மலையாள படவுலகம் என்பது மிகவும் சிறியது. அங்கு நூறுகோடி வசூல் என்பது அபூர்வமாகவே நிகழும். ஆனாலும் சமீபகாலமாக ஒருசில படங்கள் அங்கு அடுத்தடுத்து ப்ளாக்பஸ்டர் ஹிட்களை கொடுத்து வருகின்றன. அதிலும் ஒரு புதுமையை படைத்துள்ளது மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் நடித்து, ப்ருத்விராஜ் இயக்கத்தில் வெளிவந்த எம்புரான் திரைப்படம். வெறும் 48 மணி நேரத்தில் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து புதிய சாதனையை படைத்துள்ளதாம்..

மலையாளத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் ப்ருத்விராஜ். ஆடுஜீவிதம் போன்ற அற்புதமான படங்களில் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி வருபவர். தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற பிறமொழிப் படங்களிலும் அவர் நடித்து வருகிறார். இருப்பினும் முன்னணி நடிகராக இருந்துகொண்டே இயக்குநராக வெற்றி பெறுவது ஒருசிலருக்கே சாத்தியம். அந்தவகையில் லூசிபர் படம் மூலம் கமர்ஷியல் இயக்குநராக அறிமுகமாகி அட்டகாச வெற்றியை பெற்றிருந்தார் ப்ருத்விராஜ்.
இதையும் படிங்க: தமிழ் சினிமாவை ஆளும் நெட்பிளிக்ஸ்.. டெஸ்ட் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் ருசிகரம்..!

அதன் இரண்டாம் பாகமாக எம்புரான் வெளியாகியது. பெரும்பாலும் முதல்பாகம் வெற்றி அடைந்தால் திருஷ்டி வைத்தார்போல் இரண்டாம் பாகம் வெற்றி பெறுவது குதிரைக்கொம்பு. ஆனால் அதனைவிடவும் வசூலை வாரிக்குவிக்கும் வகையில் எம்புரானை கொண்டாடி வருகின்றனர் மோகன்லால் ரசிகர்கள்.
முழுக்க, முழுக்க அரசியலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படம், பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தாலும் கமர்ஷியல் என்ற அளவுகோலில் வெகுஜன மக்களாலும் ரசிக்கப்பட்டு வருகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு அந்தந்த மாநிலங்களிலும் எம்புரான் சக்கைப் போடு போட்டு வருகிறது.

படம் வெளியாகி 48 மணி நேரத்திற்குள் அதாவது வெறும் 2 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் என்பது மலையாள திரையுலகிற்கு மிகவும் புதிது.
ஒருபுறம் பொன்மான், நாராயணியின் மூன்று மகன்கள், கிஷ்கிந்தா காண்டம் போன்ற கதையம்சம் உள்ள அற்புதமான படங்களும் மலையாளத்தில் எடுக்கப்படுகின்றன. அவையும் உரிய வரவேற்பை பெறுகின்றன. அதேபோன்று எம்புரான் போன்ற கமர்ஷியல் படங்களும் கொண்டாடப்படுகின்றன. சரியான சமவிகிதத்தில் மலையாள படம் இயங்குவதாக மகிழ்ச்சித் தெரிவிக்கின்றனர் அங்குள்ள திரையரங்கு உரிமையாளர்கள்.
இதையும் படிங்க: எம்புரான் படத்தின் ட்ரெய்லரை வெளியிட்ட ரஜினிகாந்த்.. மலையாளப் படமா? ஹாலிவுட் படமா என வியப்பு..!