×
 

அதிரடி அபிஷேக், சக்ரவியூகம் அமைத்த சக்ரவர்த்தி: இங்கிலாந்து அணியை துவம்சம் செய்த இந்திய அணி

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த முதல் டி20 ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி.

முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 132 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 133 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 43 பந்துகள் மீதமிருக்கையில் 3 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் சேர்த்து வென்றது.


அதிக பந்துகள் மீதம் இங்கிலாந்து அணிக்கு எதிராக அதிகமான பந்துகளை மீதம் வைத்து இந்திய அணி சேஸ் செய்துள்ளது. இதற்கு முன் 2012ம் ஆண்டு புனேயில் நடந்த டி20 போட்டியில் 13 பந்துகள் மீதமிருக்கையில் இந்திய அணி சேஸ் செய்திருந்தது, இந்த ஆட்டத்தில் 43 பந்துகள் மீதமிருக்கையில் சேஸ் செய்துள்ளது.
இந்திய அணியின் வெற்றிக்கு பேட்டிங்கில் அபிஷேக் சர்மா(79), பந்துவீச்சில் வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப், ஹர்திக், அக்ஸர் படேல் முக்கியக் காரணமாகினர். அதிலும், பட்டைய கிளப்பிய வருண் சக்ரவர்த்தி 4 ஓவர்கள் வீசிய 23 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார். 


இந்த வெற்றி மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது.
டாஸ் வென்றது உத்வேகம் வெற்றிக்குப்பின் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் “ டாஸ் வென்றபின் எங்களுக்கு கிடைத்த உத்வேகம் தளத்தை அமைத்துக் கொடுத்தது. பந்துவீச்சாளர்கள், பேட்டர்கள் என தனித்தனிதிட்டம் இருந்தது, அதை சிறப்பாகச் செயல்படுத்தினார்கள். தென் ஆப்பிரிக்காவில் நாங்கள் செய்த அதே விஷயங்களை இங்கும் மாற்றவில்லை. பீல்டிங்கில் மட்டும் அதிக கவனம் செலுத்தவேண்டும்” எனத் தெரிவித்தார்

இதையும் படிங்க: சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்: பாகிஸ்தானின் நிபந்தனைக்கு பணிந்த இந்திய அணி..!


அர்ஷ்தீப் சிங் மைல்கல் அர்ஷ்தீப் சிங் பவர்ப்ளே ஓவருக்குள்ளாகவே 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்து அணியை சிக்கலில் தள்ளினார்.
அர்ஷ்தீப் 2வது விக்கெட்டை வீழ்த்தியபோது டி20 போட்டிகளில் 97 விக்கெட்டுகளைக் கைப்பற்றி, அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெற்று யஜூவேந்திர சஹல் சாதனையான 96 விக்கெட்டுகளை முறியடித்தார்.


வருண் சக்ரவர்த்தி மாயஜாலம்
நடுப்பகுதி ஓவர்களில் வருண் சக்ரவர்த்தி, அக்ஸர் படேல், ரவி பிஸ்னாய் ஆகிய 3 சுழற்பந்துவீச்சாளர்களும் சேர்ந்து ஆட்டத்தை தங்கள் கைக்குள் கொண்டு வந்தனர். அதிலும் வருண் சக்ரவர்த்தியின் பந்துவீச்சு ஸ்டெம்ப் டூ ஸ்டெம்ப் என்ற ரீதியில் இருந்ததால், இங்கிலாந்து பேட்டர்கள் சிறிய  தவறு செய்தாலும் விக்கெட்டை இழக்கநேரிடும் நிலை இருந்தது. 
சுழற்பந்துவீச்சில் அதிலும் கைமணிக்கட்டில் வீசப்படும் பந்துகளை ஆடுவதற்கு இங்கிலாந்து பேட்டர்கள் திணறுவார்கள் எனக் கூறப்பட்டது உண்மையானது. வருணின் பந்துவீச்சை எவ்வாறு விளையாடுவது, சரியான லென்த்தில் பந்தை பிக் செய்து ஷாட் அடிப்பது எனத் தெரியாமல் லிவிங்ஸ்டோன், ப்ரூக் இருவரும் ஒரே  ஓவரில் விக்கெட்டை இழந்தனர். 
24 பந்துகளை வீசியவரும் சக்ரவர்த்தி 14 டாட் பந்துகளை வீசினார், 23 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 


அபிஷேக் அதிரடி தொடக்கம்
சாம்ஸன், அபிஷேக் சர்மா இருவரும் அதிரடியான தொடக்கத்தை வழங்கினர். அட்கின்சன் வீசிய 2வது ஓவரில் 4 பவுண்டரிகள் ஒரு சிக்ஸர் என 22 ரன்களை சாம்ஸன் விளாசினார். ஆர்ச்சர் வீசிய 3வது ஓவரில் அபிஷேக் ஒரு சிக்ஸர், பவுண்டரி என 10 ரன்கள் சேர்த்தார். 


ஸ்கை டக்அவுட் ஆர்ச்சர் வீசிய 5வது ஓவரில் ஸ்லோ பாலில் கேட்ச் கொடுத்து சாம்ஸன் 22 ரன்களில் ஆட்டமிழந்தார்.  அடுத்துவந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ், வந்தவேகத்தில் பெரிய ஷாட்டுக்கு முயன்று விக்கெட் கீப்பர் சால்ட்டிடம் கேட்ச் கொடுத்து டக்அவுட்டில் வெளியேறினர். பட்லர் வீசிய 5வது ஓவரில் 2 விக்கெட்டுகள் வீழ்ந்தன.
மார்க் உட் வீசிய 6வது ஓவரை வெளுத்து வாங்கிய அபிஷேக் சர்மா 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என 18 ரன்கள் சேர்த்தார். பவர்ப்ளே முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 63 ரன்கள் சேர்த்திருந்தது. 
அதில் ரஷித் வீசிய 8-வது ஓவரை துவம்சம் செய்த அபிஷேக் சர்மா 2 சிக்ஸர்கள், பவுண்டரி என 16 ரன்கள் சேர்த்தார். ஓவர்டன் வீசிய 9-வது ஓவரில் சிக்ஸர் விளாசி 20 பந்துகளில் அரைசதத்தை அபிஷேக் எட்டினார். 10 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 100 ரன்களை எட்டியது.


அட்கின் வீசிய 11-வது ஓவரை குறிவைத்த அபிஷேக் சர்மா ஒரு சிக்ஸர் பவுண்டரியும், திலக் வர்மா ஒரு பவுண்டரியும் என 16 ரன்கள் விளாசினர். ரஷித் வீசிய 12 ஓவரில் சிக்ஸர் விளாசிய அபிஷேக் அதே ஓவரில் ப்ரூக்கிடம் கேட்ச் கொடுத்து 79 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில் 4 பவுண்டரி, 8சிக்ஸர்கள் அடங்கும்.
இரு கேட்ச் வாய்ப்புகள்
அபிஷேக் சர்மாவுக்கு நேற்றைய ஆட்டத்தில் மட்டும் இரு கேட்சுகளை இங்கிலாந்து வீரர்கள் தவறவிட்டனர். பெத்தல் ஒரு கேட்சையும், அதில் ரஷித் ஒரு கேட்ச் என இரு கேட்சுகளை அபிஷேக்கிற்கு தவறவிட்டதை அவர் சரியாகப் பயன்படுத்திக்கொண்டார்.
அதன்பின் ஹர்திக் பாண்டியா(3), திலக் வர்மா(19) ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து 12.5 ஓவர்களில் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். 


பஞ்சரான இங்கிலாந்து பேட்டிங்
பயிற்சியாளர் மெக்கலத்தின் பேஸ்பால் வியூகத்தால் இங்கிலாந்து பல அணிகளையும் மிரட்டி வந்ததால், இந்திய அணிக்கு எதிராகவும் அதிரடியாக பேட் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இங்கிலாந்து பேட்டிங் நேற்று சுழற்பந்துவீச்சுக்கு எதிராக பஞ்சரானது
பில் சால்ட், டக்கெட், ஹேரி ப்ரூக், லிவிங்ஸ்டோன், ஜேக்கப் பெத்தெல் என பெரிய பேட்டிங் பட்டாளமே இருந்தும் ஒருவரும் ஜொலிக்கவில்லை. கேப்டன் பட்லருக்கு ஐபிஎல் விளையாடிய அனுபவம் இருந்ததால் எளிதாக இந்தியப் பந்துவீச்சை கையாண்டு அரைசதம் அடித்து 68 ரன்களில் ஆட்டமிழந்தார். 


இங்கிலாந்து அணியில் அதிகபட்சமே பட்லர் அடித்த 68 ரன்களும், ப்ரூக் 17, ஆர்ச்சர் 12 ஆகியவைதான், இந்த 3 வீரர்களும்தான் இரட்டை இலக்கத்தில் ரன்கள் சேர்த்தனர்.  மற்ற பேட்டர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் சொற்பமாக ஆட்டமிழந்தனர்.

இதையும் படிங்க: ‘ஸ்கை’பால் vs பேஸ்பால்: உலக சாம்பியன் இந்திய அணியை உள்ளூரில் வெல்லுமா ....

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share