திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டு அதிமுகவை தொடங்கி கருணாநிதி தலைமையிலான திமுகவை அவரை விட சாணக்கியத்தனமாக செயல்பட்டு 13 ஆண்டுகள் ஆட்சிக்கு வரவிடாமல் செய்தவர் எம்ஜிஆர். கருணாநிதி முதல்வராக வருவதற்கு எம்ஜிஆர் செய்த உதவியை திமுகவில் உள்ள அனைவரும் அறிவர். கருணாநிதியே அதை தனது நெஞ்சுக்கு நீதியில் சூசகமாக உதவினார் நண்பர் என்று குறிப்பிட்டிருப்பார். அப்படிப்பட்ட எம்ஜிஆர் அவமானப்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டபோது அதிமுகவை தொடங்கினார்.

அதிமுகவின் 53 ஆண்டு கால வரலாறு இன்று திமுகவுக்கு இணையான கட்சியாக இன்றளவும் இருப்பதை அரசியல் அறிந்தவர்கள் மறுக்க முடியாது. தனக்கு பின்னரும் அதிமுக இருக்க வேண்டும் என்பதில் முனைப்போடு எம்ஜிஆர் செயல்பட்டார். அதில் வெற்றியும் பெற்றார் என்பது அவரது மறைவுக்கு பின்னர் அதிமுக அவர் காலத்தைவிட அதிகளவு வெற்றி பெற்றதையும் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக திமுகவை வென்றதையும் குறிப்பிடலாம்.
இதையும் படிங்க: துக்ளக் ஆசிரியர் ‘சோ’ போல் அரசியல் நிபுணரா குருமூர்த்தி?...ஓபிஎஸ் அரசியல் தோல்வி ஏன்?

எம்ஜிஆர் வாழ்க்கைப்பாதை அவர் நாடக உலகில் சிறுவயதில் வந்தது, திரைத்துறைக்கு அவ்வளவு எளிதில் வந்துவிடவில்லை அவருக்கும் உருவ கேலி இருந்தது. தனக்கான ரோல் எது, பாதை எது என அறியவே அவருக்கு பல ஆண்டுகள் ஆனது, சமூக படங்களுக்கு சரிபட்டு வரமாட்டார் என திரையுலகத்தால் நிராகரிக்கப்பட்டவர் பின்னர் அதே தமிழ் திரையுலகில் முடிசூடா மன்னரானதற்கு பின்னால் எம்ஜிஆரின் அபரிதமான உழைப்பும், திரையுலகைப்பற்றிய அவரது கணிப்பும், அவரது தனிப்பட்ட குணங்களும் காரணமாக அமைந்தது.

இடதுசாரி கருத்துகள் வலுத்து வந்த காலத்தில் அதை கையிலெடுத்தவர் அதே பாதையில் பயணித்தார், தனது பாடல்கள், வசனங்கள், கேரக்டர்களில் ஒரு ஒழுங்குமுறையையும், தன்னுடன் நடைக்கும் வில்லனையும் திருத்தும் பாத்திரமாக அமைத்ததும் இவரது வெற்றிக்கு அடையாளம். வம்புக்கு போக மாட்டார் வந்த வம்பை விடமாட்டார். அதில் கொடூரம் இருக்காது, மன்னிப்பார். பெண்களை தெய்வமாக மதிப்பார், மது, மாது, நெகட்டிவ் வேடங்கள் நடிக்கமாட்டார். இதெல்லாம் அவரது இமேஜை எங்கேயோ கொண்டு சேர்த்தது.

திரையில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் அதே இமேஜை கடைபிடித்தார். தன் வருமானத்தில் பெரும்பகுதியை உதவி செய்தார். அவர் வீட்டு அடுப்பு அணைந்ததே இல்லை. வந்தவர்கெல்லாம் பசியாற உணவு போட்டார், உதவி செய்தார். கேட்டவர்களுக்கெல்லாம் மாதந்தோறும் உதவிகள் அனுப்பினார். ”என்னை நம்பிக்கெட்டவர்கள் யாருமில்லை, நம்பாமல் கெட்டவர்களே அதிகம்” இது எம்ஜிஆர் வசனம். அதேப்போல் ”எதிரிக்கு தோல்வியை பரிசாக அளித்தவன் நான் “ என்கிற வசனமும் எம்ஜிஆர் வாழ்க்கையில் பொருந்திய வசனங்கள்.

அரசியலில் அண்ணாவை பின்பற்றி அன்பு தம்பியாக பேர் எடுத்த எம்ஜிஆர், திமுக தலைவரான கருணாநிதிக்கு அண்ணாவின் மறைவுக்கு பின் முதல்வராக பின் நின்று உதவினார். ஆனால் எம்ஜிஆர் மன்றங்களை மு.க.முத்து மன்றங்களாக மாற்றவும், எம்ஜிஆரை திமுகவில் ஒதுக்கவும் 1971 தேர்தல் பெருவெற்றிக்கு பின் கருணாநிதி முடிவெடுத்தபோது அதற்கு எதிராக பேசிய எம்ஜிஆர் கட்சியை விட்டு நீக்கப்பட்டார். நடிகர் தானே ஒதுங்கி போய்விடுவார், ஆட்சியில் இருக்கும் தம்மை எதிர்க்கும் அரசியல் அறிவும் எம்ஜிஆருக்கு கிடையாது என கருணாநிதி தப்புக்கணக்கு போட்டார்.

”தப்புக்கணக்கு போடுகிறீர்கள்” என்று கண்ணதாசன் சொன்னபோது ”என்னய்யா கொஞ்ச நாள் பேசுவார்கள் பின்னர் சரியாகிவிடும்” என்று எம்ஜிஆர் நீக்கத்தை அரசியல் சாணக்கியர் கருணாநிதி எளிதாக எடுத்து ஏமாந்தார். இதை கண்ணதாசனே பின் நாளில் தனது வனவாசம் நூலில் குறிப்பிட்டுள்ளார். 1962-ல் சம்பத் வெளியேற்றம் போல் ஒன்றுமில்லாமல் எம்ஜிஆர் வெளியேற்றம் இருக்கும் என கருணாநிதி தப்புக்கணக்கு போட்டுவிட்டார். இங்குதான் கருணாநிதி சறுக்கினார். ஆனால் காலம் அதை அவருக்கு பாடமாக கற்றுகொடுத்தது, என்ன பயன் மீண்டும் தலையெடுக்க 13 ஆண்டு காலம் வனவாசம் இருக்க வேண்டியதானது.
எம்ஜிஆருக்கு இருந்த தாய்மார்களின் ஆதரவும், திமுக தொண்டர்களில் பெரும்பாலானோர் ஆதரவும், அவரது ரசிகர்களின் எழுச்சியையும் கருணாநிதி கணிக்க தவறிவிட்டார். எம்ஜிஆரின் செல்வாக்கை வைத்து திமுகவை ஒன்றுமில்லாமல் ஆக்கலாம் என டெல்லியில் இருந்த இந்திரா கணக்கு போட்டதையும் எம்ஜிஆர் சரியாக பயன்படுத்தினார். எம்ஜிஆரின் செல்வாக்கு நாளுக்கு நாள் கூடியது. அவர் தனிக்கட்சி ஆரம்பித்தப்பின் இடைத்தேர்தலில் திமுகவை தோற்கடித்தது எம்ஜிஆர் சாதாரண எதிரியல்ல என்பதை கருணாநிதிக்கு உணர்த்தியது.

1975 மிசா கொடுமைக்கு முழுதும் உள்ளானது திமுக, கடைசி ஒருமாதம் இருக்கையில் 1976 ஆம் ஆண்டு திமுக ஆட்சி கலைக்கப்பட்டது, திமுகவினர் கடும் சிறை வாசத்தை அனுபவித்தனர். சிலர் மரணமும் அடைந்தார்கள். அப்படிப்பட்ட கொடுமைக்கு ஆளான திமுக மீது தமிழக மக்களுக்கு துளியளவும் பரிவு வரவில்லை. 1977 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு தனி மெஜாரிட்டி கொடுத்து ஆட்சியையும் கொடுத்தனர்.
அதன் பின்னர் காங்கிரஸுடன் சேர்ந்து கருணாநிதி வென்றாலும், அதன் மூலம் ஆட்சியை கலைத்த பின்னர் மீண்டும் வெற்றி பெற்ற எம்ஜிஆர், காங்கிரஸ் ஆதரவை திமுக பக்கம் விடாமல் பார்த்துக்கொண்டார், அது கருணாநிதியை மிஞ்சிய ராஜதந்திரம். அதேபோல் ஜெயலலிதாவை அரசியலுக்கு கொண்டுவந்து முன் நிறுத்தியதும் அவரது முன் கணிப்பு சரிதான் என அடுத்த 30 ஆண்டுகளுக்கு நிரூபணம் ஆனது.

எம்ஜிஆர் இன்றைய கட்சி ஆரம்பித்துள்ள விஜய் முதல் தோல்வியை கண்ட கமல் வரை பின்பற்ற வேண்டிய முன் உதாரணம். தான் மட்டுமே கட்சி என அவர் நினைத்ததில்லை. கட்சி அணிகளை வேகமாக உருவாக்கினார். அவரவருக்கு பொறுப்பு வழங்கி அவரவர் பாதையில் செல்ல வைத்தார். மாற்றுக்கட்சித்தலைவர்கள் அதிமுகவை நாடி வந்தபோது அரவணைத்தார் அவர்களை பயன்படுத்திக்கொண்டார். இவையெல்லாம் போக மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம், கட்சியினரை சந்திப்பது, பத்திரிக்கையாளர்களை சந்திப்பது என கருணாநிதிக்கு இணையாக இயங்கினார்.
இது கட்சி தொடங்கி தடுமாறி நிற்கும் விஜய்க்கு பாடம். அவர் இந்த பாணியை பயன்படுத்தினால் நிச்சயம் வெல்வார். எம்ஜிஆர் மறைந்து 38 ஆண்டுகள் கடந்த பின்னரும் கடைகோடியில் ஒரு தொண்டனால் இன்றும் நினைவுகூரப்படுவது அவரது வெற்றி எனலாம். ”இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்” என்ற பாடல் வரிகளை வைத்த எம்ஜிஆர் அதற்கு ஏற்ப வாழ்ந்தும் மறைந்தும் அவரது தொண்டர்கள் மனதில் வாழ்ந்துக்கொண்டுத்தான் இருக்கிறார்.
இதையும் படிங்க: குடும்ப ஆட்சியை விரட்ட காத்திருக்கும் மக்கள்.. விரைவில் அதிமுக ஆட்சி.. கடிதம் எழுதிய ஈபிஎஸ்!