×
 

நியூசிலாந்தை பழி தீர்க்கும் கணக்கு பாக்கி இருக்கு..? 25 ஆண்டு கால ஏக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்குமா இந்தியா?

இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஐசிசி நாக் அவுட் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்திய நியூசிலாந்து அணிக்கு பதிலடி கிடைக்குமா என்கிற எதிர்பார்ப்பு ஐசிசி சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஏற்பட்டிருக்கிறது.

ஐசிசி சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்தியாவும் நியூசிலாந்தும் தகுதி பெற்றுள்ளன. இறுதிப் போட்டி மார்ச் 9 அன்று துபாயில் நடைபெற உள்ளது. இதே தொடரில் குரூப் போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்தும் ஏற்கெனவே விளையாடியிருந்தன. துபாயில் நடைபெற்ற இப்போட்டியில் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியிருந்தது. இந்நிலையில் இதே அணிகள் மீண்டும் இறுதிப் போட்டியில் பலப் பரீட்சை நடத்த உள்ளன.


ஐசிசி தொடர்களில் இந்தியாவும் நியூசிலாந்தும் இறுதிப் போட்டியில் விளையாடுவது இது மூன்றாவது முறை. ஏற்கனவே இரண்டு முறை நடைபெற்ற ஐசிசி தொடர் இறுதிப் போட்டிகளில் இந்திய அணியை நியூசிலாந்து அணி தோற்கடித்துள்ளது. 2000ஆம் ஆண்டில் ஐசிசி  நாக் அவுட் டிராபி என்று (தற்போது ஐசிசி சாம்பியன்ஷிப் டிராபி) அழைக்கப்பட்டபோது கென்யத் தலைநகர் நைரோபியில் இத்தொடர் நடைபெற்றது. கென்யா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்க அணிகளை வீழ்த்தி சவுரவ் கங்குலி தலைமையிலான இந்திய அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தது.

இதையும் படிங்க: கிங் கோலி எண்ட்ரி....ஓபனிங்கே சும்மா அதிருதே!!


 நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 264 ரன்களை எடுத்தது. இலக்கை விரட்டிய நியூசிலாந்து 132 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. அந்த நேரத்தில் கிறிஸ் கெய்ரன்ஸ், கிறிஸ் ஹாரீஸ் ஆகியோர் அமைத்த பார்ட்னர்ஷிப் இந்தியாவின் கோப்பைக் கனவைத் தகர்ந்தது. கெய்ரன்ஸ் 102 ரன்கள் விளாசி அணியை வெற்றி பெற வைத்தார். 25 ஆண்டுகள் கழித்து ஐசிசி சாம்பியன்ஷிப் தொடரில் நியூசிலாந்தை பழித் தீர்க்க இந்திய அணிக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.


இதேபோல் 2021இல் அறிமுகம் செய்யப்பட்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி நியூசிலாந்து முதல் கோப்பையை வென்றது.  எனவே, இதற்கு முன்பு ஐசிசி தொடரில் இரண்டு முறை இறுதிப் போட்டியில் இந்திய அணியை நியூசிலாந்து வீழ்த்தியிருக்கிறது. மூன்றாவது முறையாக நியூசிலாந்து ஆதிக்கம் செலுத்தவிடாமல் இந்தியா அணை போடும் என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

இதையும் படிங்க: ICC Championship: அரையிறுதியில் தென் ஆப்பிரிக்காவை சாய்த்தது நியூசிலாந்து... இறுதியில் இந்தியாவுடன் மல்லுக்கட்டும் கிவ்விஸ்கள்.!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share