ஐபிஎல் டி20 திருவிழா இன்று ஆரம்பம்... பிசிசிஐ அறிவித்த 4 புதிய விதிகள் என்ன..?
இன்று தொடங்கவுள்ள ஐபிஎல் டி20 தொடருக்கான புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது பிசிசிஐ.
கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ஐபிஎல் டி20 தொடரின் 18-வது சீசன் இன்று மாலை கோலாகலமாக கொல்கத்தாவில் தொடங்குகிறது. இந்த தொடரில் பிசிசிஐ புதிய விதிகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது. 10 அணிகள் போட்டியில் பங்கேற்கின்றன. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ஆர்சிபி அணியும் மோதுகின்றன. இரு அணிகளுக்கும் புதிய கேப்டன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கொல்கத்தா அணிக்கு அஜிங்கயே ரஹானேவும், ஆர்சிபி அணிக்கு ரஜத் பட்டிதாரும் கேப்டனாக நியமிக்கப்பட்டனர். இருவரும் தங்களின் முதல் ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என்று பல்வேறுவியூகங்களை வகுத்து களமிறங்குவதால் போட்டி பரபரப்பாக இருக்கும். இரு அணிகளுக்குமே ரசிகர்கள் அதிகம் என்பதால், முதல் ஆட்டத்தில் விறுவிறுப்புக்குப் பஞ்சமிருக்காது.
இதையும் படிங்க: IPL 2025: 65 நாட்கள் 74 போட்டிகள்.. ஐபிஎல் திருவிழா இன்று தொடக்கம்.. கிரிக்கெட் ரசிகர்களுக்கு மெகா விருந்து.!!
ஒவ்வொரு முறை ஐபிஎல் சீசனுக்கும் பிசிசிஐ புதிய விதிகளை சேர்ப்பதும் பழைய விதிகளை திருத்துவதும் என சூழலுக்கு ஏற்ப மாற்றி வருகிறது. இந்த சீசனுக்கு 4 புதிய விதிகளை பிசிசிஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
பந்தில் எச்சில் பயன்படுத்தலாம்!
கொரோனா பரவலுக்கு முன்பு வரை பந்தின் பளபளப்பை அதிகப்படுத்த பந்துவீச்சாளர்கள் தங்கள் எச்சிலை தொட்டு துடைக்க அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா காலத்தில் இதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த சீசன் முதல் பந்துவீசும் அணியின் பந்துவீச்சாளர்கள் பந்தின் பளபளப்பை பராமரிக்க எச்சிலைத் தொட்டு துடைக்கலாம் என அறிவித்துள்ளது.
2வது புதிய பந்து!
இரவு நேரத்தில் நடக்கும் போட்டியில் பனிப்பொழிவு காரணமாக பந்து ஈரமாகக் கூடும். இதனால் பந்தைப் பிடித்து பந்துவீச்சாளர்களால் பந்து வீசுவது கடினமாக இருக்கும், இது பேட்டிங் செய்யும் அணிக்குச் சாதகமாக இருக்கும். இதற்காக 2வது பந்து விதிமுறையை பிசிசிஐ கொண்டு வந்துள்ளது. அதாவது சேஸிங்கின் போது 10வது ஓவர்கள் முடிந்தபின் நடுவர்கள் பந்தின் தன்மையைப் பார்த்து பந்துவீசும் அணியின் கேப்டன் வேண்டுகோள் கொடுத்தால், பனிப்பொழிவு இருந்தால் பந்தை மாற்றி, புதிய பந்து பயன்படுத்தலாம். இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டால் நடுவர் பந்தை கண்டிப்பாக மாற்றி, அதேபோன்ற பந்தை தேர்வு செய்து பயன்படுத்த வேண்டும்.பந்துவீசும் அணி பந்தைத் தேர்வு செய்ய அனுமதியில்லை. நடுவர்கள்தான் முடிவு செய்வர்.
அதேநேரம் பனிப்பொழிவு கூடுதலாக இருந்தால், பந்து ஈரமாகி அதன் தன்மை மாறுபட்டதாக கருதினால், சேதமடைந்தால் 10 ஓவர்களுக்கு முன்பே கூட பந்தை மாற்ற நடுவர்களுக்கு அதிகாரம் இருக்கிறது. பனி காரணமாக சில ஓவர்களுக்குப் பிறகு அடுத்தடுத்த கோரிக்கை வைக்கப்பட்டால், நடுவர்கள் முன்பு குறிப்பிட்டது போல் பந்தை கட்டாயமாக மாற்ற வேண்டும்.
புதிய ஒழுங்கு விதி!
இந்த சீசனில் இருந்து வீரர்களுக்கு புதிய ஒழுங்கு விதி அமலுக்கு வருகிறது. வீரர்கள் நடத்தையில் குறை இருந்தால், அவர்களுக்கு மைனஸ் புள்ளிகளும், சஸ்பென்ஷன் புள்ளிகளும் தரப்படும்.
வைடு, நோபாலுக்கு டிஆர்ஸ்!
இந்த சீசனில் இருந்து பேட்டர்கள் வைடு பந்துக்கும் டிஆர்எஸ் கேட்கலாம், பவுன்ஸர் வீசி பந்து இடுப்புக்கு மேல் செல்லும்பட்சத்தில் நடுவர் நோபால் தராவிட்டால் பேட்டர் டிஆர்எஸ் கேட்கலாம். இந்த தொழில்நுட்பம் ஹாக்-ஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது, பந்தை டிராக்கிங் செய்து நடுவருக்கு உதவவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: சிஎஸ்கே ரசிகர்களுக்கு டபுள் டமாக்கா… அனிரூத் இசையுடன் தொடங்கும் ஐபிஎல்!!