மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் போட்டிகள்.. இறுதிப்போட்டியில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் நாளை மோதல்..!
நாளை நடைபெற உள்ள மாஸ்டர்ஸ் லீக் இறுதிப்போட்டியில் இந்திய அணியும், மேற்கிந்திய தீவுகள் அணியும் மோத உள்ளன.
கிரிக்கெட்... இந்தியாவில் இது ஒரு மந்திரச்சொல்.. வீதிகளில் விளையாடினாலும் வேடிக்கைப் பார்ப்போம், வேலையை மறந்துவிட்டு விளையாடவும் செய்வோம்.. அதுவும் நமக்குப் பிடித்த கிரிக்கெட் நாயகர்கள் மீண்டும் ஆட மாட்டார்களா என்று ஏங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு வரப்பிரசாதமாக வந்தது தான் ஐஎம்எல் எனப்படும் இண்டர்நேஷனல் மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் போட்டிகள்...
உலகின் தலைசிறந்த வீரர்களாக ஒருகாலத்தில் திகழ்ந்தவர்கள் வயது மூப்பு காரணமாக ஓய்வு பெறுவது தவிர்க்க முடியாத ஒன்று. ஆனாலும் அவர்கள் ஆடிய ஒவ்வொரு ஆட்டங்களும் ரசிகர்களுக்கு மனப்பாடமாக இருக்கும். அப்படிப்பட்ட வீரர்கள் மீண்டும் களறமிங்கும் வாய்ப்பைத் தான் இந்த மாஸ்டர்ஸ் லீக் உருவாக்கி உள்ளது.
இதையும் படிங்க: வெற்றி மகுடம் சூடிய இந்திய அணி... பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பலர் வாழ்த்து..!
இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள், நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய 6 நாடுகளின் ஓய்வுபெற்ற மூத்த வீரர்கள் பங்கேற்ற மாஸ்டர்ஸ் லீக் போட்டிகள் கடந்த மாதம் 22-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்திய அணியின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் தலைமையில் மாஸ்டர்ஸ் அணி களமிறங்கி விளையாடி வருகிறது. லீக் சுற்றுகளைத் தொடர்ந்து அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது. இதேபோன்று நேற்று நடைபெற்ற மற்றொரு அரையிறுதி போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியும், இலங்கை அணியும் பலப்பரிட்சை நடத்தின.
முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி முதல் ஓவரிலேயே தொடக்க ஆட்டக்காரர் ட்வைய்னே ஸ்மித் விக்கெட்டை பறிகொடுத்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டனும், உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவருமான பிரையன் லாரா, 41 ரன்கள் எடுத்து ரிட்டையர்ட் ஹர்ட் ஆகி பெவிலியன் திரும்பினார். கடைசிகட்டத்தில் களமிறங்கிய அபாராமாக ஆடி 50 ரன்கள் குவித்தார். இதன்மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி 179 ரன்கள் எடுத்தது.
180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை சிறப்பான தொடக்கம் தந்தது. இலங்கை அணியின் கேப்டன் சங்ககாரா ஆட்டமிழந்த நிலையில், நடுக்கள வீரர்கள் ஒற்றை ரன்களுக்கு பெவிலியன் திரும்பினர். ஆனால் குணரத்னே மட்டும் மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சாளர்களுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்தார். கடைசி ஓவரில் 15 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்ட போது பார்வையாளர்களுக்கு பதற்றம் தொற்றிக்கொண்டது. இதுபோதாதென்று ஒரு பந்தில் 7 ரன் என்ற நிலையும் வந்தது. கடைசியில் இலங்கை அணியால் 20 ஓவர்கள் முடிவில் 173 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 6 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது.
நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திய அணியும், மேற்கிந்திய தீவுகள் அணியும் மோத உள்ளன. முதலாவது இண்டர்நேஷனல் மாஸ்டர்ஸ் லீக் போட்டியின் கோப்பையை வெல்லப்போவது யார் என்பது நாளை தெரிந்து விடும்.
இதையும் படிங்க: இந்தியா - நியூசிலாந்து சாம்பியன்ஸ் டிராஃபி இறுதிப்போட்டி .. முதல் பகுதி நிறைவு..