ற திறமை வெளிப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


கடந்த போட்டியில் ஏமாற்றம் அளித்த கேப்டன் சூர்யகுமார் யாதவ், ஜொலித்தால், இந்திய அணி சென்னை ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் வாய்ப்புண்டு. கடந்த காலங்களில் சேப்பாக்கம் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்துள்ளது. இதனால் இம்முறையும் அவ்வாறே செயல்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வருண் சக்கரவர்த்தி, அக்சர் படேல், ரவி பிஷ்னோய் கூட்டணி மீண்டும் ஒரு முறை இங்கிலாந்து அணியின் பேட்டிங் வரிசைக்கு சவால் அளிக்கக்கூடும். வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இன்றைய போட்டியிலும் களமிறங்க மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து அணியை பொறுத்தவரையில் முதல் ஆட்டத்தில் கேப்டன் ஜாஸ் பட்லர் மட்டுமே சிறப்பாக செயல்பட்டார். முதல் போட்டி முடிவடைந்ததும் இந்திய சுழற்பந்து வீச்சாளர்களுக்கு அழுத்தம் கொடுத்து ரன்கள் சேர்க்கும் வழியை தங்களது அணியின் பேட்ஸ்மேன்கள் தனிப்பட்ட முறையில் கண்டறிய வேண்டும் என கூறியிருந்தார். இதனால் இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து அணி தனது கள வியூகங்களை மாற்றி அமைக்கும் என எதிர்பார்க்கலாம்.

இதையும் படிங்க: பாகிஸ்தான் செல்கிறாரா ரோஹித் சர்மா? ஐசிசி போட்டோஷீட் நிகழ்ச்சியை புறக்கணிக்கிறதா பிசிசிஐ?


பில் சால்ட், பென் டக்கெட் ஜோடி தொடக்க வரிசையில் வலுவான அடித்தளம் அமைத்து கொடுப்பதில் முனைப்பு காட்டக்கூடும். பந்து வீச்சில் ஜோப்ரா ஆர்ச்சர் மட்டுமே சிறப்பாக செயல்பட்டிருந்தார். மற்ற எந்த வீரர்களும் அபிஷேக் சர்மாவின் அதிரடியில் இருந்து தப்ப முடியாமல் போனது. ஆதில் ரஷீத், லியாம் லிவிங்ஸ்டன் ஆகியோர் சுழற்பந்து வீச்சில் கூடுதல் பங்களிப்பை வழங்க தீவிரம் காட்டக்கூடும். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 2 டி20 சர்வதேச போட்டிகள் மட்டுமே நடைபெற்றுள்ளன. இதில் இந்திய அணி ஒருமுறை வென்றுள்ளது.

இதையும் படிங்க: கிரிக்கெட் விளையாடுவதை என் மகன் நிறுத்தட்டும்.. கடும் விரக்தியில் சஞ்சு சாம்சனின் தந்தை

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share