ஐபிஎல்லில் கேப்டன் பதவியா.? வேண்டவே வேண்டாம் சாமி.. தலைத் தெறிக்கும் கே.எல். ராகுல்!
ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் பதவியை கே.எல்.ராகுல் ஏற்க மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் முடிந்துவிட்ட நிலையில், ஐபிஎல் பக்கம் ரசிகர்களின் கவனம் திரும்பியுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா மார்ச் 22-ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்தத் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணி மட்டுமே இதுவரை கேப்டனை அறிவிக்காமல் உள்ளது. கடந்த சீசனில் கேப்டனாக இருந்த ரிஷப் பந்த் லக்னோ அணிக்கு சென்றுவிட்டார். லக்னோ அணி கேப்டனாக இருந்த கே.எல்.ராகுல் டெல்லிக்கு வந்துவிட்டார்.
கே.எல்.ராகுல் டெல்லிக்கு ஏலத்தில் எடுக்கப்படும்போதே அவர் கேப்டனாக நியமிக்கப்படக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.
இதை கருத்தில் கொண்டே ஏலத்தின் போது கே.எல்.ராகுலை ரூ.14 கோடிக்கு டெல்லி கேபிடல்ஸ் அணி ஏலம் எடுத்தது. அதே நேரத்தில் டெல்லி அணியில் தக்க வைக்கப்பட அக்சர் படேலும் கேப்டன் ரேஸில் ஒருவராக இருந்தார்.
இந்நிலையில் கேப்டன் பதவிக்கு கே.எல். ராகுலை டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்வாகம் அணுகியபோது அவர் ஏற்க மறுப்பு தெரிவித்து விட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அணியில் ஒரு வீரராக தொடரவே விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளதாகவும் அத்தகவல் கூறுகிறது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் இருந்தபோது அணியின் உரிமையாளருடன் சில கசப்பான அனுபவங்களை ராகுல் பெற்றார். மேலும் தற்போது அவரது மனைவி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். விரைவில் குழந்தை பிறப்பை எதிர்நோக்கி உள்ளதால் ஐபிஎல் தொடரின் முதல்கட்ட ஆட்டங்களில் கே.எல்.ராகுல் விளையாடுவது சந்தேகம் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஐபிஎல் டி20 தொடரில் புகையிலை, மது விளம்பரங்கள் கூடாது... மத்திய அரசு உத்தரவு..!
இதை கருத்தில் கொண்டே ராகுல், டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்க மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் அக்சர் படேல் டெல்லி அணியின் கேப்டனாக நியமிக்கப்படக்கூடும் எனத் தெரிகிறது.
இதையும் படிங்க: கேப்டன் பொறுப்பை ஏற்கத் தயார்... கே.கே.ஆர். அணி நிர்வாகத்துக்கு மெசேஜ் சொன்ன வெங்கடேஷ் அய்யர்.!