ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் நாளை முதல் தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைட்சர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 10 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த போட்டிக்காக அனைத்து அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இதனிடயே புதிய கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில் களமிறங்கும் பஞ்சாப் கிங்ஸ் அணி நன்றாக விளையாடி போட்டியில் வெற்றி பெற வேண்டி பூஜை நடத்தப்பட்டது.

அதில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பயிற்சியாளரும் கலந்துக்கொண்டார். இவர் கடந்த செப்டம்பர் மாதம் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இந்த பூஜையின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது. இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். முன்னதாக பாகிஸ்தான் வீரர்கள் மதரீதியான செயல்களில் ஈடுபட்டபோது அவர்களுக்கு எதிர்ப்புகள் எழுந்தது. 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்தார்.
இதையும் படிங்க: ஒரு நாள் கிரிக்கெட்டில் விராட் கோலிதான் கிங்.. புகழ்ந்து தள்ளிய ஆஸ்திரேலிய ஜாம்பவான்.!

பின்னர் அங்கேயே தொழுகை செய்தார். அவரின் இந்த செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் ரிஸ்வானின் இந்த செயல்பாடு விளையாட்டின் உணர்வுக்கு எதிரானது என்றும், அவர் வேண்டுமென்றே தனது மதத்தை வெளிப்படுத்தியதாகவும் ஐசிசி தலைவரிடம் புகார் அளித்தார். இதேபோல் கடந்த 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு பிறகு, அகமது ஷேசாத், முகமது ரிஸ்வான் மதத்தை ஒரு கருவியாக பயன்படுத்துவதாக விமர்சித்தார். அணியின் உடற்தகுதி குறித்து பொய் சொல்வது மற்றும் களத்தில் நடிப்பதற்கு எந்த மதம் கற்றுக்கொடுக்கிறது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

இவ்வாறு பாகிஸ்தான் அணி வீரர்கள் அடுத்தடுத்து பல விமர்சனங்களுக்கு உள்ளாகினர். இவ்வாறு தங்கள மதத்தை பின்பற்றியதற்காக விமர்சிக்கப்பட்ட அவர்கள் தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் பூஜை வீடியோவை பார்த்து இதை யாரும் ஏன் விமர்சிக்கவில்லை என பாக். ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மற்றவர்கள் செய்யும் போது யாரும் கண்டுகொள்ளாதது ஏன் என்றும் இது ஒருதலைப்பட்சமான செயல் என்றும் கூறிய அவர்கள், ரிஸ்வான் மசூதிக்கு சென்றாலே பிரச்சினை செய்பவர்கள், இப்போது என்ன சொல்வார்கள்? என்றும் நாங்கள் செய்தால் மதம் கலப்பு, ஆனால் அவர்கள் செய்தால் விளையாட்டு உணர்வா? என்று பதிவிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ஐபிஎல் முதல் மேட்ச்சுக்கு வந்த சிக்கல்... செய்வதறியாது தவிக்கும் பிசிசிஐ!!