நாட்டின் முதுகெலும்பாக திகழும் கிராம பஞ்சாயத்து முதல், உச்சபட்ச அதிகாரம் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வரை, பெண்களுக்கும் அதிகார பங்களிப்பு வழங்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் பதவிகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது.
ஆனால், என்ன காரணத்துக்காக இந்த திட்டம் கொண்டுவரப்பட்டதோ, அது நிறைவேறியதா.. என்ற சந்தேகம் , இது போன்ற சில நிகழ்வுகள் மூலம் அம்பலமாகி வருகிறது. மத்திய பிரதேசம் மாநிலம் நீமுச் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

அந்த மாவட்டத்தில் தாதா கிராம பஞ்சாயத்தின் தலைவியாக கைலாஷி பாய் கச்சாவா என்ற பெண் பதவி வகித்து வருகிறார். அவர் கடந்த ஜனவரி 24ஆம் தேதி அன்று தனது பதவியை அதே கிராமத்தில் வசிக்கும் சுரேஷ் காராசியாவிடம் விற்பனை செய்வதற்காக ஒப்பந்தம் ஒன்றை போட்டு இருக்கிறார்.
இதையும் படிங்க: என்ன ஆச்சு கோவை சத்தியனுக்கு? கண்டிக்கப்பட்டதால் எடுத்த முடிவா?
இந்த ஒப்பந்த விவரம் சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. 500 ரூபாய் ஸ்டாம்ப் பத்திரத்தில் எழுதப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தில் தலைவி கைலாஷி பாயின் பதவி காலம் வரை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா, நீர்நிலை பணி போன்றவற்றின் பணிகளை கையாளுவதோடு, அந்த பஞ்சாயத்தின் அனைத்து கடமைகளையும் சுரேஷ் கரசியா மேற்கொள்வார் என்று எழுதப்பட்டு இருவரும் சாட்சிகளுடன் கையொப்பமிட்டு இருக்கிறார்கள்.
இந்தக் கடமைகளில் பஞ்சாயத்து தலைவி தலையிட மாட்டார் என்றும் தலைவி பதவியை விலை கொடுத்து வாங்கி இருக்கும் சுரேஷ் வழிகாட்டுதலின்படி ஆவணங்களில் அவர் கையெழுத்து மட்டும் போட்டுக் கொடுப்பார் என்றும் பத்திரத்தில் மேலும் கூறப்பட்டு இருக்கிறது. ஒப்பந்தத்தை மீறினால் நான்கு மடங்கு இழப்பீடு தொகை செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டு இருக்கிறது.

ஆனால் எவ்வளவு தொகைக்கு பதவி விற்கப்பட்டது என்ற விவரம் அதில் குறிப்பிடப்படவில்லை. இந்த தகவல் மத்திய பிரதேசம் மாநிலம் முழுவதும் காட்டுத் தீயாய் பரவியதை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் அந்த பஞ்சாயத்து தலைவிமீது நடவடிக்கை எடுத்துள்ளது. மாவட்ட பஞ்சாயத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அமன் வைஷ்ணவ் இது தொடர்பாக விளக்கம் கேட்டு பஞ்சாயத்து தலைவிக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்.
பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் 40- வது பிரிவின் கீழ் இந்த பதவி விலக்க நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பதில் வந்ததும் சட்டத்தின் படி அந்த ஊராட்சி தலைவி பதவி நீக்கம் செய்யப்படுவார் என்று வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இது போன்ற சில தகவல்கள் மட்டுமே பகிரங்கமாக வெளியே வந்திருக்கிறது. நமது தமிழ்நாட்டில் கூட நகரங்களில் இருந்து கிராமங்கள் வரை இதுபோன்ற பதவிகளை பெண்கள் வகித்தாலும் அதே கட்சியில் பதவி வகிக்கும் அவருடைய கணவரோ தந்தையோ அல்லது சகோதரர்களோ தான் உண்மையான அந்த தலைவர் பதவியை அனுபவித்து வருவதை கண்கூடாக பார்க்க முடியும்.

தலைவருக்கு உரிய நாற்காலி மட்டும் காலியாக இருக்கும்.. சில இடங்களில் அந்த பெண்களும் அமர்ந்திருக்கலாம். ஆனால் உண்மையில் பணிகள் மேற்கொள்ளப்படுவது அனைத்தும் ஆண்கள் ஆண்களால் தான். ஒரு சில இடங்களில் வேண்டுமானால் இதில் விதிவிலக்கு இருக்கலாம்.
தற்போதைய நிலையில் அவர்களை நாற்காலியில் ஆவது உட்கார வைத்திருக்கிறார்களே என்கிற அளவிற்கு நாம் திருப்திப் பட்டுக்கொள்ள வேண்டியதுதான். காலப்போக்கில் நிலைமை மாறி உண்மையான தலைமை பொறுப்பை பெண்கள் நேரடியாக கவனிக்கும் காலம் நிச்சயம் வரும் என்று எதிர்பார்க்கலாம்.
இதையும் படிங்க: மோடி அரசால் அரசியல் சாசனத்திற்கு ஆபத்து.. உதயநிதி பரபரப்பு பேச்சு..