பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்து வெளிவந்துள்ள எம்புரான் திரைப்படம் 2 நாட்களில் நூறு கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. ஆனால் இந்த படம் அரசியல் ரீதியாக பல்வேறு சர்ச்சைகளை எதிர்கொண்டுள்ளது. இந்நிலையில் நடிகரும், இயக்குநருமான பிருத்விராஜின் தாயார் மல்லிகா, அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில் எம்புரான் விவகாரத்தில் தன்னுடைய மகன் ப்ருத்விராஜை மட்டும் பலிகடா ஆக்குவது ஏன் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலை கதாநாயகனாக வைத்து லூசிபர் என்ற திரைப்படத்தை சில ஆண்டுகளுக்கு முன்னர் ப்ருத்விராஜ் இயக்கி இருந்தார். அது மாபெரும் வெற்றிபெற்றதையடுத்து எம்புரான் என்ற பெயரில் அதன் இரண்டாம் பாகத்தை இயக்கி வெளியிட்டார் பிருத்விராஜ். அது அதிரிபுதிரி வெற்றி பெற்றது. அதேசமயம், 2002- குஜராத் கலவரம் தொடர்பான சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றதாக கூறி இந்துத்துவ அமைப்புகள் இப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தன.
இதையும் படிங்க: எல்2: எம்பூரான் திரைப்படத்தின் அபார வெற்றி..! பட்ஜெட்டை சொல்லி வாய் பிளக்க வைத்த பிருத்விராஜ்..!

படத்தின் பிரதான வில்லன் கதாபாத்திரத்திற்கு பாபா பஜ்ரங்கி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. குஜராத் கலவரத்தில் தொடர்புடைய பாபுபாய் படேல் என்கிற பாபு பஜ்ரங்கியின் பெயரோடு ஒத்துப்போவதாக சர்ச்சை எழுந்தது. மேலும் இந்து - முஸ்லீம் கலவரம் தொடர்பான காட்சிகளும் அரசியல் பின்னணியோடு இப்படத்தில் இடம்பெற்று இருந்தன. இதனால் இப்படத்திற்கு நாடு முழுவதும் உள்ள இந்துத்துவ அமைப்புகளின் எதிர்ப்புக்கு உள்ளானது.
இதுதொடர்பாக நடிகர் மோகன்லால், மன்னிப்புக்கோரி வீடியோ ஒன்றை வெளியிட்டார். படத்திற்கு ஆதரவாகவும், இந்துத்துவ அமைப்புகளுக்கு எதிராகவும் பேசிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், கருத்து சுதந்திரத்தை பறிக்கும் செயல் என்று எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில், சமூக வலைதளத்தில் பிருத்விராஜின் தாயார் மல்லிகா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், 100-க்கான மனிதர்களின் கூட்டு முயற்சியில் இப்படம் உருவாகி உள்ள நிலையில், தன்னுடைய மகன் பிருத்விராஜை மட்டும் இந்த விவகாரத்தில் பலிகடா ஆக்குவது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார். படத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு காட்சி மற்றும் வசனம் குறித்து கதாநாயகன் மோகன்லாலுக்கு நன்றாகவே தெரியும் என்றும் அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இந்த அறிக்கை கேரளாவில் இப்போது வைரல் ஆகி வருகிறது.
இதையும் படிங்க: எம்புரான் படத்தின் ட்ரெய்லரை வெளியிட்ட ரஜினிகாந்த்.. மலையாளப் படமா? ஹாலிவுட் படமா என வியப்பு..!