சொத்தையான சூப்பர் ஸ்டார்ஸ்! ரஞ்சிக் கோப்பையிலும் சொதப்பிய ரோஹித், கில் பந்த், ஜெய்ஸ்வால்
நியூசிலாந்துடன் டெஸ்ட் தொடர், பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில்தான் சொதப்பினார்கள் என்றால் ரஞ்சிக் கோப்பையிலும் இந்திய அணியின் சூப்பர் ஸ்டார்களான ரோஹித் சர்மா, யாஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மான் கில், ரிஷப் பந்த் சொதப்பியுள்ளனர்.
ரஞ்சிக் கோப்பைத் தொடரின் எலைட் பிரிவு ஆட்டங்கள் இன்று தொடங்கியுள்ளன. இந்திய அணியில் நீண்டகாலமாக உள்நாட்டுப் போட்டிகளில் பங்கேற்காமல் சர்வதேச போட்டிகளில் மட்டும் விளையாடி வந்தனர். ஆனால், பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர், நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் மோசமாக பேட் செய்ததையடுத்து, சீனியர் வீரர்கள் இழந்த ஃபார்மை மீட்க உள்நாட்டுப் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று பிசிசிஐ உத்தரவிட்டது.
இதையடுத்து, கேப்டன் ரோஹித் சர்மா, ரிஷப் பந்த், ஜெய்ஸ்வால், சுப்மான் கில் ஆகியோர் ரஞ்சிக் கோப்பைத் தொடரில் விளையாடி வருகிறார்கள். மும்பை அணியில் ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வாலும், டெல்லி அணியில் ரிஷப் பந்தும், சுப்மான் கில் பஞ்சாப் அணிக்காகவும் விளையாடுகிறார்கள்.
ஆனால், இந்திய அணியின் மத்திய ஒப்பந்தத்தில் இருக்கும் இந்த 4 நட்சத்திர பேட்டர்களும் ரஞ்சிக் கோப்பைத் தொடரில் சர்வதேச அனுபவம் இல்லாத இளம்பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சைக் கூட தாக்குப்பிடிக்க முடியாமல் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர்.
பிப்ரவரி மாதம் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி நடக்க இருக்கம் நிலையில் அந்தத் தொடரில் சிறப்பாக சீனியர் வீரர்கள் செயல்பட ரஞ்சிக் கோப்பையை பயன்படுத்தட்டும் என்று பிசிசிஐ கருதியது. ஆனால், அனைத்துக்கும் மாறாக சீனியர் வீரர்கள் பேட்டிங் இன்று சொதப்பலாக இருந்தது, எதிர்பார்ப்புகள் அனைத்தையும் தவிடுபொடியாக்கியது.
இந்த நிலையில் இவர்களை வைத்து எவ்வாறு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கோப்பையில் இந்திய அணி பங்கேற்கப் போகிறது என்று இப்போதே சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கொந்தளித்து கருத்துத்தெரிவித்து வருகிறார்கள்.
இதில் கடந்த 10 ஆண்டுகளுக்குப்பின் உள்நாட்டுப் போட்டியில் விளையாட வந்த ரோஹித் சர்மா மும்பை எலைட் பிரிவு அணியில் இடம் பெற்றிருந்தார். மும்பையி்ல் இன்று தொடங்கிய ஆட்டத்தில் ஜம்மு காஷ்மீர் அணிக்கு எதிரான மும்பை அணி களமிறங்கியது. இந்த ஆட்டத்தில் மும்பை அணி 33.2 ஓவர்களில் 120 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது.
இதில் நட்சத்திர பேட்டர் ரோஹித் சர்மா 19 பந்துகளைச் சந்தித்து 3 ரன்னில் உமர் நசீர் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஜெய்ஸ்வால் 8 பந்துகளைச் சந்தித்து ஒரு பவுண்டரி அடித்தநிலையில் அக்குயிப் நபி பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார்.
இதையும் படிங்க: அதிரடி அபிஷேக், சக்ரவியூகம் அமைத்த சக்ரவர்த்தி: இங்கிலாந்து அணியை துவம்சம் செய்த இந்திய அணி
கேப்டன் ரஹானே(12), ஸ்ரேயாஸ் அய்யர்(11) ரன்கள் சேர்த்தனர். ஆல்ரவுண்டரான ஷர்துல் தாக்கூர் 57 பந்துகளில் 51 ரன்களும், தனுஷ் கோட்டியான் 26 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர்.
டெல்லி அணிக்காக 6 ஆண்டுகளுக்குப்பின் ரிஷப் பந்த் இன்று களமிறங்கினார். குருப் டி பிரிவில் ராஜ்கோட்டில் தொடங்கிய இந்த ஆட்டத்தில் சவுராஷ்டிரா அணிக்கு எதிர்த்து டெல்லி அணி மோதியது. இந்த ஆட்டத்தில் ரிஷப் பந்த் 10 பந்துகளைச் சந்தித்து ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். டெல்லி அணி 49.4 ஓவர்களில் 188 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சவுராஷ்டிரா அணிக்காக களமிறங்கிய ரவீரந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லி சரிவுக்கு காரணமாகினார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக இந்திய அணியில் இடம் பெற்றுள்ள ரிஷப் பந்த், முதல் ஆட்டத்திலேயே சொதப்பியுள்ளது தேர்வாளர்களை கவலைக்கொள்ள வைத்துள்ளது
பஞ்சாப் அணிக்காக ஆடிய இந்திய அணியின் துணைக் கேப்டன் சுப்மான் கில்லும் ஏமாற்றம் அளித்தார். பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் கர்நாடக அணிக்கு எதிராக இன்று தொடங்கிய ஆட்டத்தில் சுப்மான் கில் 4 ரன்னில் நடையைக் கட்டினார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஒன்டவுன் மற்றும் தொடக்க ஆட்டக்காரருக்கு சரியான வீரரைத் தேடிய நிலையில் சுப்மான் கில்லை கொண்டு வந்தது. இந்திய அணியின் துணைக் கேப்டனாகவும் சாம்பியன்ஸ் டிராபிக்கு அறிவிக்கப்பட்டநிலையில் சுப்மான் கில்லின் பேட்டிங் பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.
சாம்பியன்ஸ் டிராபிக்கு தேர்வாகியுள்ள இந்திய அணியில் இடம்பெற்ற கேப்டன் ரோஹித் சர்மா, துணைக் கேப்டன் சுப்மான் கில், ரிஷப் பந்த், ஸ்ரேயாஸ் அய்யர், ஜெய்ஸ்வால் ஆகியோரின் மோசமான பேட்டிங் இந்திய பேட்டிங்கின் நிலைத்தன்மை மீது சம்பட்டி அடியாக இறங்கியுள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்க இன்னும் ஒருமாதமே இருக்கும் நிலையில் இவர்களின் பேட்டிங் கவலைக்கிடமாக இருக்கிறது.
நட்சத்திர பேட்டர்களின் மட்டமான பேட்டிங்கைப் பார்த்தபின், இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபிக்காக உண்மையாகவே தயாராகியுள்ளதா, சர்வதேச அளவில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளை சமாளிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதையும் படிங்க: சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்: பாகிஸ்தானின் நிபந்தனைக்கு பணிந்த இந்திய அணி..!