Nepotism..... இந்த சொல்லை அறியாதவர்கள் இந்தி படவுலகம் பற்றி தெரியாதவர்கள் எனலாம்.. வாரிசுகளை களமிறக்கி படங்களாக எடுத்துத் தள்ளி வருகின்றனர் பாலிவுட்டின் டாப் மோஸ்ட் நடிகர், நடிகைகள். அந்த வரிசையில் சையப் அலிகானின் மகன் இப்ராஹிம் அலிகான் கதாநாயகனாகவும், மறைந்த ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள் குஷி கபூர் கதாநாயகியாகவும் நடித்து நெட்பிளிக்சில் வெளியாகி உள்ள படம் Nadaaniyan.. தமிழில் இதனை முட்டாள்தனம் என்று ஓரளவு இணையாக பொருள் கொள்ளலாம். படம் முட்டாள்தனமாக இருந்ததா? ரசிக்கும்படி அமைந்ததா? வாருங்கள் பார்க்கலாம்...

முதலில் இந்த படத்தின் பூர்வாங்க கதையை தெரிந்து கொண்ட பின்னர் இந்த கதை எப்படி எடுக்கப்பட்டுள்ளது என்று பார்ப்போம்.. இந்த படம் 2021-ல் வெளிவந்த He's All That என்ற படத்தின் தழுவல். ஆனால் அந்த படமோ 1999-ல் வெளிவந்த She's All That என்ற படத்தின் உருமாற்றம். இத்தோடு முடியவில்லை. அது 1964-ல் வெளிவந்து சூப்பர்டூப்பர் ஹிட் அடித்த My Fair Lady படத்தின் தழுவல். ஷ்ஷ்ஷ் அப்பா இப்போவே கண்ண கட்டுதே என்றால்.. இன்னும் இருக்கு.. 1913-ல் ஜாஜ் பெர்னான்ட் ஷா எழுதிய Pygmalion என்ற மேடை நாடகத்தின் தழுவல் தான் இதன் நவீன தொடக்கப்புள்ளி. அப்படியெனில் இதன் ஆரம்ப புள்ளி, கிரேக்க தொன்ம கதைகளில் உள்ளதாம்..
இதையும் படிங்க: வெள்ளித்திரையில் "சிறகடிக்க ஆசை"... நடிகைக்கு கிடைத்த ஜாக்பாட் ஆஃபர்...!
இப்படிப்பட்ட பாரம்பரிய மிக்க கதையை 2K கிட்சுகளை நம்பி எடுத்துள்ளனர். ஆனால், சும்மா சொல்லக்கூடாது, சிறப்பாகவே பிரமாண்டமாகவே எடுத்துள்ளனர். ஒருவரியில் சொல்வதென்றால், மேல்நிலைப்பள்ளியில் (படத்தில் காட்டும் பள்ளிகள் உண்மையிலேயே இருக்கிறதா என்றால் வயதை குறைத்துக் கொண்டு அந்த பள்ளியில் முதலில் அட்மிஷன் போடவேண்டும்) படிக்கும் மாணவி தனது தோழிகளிடம் காதலன் இருப்பதாக பொய் சொல்கிறார். நம்ப வைக்க போலி காதலன் ஒருவனையும் தயார் செய்கிறார். இடையில் குடும்ப பிரச்னை. இறுதியில் என்ன ஆனது என்பது கதை.

செல்வசெழிப்பு மிக்க குடும்பத்தின் வாரிசாக குஷி கபூர். 16 வயதினிலே மயிலின் மகளா இவர் என்று ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது. உருவத்தை விவரித்தால் அது Body Shaming என்று கூறிவிடுவார்கள். அதனால் அதனை SKIP செய்து போய்விடுவோம். நடிப்பு என்று பார்த்தால் அது பல பர்லாங் தூரத்தில் இருக்கிறது. இன்னும் ஒரு பத்து படங்கள் நடித்தால், ஸ்ரீதேவியின் நடிப்பில் 10 சதவிதம் தேறக்கூடும்.
கிட்டத்தட்ட இதே நிலைதான் கதாநாயகன் இப்ராஹிம் அலிகானுக்கும். பளிங்கு போன்ற முகம் மற்றும் தேகம். பளிங்கு என்று எதற்கு சொல்கிறோம் என்றால், அந்த முகத்தில் எந்தவித உணர்ச்சிகளும் வெளிப்படவில்லை. ஆனால் நடனம், சண்டை என்று எல்லாவற்றுக்கும் உரிய பயிற்சி எடுத்திருப்பது திரையில் நன்றாகவே தெரிகிறது. இவரும் சிலபல படங்களுக்குப் பிறகு தவிர்க்க முடியாத கதாநாயகனாகி விடுவார் என்பதே உண்மை.

90-களில் நாம் பார்த்து வியந்த சுனில் ஷெட்டி, மஹிமா சௌத்ரி, ஜுகல் ஹன்ஸ்ராஜ் போன்றவர்களின் பங்களிப்பு படத்தை இழுத்துப் பிடிக்கிறது. இப்ராஹிம் அலிகானுக்கு அம்மாவாக தியா மிர்சா.. மனம் பேதலிக்கிறது போங்கள்.. சரி, காலம் அப்படித்தான் கருணையற்றது. அவரும் நிறைவான பங்களிப்பை செய்துள்ளார்கள்.
இவ்வளவு போதாமைகளைத் தாண்டி படம் அட்டகாசமாக வந்துள்ளது என்பதே உண்மை. எளிய கதைக்குள் விறுவிறுப்பான திரைக்கதையை நுழைத்து அதகளம் செய்துள்ளார்கள். படத்தின் ஆரம்பம் ஒட்டாமல் தொடங்கினாலும் 10 நிமிடத்திற்கு பிறகு உணர்ச்சிக் குவியல் தான். வெறுமனே காதல் என்றில்லாமல் குடும்பம், லட்சியம், தோல்வி என்று எல்லா நாடகீயத் தருணங்களையும் அழகான ஒரு மாலை போல கோர்த்துள்ளார்கள். இதனால் அறிமுக நடிகர்கள் என்ற யோசனை மறந்து படத்தில் நாம் ஒன்றி விடுகிறோம். மூத்த நடிகர்களின் நிறைவான நடிப்பும், இசையும், பாடல்களும் படத்திற்கு பக்கபலம். Nadaaniyan...முட்டாள்தனம் அல்ல, முழுமையான காதல்தனம்...
இதையும் படிங்க: சீறிப்பாய்ந்து வரப்போகும் 'வாடிவாசல்' திரைப்படம்.. அட்டகாச அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்..!