'குட் பேட் அக்லி' படம் வெளியானதில் இருந்து என்னடா இன்னும் இளையராஜா எதுவும் பேசவில்லையே என அனைவரும் உற்று நோக்கி கொண்டு இருக்க, மக்களை ஏமாற்றாமல் கேஸ் கொடுத்து உள்ளார் இசையமைப்பாளர் இளையராஜா. தமிழகத்தில் காபி ரைட்ஸ் பிரச்சனைக்கு பெயர் போனவர்கள் என்றால் இரண்டு பேர் ஒன்று நடிகர் தனுஷ் மற்றொருவர் இளையராஜா. குட் பேட் அக்லி படம் வந்த பொழுதே அனைவரும் "என்ன குமாரு இப்படி பண்ணிட்டியே" ட்ரெய்லர்ல நீங்க பாட்டு வச்சது தப்பில்ல என அனைவரும் கூறிவந்த நிலையில் ஒத்த ரூபாய் தாரேன் பாட்டை போட்டதுக்கு ஒத்த ரூபாய் எல்லாம் வேண்டாம் கோடி ரூபாய் போதும் என இளையராஜா செக் வைத்து இருக்கிறார்.

இசையில் ஜாம்பவானாக இருக்கும் இளையராஜா நிஜ உலகில் ஏன் இப்படி இருக்கிறார் என அவரை வசைபாடாத நாவுகளே கிடையாது. அந்த வகையில் இளையராஜா அவரது பாடல்களுக்கு உரிமைகோருவது ஒன்றும் புதியதல்ல, பல நாட்களாக படங்களில் நடிக்காத வடிவேலுவின் காமெடிகள் மீம்ஸ் கிரியேட்டர்களால் அதிகம் பகிரப்பட்டபோது, உங்களது டயலாக்குகளுக்கு ஏன் உரிமை கோராமல் இருக்கிறீர்கள் என வடிவேலுவிடம் கேட்டதற்கு, நான் நடிக்க வில்லை என்றாலும் எனது டயலாக்குகள் மூலமாக நான் சினிமாவில் இன்றும் வலம் வந்து கொண்டு இருக்கிறேன். இதனை யாராலும் தடுக்க முடியாது. இது கடவுள் எனக்கு கொடுத்த பரிசு. ஆதலால் அதற்கு உரிமை கோருவது தவறு என சொல்லி சென்றார்.
இதையும் படிங்க: இளையராஜாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்த இயக்குநர்கள்.. தமிழ் மண்ணுக்கு பெருமை சேர்த்து விட்டதாக புகழாரம்..!

இதனை பார்த்து என்னா...மனுஷன்... என மக்கள் பார்த்து விட்டு, அப்படியே இளையராஜாவும் செய்தால் உங்கள் பாடல் பலரது இல்லங்களிலும், படங்களிலும் ஒலித்து, பல தலைமுறைகள் உங்களை வாழ்த்துமே என்றால் அதற்கு அவர் சொல்லும் பதில் ஒன்று தான் "என் பாடல் என் உரிமை" என சொல்லி பாடல் உபயோகித்தவர் மீது வழக்கு தொடருவார் இளையராஜா. உதாரணத்திற்கு கடந்த 2017-ம் ஆண்டில் உலக சுற்றுப்பயணத்தின் போது அனுமதியின்றி, தனது இசையில் வந்த பாடல்களைப் பாடியதற்காக, எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மீது வழக்குத் தொடர்ந்தார்.

அதன்பின், ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் "கூலி" திரைப்படத்தின் அறிவிப்பு டீஸரில் 1983-ம் ஆண்டு "தங்க மகன்” திரைப்படத்தில் இருந்து "வா வா பக்கம் வா" என்ற தனது பாடலை அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டதாக இளையராஜா புகார் கூறினார். இப்படி அவரது பாடலை தொட்டாலே கரண்டாக வெடிக்கும் இளையராஜா தற்பொழுது அஜித் படத்தையும் விடுவதாக இல்லை.

அந்த வகையில், நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி ரசிகர்களால் போற்றப்பட்டு வருகிறது. இந்த சூழலில், இப்படத்தின் ட்ரெய்லரில் ஒத்த ரூபாய் தாரேன் பாட்டை போட்டதுக்கு ஒத்த ரூபாய் வேண்டாம் ரூ.5 கோடி போதும் என இளையராஜா தற்பொழுது இந்த பாடலை பயன்படுத்தியதற்காக இழப்பீடு கேட்டு உள்ளார். தரவில்லை என்றால் படத்தின் தயாரிப்பு நிறுவனம் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என இளையராஜா தரப்பில் இருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "படம் பிளாக்பஸ்டர் தான் ஆனால் தலையில் ஏத்திக்காத"..! அஜித் கொடுத்த நச் அட்வைஸ்..!