×
 

ராஜஸ்தான் அணியை வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ்.. 58 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது.

2025 ஐபிஎல் சீசனில் இன்றைய போட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்றது. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக சாய் சுதர்சன் மற்றும் கில் களமிறங்கினர்.

ஆனால் ஜோப்ரா ஆர்ச்சரின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறினர். கில் 2 ரன்களில் ஆட்டம் இழக்க, பட்லர், சாய் சுதர்சன் ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்க போராடினர். ஜாஸ் பட்லர் 5 பவுண்டரிகளை அடித்து விளாசி 25 பந்துகளில் 36 ரன்களை குவித்தார்.

ஒரு முனையில் விக்கெட்டுகள் வரிசையாக விழுந்தாலும் மறுமுனையில் சாய் சுதர்சன் நிதானமாக ஆடி ரன்களை குவித்தார். அப்போது களமிறங்கிய ஷாருக்கான் 4 பவுண்டரி, 2 சிக்சர் என 20 பந்தில் 36 ரன்கள் சேர்த்தார். ரூத்தர்போர்டு ஏழு ரன்களில் வெளியேற ரஷித் கான் நான்கு பந்துகளில் 12 ரன்களும் ராகுல் திவாத்தியா 12 பந்துகளில் 24 ரன்களும் சேர்த்தார்.

சாய் சுதர்சன் அதிகபட்சமாக 53 பந்துகளில் 82 ரன்கள் எடுத்தார். இதில் 8 பவுண்டரிகளும் 4 சிக்ஸர்களும் அடங்கும். இதன் மூலம் குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் குவித்தது. இதை அடுத்து 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்கியது.

இதையும் படிங்க: மோசமாக ஆடிய CSK & MI... கடுமையாக விமர்சித்த பாக். வேகப்பந்து வீச்சாளர்!!

குஜராத் டைட்டன்ஸ் அணியின் அபாரமான பந்துவீச்சால் 8 விக்கெட் முடிவதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 6 ரன்களிலும் நிதிஷ் ராணா 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய ரியான் பராக் 26 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். மறுபுறம் துருவ் ஜூரல் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். சஞ்சு சாம்சன் நிதானமாக ஆடி அணிக்காக 4 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் அடித்து விளாசி 28 பந்துகளில் 41 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். சுபம் தூபே 1 ரன்னில் ஆட்டமிழந்தார். ஜோஃப்ரா ஆர்ச்சர் 4 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார்.

ஒரு புறம் வரிசையாக விக்கெட் விழுந்தாலும் மறுபுறம் ஷிம்ரான் ஹெட்மெயர் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 29 பந்துகளில் அரை சதம் விளாசினார். இவர் 32 பந்துகளில் 4 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் அடித்து 52 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மகேஷ் தீக்ஷனா மற்றும் துஷார் தேஷ்பாண்டே இலக்கை எட்ட தடுமாறினர். அப்போது துஷார் தேஷ்பாண்டே அடித்த பந்தை ரஷித் கான் கேட்ச் பிடித்தார்.

இதனால் துஷார் தேஷ்பாண்டே 3 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியாக சந்தீப் சர்மா மற்றும் மகேஷ் தீக்ஷனா கூட்டணி விளையாடிய நிலையில் 10வது விக்கெட்டாக மகேஷ் தீக்ஷனா விக்கெட் விழுந்தது. இதனால் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 159 ரன்கள் மட்டுமே குவித்தது. இதனால் குஜராத் டைட்டன்ஸ் அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  

இதையும் படிங்க: மீண்டும் தோல்வியை தழுவிய சி.எஸ்.கே… அபாரமாக பீல்டிங் செய்த பஞ்சாப் அணி!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share