வெற்றி மகுடம் சூடிய இந்திய அணி... பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பலர் வாழ்த்து..!
சாம்பியன்ஸ் டிராபி தொடரை மூன்றாவது முறையாக வென்று சாதனை படைத்த இந்திய அணிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 19ம் தேதி பாகிஸ்தானில் தொடங்கியது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்ததால், இந்திய அணிக்கான ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடைபெற்றது.
அந்த வகையில் ஐ.சி.சி.-யின் வெற்றி கோப்பை யாருக்கு என்பதற்கான இறுதிப்போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. துபாயில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அட்டகாசமாக விளையாடி வந்த நியூசிலாந்து அணி இறுதியாக, 7 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் சேர்த்தது.
இதையும் படிங்க: சாம்பியன் பட்டத்தை வென்ற இந்தியா… மொத்த அணியையும் அல்டிமேட்டாக கவுரவித்த பிரதமர் மோடி..!
இதனை அடுத்து 252 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது. கேப்டன் ரோகித் சர்மா, கில் ஜோடி ஆகியோர் அபாரமாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 105 ரன்கள் சேர்த்தனர். கில் 31 ரன்களில் பிலிப்ஸின் அபாரமான கேட்சால் ஆட்டம் இழந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 1 ரன்னில் ஆட்டமிழக்க அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா 83 பந்துகளில் 76 ரன்கள் சேர்த்தார். இப்படி அணியில் இருந்த வீரர்கள் ஏற்ற, இறக்கத்துடன் விளையாடி, ரசிகர்களுக்கு பீபியை ஏற்றினர். ஆனால் இறுதியாக 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்திய அணி, சாம்பியன்ஸ் டிராபி தொடரை மூன்றாவது முறையாக வென்று சாதனை படைத்திருக்கிறது.
2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் தோனி எப்படி விளையாடி அசத்தினாரோ, அதேபோல் 2025 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் ரோஹித் சர்மா ஃபுல் பார்மில் விளையாடி அசத்தியுள்ளார்.
இந்த நிலையில் மூன்றாவது முறையாக சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்று சாதனை படைத்த இந்திய அணிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: சாம்பியன்ஸ் டிராபி 2025: தூள் தூளாய் நொறுங்கிய நியூசி அணி.. கோப்பையை வென்று இந்தியா சாதனை..!