‘ஸ்கை’பால் vs பேஸ்பால்: உலக சாம்பியன் இந்திய அணியை உள்ளூரில் வெல்லுமா ....
இங்கிலாந்து கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு தொடங்கும் முதல் டி20 போட்டியில் உலக சாம்பியன் இந்திய அணியை எதிர்த்து விளையாடுகிறது இங்கிலாந்து அணி.
இந்திய அணியின் கேப்டன் ‘ஸ்கை’(SKYசூர்யகுமார் யாதவ்) பேட்டிங்கிற்கும், இங்கிலாந்தின் ‘பேஸ்பால்’(BAZBALL) அணுகுமுறைக்கும் இடையிலான விறுவிறுப்பான போட்டியாக இருக்கும்.
உள்நாட்டில் நியூசிலாந்திடம் டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ், பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரில் தோல்வி என தாயகம் திரும்பியுள்ள சீனியர் அணியைவிட முற்றிலும் மாறுபட்ட அணியாக, இளம் வீரர்கள் கொண்ட அணியாக களமிறங்குகிறது இந்திய அணி.
இந்திய அணி கடந்த 6 ஆண்டுகளாக உள்நாட்டில் எந்த டி20 தொடரிலும் தோல்வி அடையாமல் வெற்றி நடை போடுகிறது, கடைசியாக 2019ம் ஆண்டு பிப்ரவரியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டி20 தொடரை இந்திய அணி இழந்தது, அதன்பின் நடந்த 16 டி20 தொடர்களில் 14 தொடர்களில் வென்றுள்ளது, 2 தொடர்களில் டிரா செய்துள்ளதே தவிர தோற்கவில்லை.
இந்திய அணியின் பயிற்சியாளர் கெளதம் கம்பீர், இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பிரெண்டம் மெக்கலம் இருவருமே அதிரடிக்கு பெயரெடுத்தவர்கள், களத்தில் ஆக்ரோஷமான அணுகுமுறையை செயல்படுத்தக்கூடியவர்கள். டெஸ்ட் போட்டியில்கூட பேஸ்பால் அணுகுமுறையை மெக்கலம் செயல்படுத்தி, டி20 போட்டிக்கும் பயிற்சியாளராகினார்.
கம்பீர், மெக்கலம் இருவருமே கிரிக்கெட் விளையாடிய காலத்தில் தொடக்க வீரர்களாக களமிறங்கியவர்கள். ஐபிஎல் தொடரில் வெவ்வேறு காலகட்டங்களில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இருவருமே கேப்டனாகவும் பயிற்சியாளராகவும் செயல்பட்டவர்கள். இருவருமே இருவரின் ஆக்ரோஷமான ஆட்டத்தையும், அணுகுமுறையையும், போட்டி என வந்துவிட்டால் எவ்வாறு செயல்படுவது, எதிரணி எவ்வாறு செயல்படும் என்பதை ஒருவொருக்கொருவர் நன்கு அறிந்தவர்கள்.
2022ம் ஆண்டுக்குப்பின் பேஸ்பால் அணுகுமுறையை இங்கிலாந்து அணி கையில் எடுத்தபோதிலும், அந்த அணியின் அதிரடியான பேட்டிங், வியூகங்கள் சிறப்பாக இருந்தாலும், ஐசிசி தொடர்பான எந்த பெரிய போட்டியிலும் அந்த அணியால் ஜொலிக்க முடியாமல் இருந்துவருகிறது. இங்கிலாந்து அணிக்கு டி20 பயிற்சியாளராகிய பின் மெக்கலம் தலைமையில் முதல்முறையாக இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கிறார். அதேசமயம், உள்நாட்டில் டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ், ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடர் தோல்வியை மறைக்கவும், மறக்கவும் பயிற்சியாளர் கம்பீர் இந்தத் தொடரை வென்று கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இங்கிலாந்து அணியில் இளம் வீரர்கள் பலர் புதிதாக கொண்டுவரப்பட்டுள்ளனர். அதில் இடதுகை பேட்டர் மற்றும் சுழற்பந்துவீச்சாளர் ஜேக்கப் பெத்தெல் பிக்பாஷ் லீக்கில் மெல்போர்ன்ஸ் ரெனகேட்ஸ் அணிக்காக விளையாடி அனைவரின் கவனத்தையும் பந்துவீச்சாலும், பேட்டிங்கிலும் பெத்தெல் ஈர்த்தார், பந்துவீச்சு ஆல்ரவுண்டராக வலம் வரும் பெத்தெல், இங்கிலாந்து அணிக்கு நடுவரிசையில் பக்கபலமாக திகழ்வார் எனத் தெரிகிறது.
இதையும் படிங்க: கவுதம் கம்பீர் வேஸ்ட்.. விவிஎஸ் லட்சுமணனை பயிற்சியாளர் ஆக்குங்கள்.. மாஜி வீரர் தடாலடி!
வேகப்பந்துவீச்சில் ஜோப்ரா ஆர்ச்சர், மார்க் உட் இரு வேகப்பந்துவீச்சாளர்கள் தவிர்த்து அட்கின்ஸன், ஜேமி ஓவர்டன் இருப்பது இந்திய அணிக்கு சவாலாக இருக்கும். சுழற்பந்துவீச்சில் லிவிங்ஸ்டோன், அதில் ரஷித், பெத்தெல் ஆகிய 3 சுழற்பந்துவீச்சாளர்களுடன் இங்கிலாந்து அணி களமிறங்குகிறது. பேட்டிங்கில் பில் சால்ட், பென் டக்கெட், ஹேரி ப்ரூக், பட்லர், லிவிங்ஸ்டோன் இருப்பது அந்த அணிக்கு மிகப்பெரிய பலம். இந்த 4 பேட்டர்களுமே இந்தியாவில் ஐபிஎல் தொடரில் விளையாடிய அனுபவம் இருப்பதால், கொல்கத்தா ஈடன்கார்டன் ஆடுகளம் குறித்து நன்கு அறிந்தவர்கள். இந்திய அணிக்கு பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் வலுவான சவாலை அளிக்கக் கூடிய அணியாகவே இங்கிலாந்து அணி களமிறங்குகிறது.
இந்திய அணியைப் பொருத்தவரை ப்ளேயிங் லெவனை எவ்வாறு தீர்மானிக்கப் போகிறது என்பதில்தான் வெற்றி அடங்கியுள்ளது. இந்திய அணியில் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி காயம் காரணமாக கடந்த 14 மாதங்களுக்குப்பின் மீண்டும் அணியில் இடம் பெற்றுள்ளது மிகப்பெரிய பலமாகும். 2023 உலகக் கோப்பைத் தொடருக்குப்பின் ஷமி சர்வதேச போட்டியில் விளையாடாமல் இப்போது பங்கேற்கிறார்.
யாஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த், சுப்மான் கில் இல்லாமல் இந்திய அணி டி20 தொடரில் விளையாடுகிறது. தொடக்க வீரராக அபிஷேக் சர்மாவுடன் சேர்ந்து சாம்ஸன் களமிறங்கலாம். அதன்பின் ஒன்டவுனில் சூர்யகுமார் யாதவ், 2வது வரிசையில் திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங் என வீரர்கள் களமிறங்கலாம். வேகப்பந்துவீச்சில் முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங் தவிர்த்து ஹர்திக் பாண்டியா உள்ளதால், 3வது பந்துவீச்சாளர் தேவைப்படாது அதனால், நிதிஷ்குமார் ரெட்டிக்கு வாய்ப்புக் கிடைப்பது சந்தேகம்தான்.
சுழற்பந்துவீச்சில் வருண் சக்ரவர்த்தி, துணைக் கேப்டன் அக்ஸர் படேல் தவிர்த்து ஸ்பெசலிஸ்ட் சுழற்பந்துவீச்சாளராக ரவி பிஸ்னாய் அல்லது ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் களமிறங்குவார்களா என்பதில் குழப்பம் நீடிக்கிறது. ஏனென்றால் இங்கிலாந்து பேட்டர்கள் சுழற்பந்துவீச்சை கையாள்வதில் பலவீனமானவர்கள் என்பதால், சுந்தர், பிஸ்னாய் இருவரில் யாருக்கு வாய்ப்புக் கிடைக்கும் என்பது சந்தேகம்தான்
ஸ்கை, ரிங்கு சிங், திலக்வர்மா, ஹர்திக் பாண்டியா ஆகியோரின் ஆட்டம் நடுவரிசைக்கு முதுகெலும்பாக இருக்கும். அக்ஸர் படேலுக்குஅடுத்தார்போல் 8-வது வரிசையில் இருந்து பேட்டர்கள் யாரும் இல்லை என்பது பலவீனம். இதை தவிர்க்க வாஷிங்டன் சுந்தர் அல்லது நிதிஷ் ரெட்டி தேர்ந்தெடுக்கப்படலாம்.
கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானம் மிகவும் சிறியது. பவுண்டரி எல்லைகள் மிகவும் அருகே இருக்கும். இந்த மைதானத்தின் ஆடுகளம் பேட்டர்களுக்கு சொர்க்கபுரி, பந்து பேட்டர்களை நோக்கி நன்கு எழும்பி வரும் என்பதால் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட் செய்து பெரிய ஸ்கோரை அடித்தால் தப்பிக்கலாம்.
ஏனென்றால், இரவுநேர பனிப்பொழிவு ஆட்டத்தைத் தீர்மானிக்கும் முக்கியக் காரணியாக இருக்கும். ஆதலால், ஆட்டத்தில் டாஸ் முக்கியப் பங்கு வகிக்கும்.
இதுவரை இந்தியா- இங்கிலாந்து
இந்தியா, இங்கிலாந்து அணிகள் இதுவரை 24 டி20 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் இந்திய அணி 13 போட்டிகளிலும், இங்கிலாந்து 11 போட்டிகளிலும் வென்றுள்ளன.
2022 டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியஅணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வீழ்த்தியது. அதற்கு பதிலடியாக கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பைத் தொடரில் அரையிறுதியில் இங்கிலாந்து அணியை 68 ரன்களில் தோற்கடித்து பழிதீர்த்தது இந்திய அணி.
இந்திய மண்ணில் இங்கிலாந்து அணி 17 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது, அதில் 9 போட்டிகளில் வென்று, 8 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது.
இங்கிலாந்து அணி(ப்ளேயிங் லெவன்) பில்சால்ட்(விக்கெட் கீப்பர்), பென் டக்கெட், ஜாஸ் பட்லர்(கேப்டன்), ஹேரி ப்ரூக், லியாம் லிவிங்ஸ்டன், ஜேக்கப் பெத்தெல், ஜேமி ஓவர்டன், கஸ் அட்கின்சன், ஜோப்ரா ஆர்ச்சர், அதில் ரஷீத், மார்க் உட் இந்திய அணி(உத்தேசம்) சஞ்சு சாம்ஸன்(விக்கெட் கீப்பர்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங், அக்ஸர் படேல், நிதிஷ் குமார் ரெட்டி அல்லது வாஷிங்டன் சுந்தர் அல்லது ரவி பிஸ்னாய், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி
இதையும் படிங்க: அதான் நான் இருக்கேன்ல்ல.. இந்திய அணியில் இடம்பிடிக்க முட்டிமோதும் ஸ்ரேயாஸ் ஐயர்!