காஷ்மீர் தீவிரவாத தாக்குதல்.. பிசிசிஐ அஞ்சலி..! MI vs SRH ஆட்டத்தில் பட்டாசு இல்லை, ஒரு நிமிடம் மெளனம்..!
காஷ்மீர் தீவிரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று நடக்கும் சன்ரைசர்ஸ், மும்பை இடையிலான ஆட்டம் தொடங்கும் முன் ஒரு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.
காஷ்மீர் தீவிரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பிசிசிசி சார்பில் ஐபிஎல் டி20 போட்டியில் இன்று நடக்கும் சன்ரைசர்ஸ், மும்பை இடையிலான ஆட்டம் தொடங்கும் முன் ஒரு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தளம் பஹல்காம் மண்டலம். பைன் மரக்காடுகள் அடர்ந்திருக்கும் இந்தப் பகுதி, இந்தியாவின் சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படுகிறது. இங்கு நேற்று ஏராளமான சுற்றுலாப்பயணிகள் கூடியிருந்தபோது, தீவிரவாதிகள் திடீரென சுற்றுலாப்பயணிகள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.
இதையும் படிங்க: பேட்டிங்கில் கோட்டை விட்ட SRH... அதிரடி ஆட்டத்தால் MI அசால்ட் வெற்றி!!
இந்தத் தாக்குதலில் இரு வெளிநாட்டவர், என்ஆர்ஐக்கள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். 2019ம் ஆண்டு புல்வாமா தாக்குதலுக்குப்பின் தீவிரவாதிகள் நடத்திய மிகப்பெரிய தாக்குதலாக இது கருதப்படுகிறது. நாட்டையே உலுக்கிய இந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு பிசிசிஐ சார்பில் அஞ்சலி செலுத்தப்படுகிறது. இதற்காக ஹைதராபாத்தில் இன்று நடக்கும் சன்ரைசர்ஸ் மற்றும் மும்பை இடையிலான லீக் ஆட்டத்தின்போது வழக்கமாக வெடிக்கப்படும் பட்டாசு கொண்டாட்டம் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
போட்டி தொடங்கும் முன் இரு அணிகளின் வீரர்களும், தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒருநிமிடம் மெளன அஞ்சலி செலுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இரு அணிகளின் வீரர்களும் தீவிரவாத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கையில் கறுப்புபட்டை அணிந்து விளையாடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தீவிரவாத் தாக்குதலுக்கு இந்திய கிரிக்கெட் வீரர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். முன்னாள் வீரர் ஆர்பி சிங் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கருத்தில் “பஹல்காம் தீவிரவாதத் தாக்குதல் குறித்து அறிந்து ஆழ்ந்த வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.இந்த கொடூரமான தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த கடினமான நேரத்தில் ஒற்றுமையாகவும், ஆதரவாகவும் இருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கருத்தில் “இந்த கடினமான நேரத்தில் தேசத்தில் உள்ளவர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். கொடூரமான, கோழைத்தனமான தாக்குதலுக்கு எதிராக தேசத்தின் மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா கூறுகையில் “இதயத்தை நொறுங்க வைக்கும் தாக்குதல். பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் கடும் கோபத்தை வரவழைக்கிறது. தங்களின் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு என் இதயத்திலிருந்து ஆழ்ந்த அனுதாபங்கள். அவர்களின் ஆத்மா சாந்தியடையட்டும், எப்போது இந்த வெறுப்பு நிறுத்தப்படும்” எனத் தெ ரிவித்துள்ளார்.
ஆர்சிபி வீரர் குர்னல் பாண்டியா எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கருத்தில் “இதயத்தை நொறுங்க வைக்கிறது, பிரார்த்திப்போம், தீவிரவாதிகள் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இஷான் கிஷனால் ஏமாந்துபோன ரசிகர்கள்... உச்சக்கட்ட கடுப்பில் காவ்யா மாறன்!!