சிஎஸ்கே தோல்விக்கு இதுதான் காரணம்... மௌனம் கலைத்த பயிற்சியாளர் பிளெமிங்!!
சிஎஸ்கே அணியின் தோல்விக்கான காரணம் குறித்து அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் விளக்கம் அளித்துள்ளார்.
2025 ஐபிஎல் தொடரின் 8 ஆவது லீக் போட்டியில் நேற்று ஆர்சிபி அணியை எதிர்த்து சிஎஸ்கே அணி விளையாடியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்களை குவித்தது. இதை அடுத்து 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சிஎஸ்கே அணி, தொடகத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பேட்ஸ்மேன்களும் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் 50 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வியை தழுவியது.
இந்த நிலையில் சிஎஸ்கே அணி தோல்வியடைந்ததற்கான காரணம் குறித்து அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார். இதுக்குறித்து அவர் பேசுகையில், சேப்பாக்கம் மைதானத்தில் எங்களுக்கு எந்த விதமான சொந்த மைதான சாதகங்களும் இல்லை. நாங்கள் சேப்பாக்கத்தில் விளையாடாமல் வேறு மைதானத்தை எங்கள் சொந்த மைதானமாக வைத்து ஆடிய போதும் கோப்பை வென்று இருக்கிறோம். நான் உண்மையை சொல்ல வேண்டும் என்றால் எங்களால் சேப்பாக்கம் மைதானத்தின் பிட்ச்சை சரியாக கணிக்க முடியவில்லை.
இதையும் படிங்க: வார்த்தையை விட்ட பத்திரிகையாளர்… கடுப்பான சிஎஸ்கே அணி பயிற்சியாளர் பிளெமிங்!!
கடந்த இரண்டு ஆண்டுகளாகவே எங்களால் சேப்பாக்கம் பிட்ச்சை புரிந்து கொள்ள முடியவில்லை. எனவே இது புதிய பிரச்சனை அல்ல. நாங்கள் ஒவ்வொரு நாளும் இங்கு வந்து எந்த அளவுக்கு பிட்ச் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் என புரிந்து கொள்ள முயற்சி செய்கிறோம். சில சமயம் எங்களால் அதை புரிந்து கொள்ள முடிவதில்லை. இது பழைய சேப்பாக்கம் இல்லை. நான்கு சுழற்பந்து வீச்சாளர்களை அழைத்து சென்று ஆடுவதற்கு. இங்கு இருக்கும் ஒவ்வொரு பிட்ச்சும் வெவ்வேறாக உள்ளது.
அதை புரிந்து கொள்ள நாங்கள் கடின முயற்சியை செலுத்தி வருகிறோம். சிஎஸ்கே அணியில் அதிரடி பேட்டிங் வரிசை இல்லை என்கிறார்கள். ஆனால், எங்கள் அணியில் அதிரடி பேட்டிங் வரிசை உள்ளது. இது போன்ற கேள்விகளை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. நாங்கள் முதல் பந்தில் இருந்து அடித்து ஆடவில்லை என்பதற்காகவும், எங்கள் பக்கம் அதிர்ஷ்டம் இல்லை என்பதற்காகவும் இப்படி சொல்ல முடியாது. இறுதியில் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம். இறுதியில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்று பார்க்கலாம். நாங்கள் நேர்மறையான கிரிக்கெட்டை ஆடுகிறோம். அதற்காக எங்களை ஒதுக்கி வைக்க முடியாது என்றார்.
இதையும் படிங்க: சிஎஸ்கே-வை சொந்த மண்ணில் வைத்து வீழ்த்தியது ஆர்.சி.பி... ரசிகர்களுக்கு ஆறுதலான தோனியின் ஆட்டம்!!