பொதுவாக ஆளுமை என்பது பிறப்பாலோ, சமூகத்தாலோ, மதத்தாலோ, ஆண்-பெண் பாலினத்தாலோ வருவதில்லை. ஒருவர் வளரும் சூழ்நிலை அதை அவர் தனக்காக எப்படி கை கொள்கிறார் என்பதை பொருத்து ஆளுமை ஒருவருக்கு உருவாகும். ஜெயலலிதா எனும் ஆளுமையை பற்றி பேசும் முன் அவர் வளர்ந்த சூழ்நிலை குறித்து முதலில் பார்ப்போம். ஒரு இளம் நடிகைக்கு மகளாக பிறந்தார் ஜெயலலிதா. மூத்த சகோதரர் ஒருவர் இருக்க செல்ல மகளான ஜெயலலிதா தன்னுடைய இரண்டாம் வயதில் தந்தையை இழந்தார். அது முதல் தாயின் செல்ல அரவணைப்பில் ஜெயலலிதா வளர்ந்தாலும் தந்தையின் பாசம் அவருக்கு எப்போதும் கிடைக்கவில்லை.

தாய் சினிமா சூட்டிங், நாடகப்பணி என்று செல்லும் போதெல்லாம் ஜெயலலிதா தனிமையில் வளர வேண்டிய சூழ்நிலை இருந்தது. அதனால் ஜெயலலிதாவிற்கு எப்போதும் ஹாஸ்டல் வாசம் போல் ஒரு வாழ்க்கை தான் அமைந்தது. தாயுடன் அருகாமையில் இருக்கும் சந்தர்ப்பங்கள் மிக மிக அரிதாகவே அவருக்கு கிடைத்தது. தனக்கு வசதியான வாழ்க்கை இருந்தும் தந்தை, தாயின் அருகாமை இல்லாதது ஜெயலலிதாவிற்கு பெரும் குறையாக இருந்தது. ஆனால் அவரது கற்றலில் அது எதிரொலிக்கவில்லை. நன்றாக படித்தார், கூடுதலாக பரதநாட்டியம் உள்ளிட்ட கலைகளை பயின்றார்.
இதையும் படிங்க: 'அதிமுகவில் இதை நடத்திக்காட்டாமல் விடமாட்டேன்…' செங்கோட்டையன் அதிரடி..!

அவரது 13 ஆம் வயதில் முதல் முதலாக அரங்கேற்றம் நடத்தப்பட்டது. அதற்கு தலைமை தாங்கியவர் அன்றைய பிரபலம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். ஜெயலலிதாவின் அழகைப் பார்த்து தங்கத் தாரகை என்று வர்ணித்து அவருக்கு மிகச் சிறந்த எதிர்காலம் இருப்பதாக கூறினார். அதன் பின்னர் ஜெயலலிதாவின் பதினைந்தாவது வயதில் அவர் திரையுலகில் கால் பதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. தான் படித்து சட்டம் பயின்று மிகப்பெரிய வழக்கறிஞராக விளங்க வேண்டும், திருமணம் முடித்து அதிக அளவில் பிள்ளைகளை பெற்று ஒரு மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை வாழ வேண்டும் என்பதே என் ஜெயலலிதாவின் கனவு.

ஆனால் இவை இரண்டுமே அவருக்கு கிடைக்கவில்லை. சட்டம் பயில வேண்டும் என கனவு கண்டவர் சட்டம் இயற்றும் இடத்துக்கு வந்தது அவர் வாழ்வில் எதிர்பாராதது. பத்தாவது வகுப்பில் மாநில அளவில் மிக சிறப்பாக தேர்ச்சி அடைந்த அவர், அப்போது இருந்த பியூசி என்கிற பிளஸ்-1 படிப்பை கல்லூரியில் சேர்ந்து ஒரு நாள் மட்டுமே வகுப்பு சென்று விட்டு தன்னுடைய கல்லூரி படிப்பை முடித்துக் கொண்டார். அதன் பின் அவர் கற்றதெல்லாம் வெளி உலகில் தான். நடிகையாக வெண்ணிற ஆடை படத்திலும், ஆயிரத்தில் ஒருவன் படத்திலும் அறிமுகம் ஆன ஜெயலலிதா அதற்குப் பிறகு திரும்பிப் பார்க்க முடியாத அளவுக்கு புகழின் உச்சிக்கு சென்றார்.

எம்ஜிஆர் உடன் கதாநாயகியாக அறிமுகமான ஜெயலலிதா அதிக அளவு எம்ஜிஆர் உடன் கதாநாயகியாக ஏறத்தாழ 28 படங்கள் கதாநாயகியாக நடித்தவர் என்கின்ற பெருமையை பெற்றார். தான் முன்னணி நடிகையாக இருந்த போதும் ஜெயலலிதா ஒரு போதும் தன் கற்றலை கைவிட வில்லை சூட்டிங் ஸ்பாட் ஆனாலும், எந்த இடம் ஆனாலும் புத்தகங்களை தேடி தேடி படித்து தன் அறிவை வளர்த்துக் கொண்டார். வீட்டில் மிகப்பெரிய நூலகத்தை வைத்திருந்தார். இது மற்ற கலைத்துறையினரிடம் இல்லாத ஒன்று.

பொதுவாக கலைத்துறையை சேர்ந்தவர்கள் சினிமா குறித்த ஆழ்ந்த ஞானம் உள்ளவர்களாக இருப்பார்கள் ஆனால் பொது அறிவு, அரசியல், வரலாறு உள்ளிட்ட எதிலும் பெரிதாக ஆர்வம் காட்ட மாட்டார்கள். அதிலும் சிலர் மட்டுமே விதிவிலக்காக இருப்பார்கள். அவர்களில் ஜெயலலிதாவும் ஒருவர் என்று சொல்லலாம். ஜெயலலிதா புத்தகம் வாசிப்பது மூலம் தன்னுடைய அறிவை அவர் அறியாமல் வளர்த்துக் கொண்டார் என்று சொல்லலாம். அது அவருக்கு பிற்காலத்தில் அரசியலில் புகும்போது பெரும் அளவில் பயன்பட்டது. இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் இளமை காலகட்டங்களில் நாம் தேடித்தேடி அறிந்து கொள்ளும் அறிவு அது நமது வாழ்வில் ஒவ்வொரு கட்டத்திலும் பெரும் பயனாக இருக்கும் என்பதே. இது ஜெயலலிதா வாழ்க்கையில் அவருக்கு நேரடியாக நடந்தது என்று சொல்லலாம்.

இந்த இடத்தில் தான் ஜெயலலிதாவின் ஆளுமை வெளிப்பட்டது என்று சொல்லலாம். ஒரு நடிகையாக புகழின் உச்சியில் இருக்கும் பொழுது மற்ற நடிகைகள் போல் சாதாரணமாக நடித்தோம், போனோம் என்றில்லாமல் அவர் ஒரு துணிச்சல் மிகுந்த ஒரு பெண்ணாக, மற்ற நேரங்களில் தங்களுடைய அறிவை வளர்த்துக்கொள்ள புத்தகங்கள் முழுவதும் கதை எழுதுவது போன்றவற்றில் ஈடுபட்டார். ஒரு முறை ஜெயலலிதா கர்நாடகத்தில் சூட்டிங் நடந்த பொழுது அங்கு வந்த கன்னட அமைப்பினர் படப்பிடிப்பு குழுவினரை சூழ்ந்து கொண்டு மிரட்டத் தொடங்கினர். இதனால் படபிடிப்புக்கு வந்தவர்கள் பயந்து நடுங்கினர்.

ஜெயலலிதாவை சூழ்ந்து கொண்ட கன்னட அமைப்பினர் எங்கள் கன்னடத்து பெண் தானே நீ, இப்படி தமிழ் படங்களை நடித்துக் கொண்டு இருக்கிறீர்களே, நாங்கள் சொல்வதை சொன்னால் உங்களை நாங்கள் விட்டு விடுவோம் என்று கூறி, ”கன்னடம் வாழ்க தமிழ் ஒழிக” என்று சொல்லுங்கள் என்று மிரட்டினர். ஜெயலலிதா துளியும் அச்சப்படாமல் கன்னடம் வாழ்க என்று சொல்வேனே தவிர தமிழ் மொழியை ஒழிக என்று சொல்ல மாட்டேன் என்று திருப்பி அடித்தார். இதனால் அந்த கூட்டத்தினர் தங்களுடைய மிரட்டல் செல்லாது என்று திருப்பிச் சென்றனர். இது ஜெயலலிதாவின் துணிச்சலுக்கு ஒரு சான்று. எவ்வளவு பெரிய கும்பலாக இருந்தாலும் அவர் கொஞ்சம் கூட அச்சப்படாமல் இந்த வார்த்தையை பேசியது வந்திருந்த கூட்டத்தினரை மிரள வைத்தது என்று சொல்லலாம்.
இந்த துணிச்சல் அவர் வாழ்வின் கடைசி காலகட்டம் வரை இருந்தது என்று சொல்லலாம். மிகப்பெரிய திட்ட கமிஷன் கூட்டத்திலேயே தன்னுடைய கருத்தை மறுத்த பொழுது புறக்கணித்துவிட்டு எழுந்து வந்தவர் ஜெயலலிதா. மாநில முதலமைச்சராக இருந்தாலும் மத்திய அமைச்சர்கள் கேட்டுக் கொண்டாலும் அவர்களுக்கு அப்பாயின்மென்ட் தராமல் மாநில அரசை பாதிக்கும் திட்டங்களில் உறுதியாக நின்றதும் ஜெயலலிதா என்று சொல்லலாம். அதிமுகவின் தலைவியாக ஜெயலலிதா இருந்தபோது அவரைச் சுற்றி மட்டுமே அதிமுக இயங்கியது. மற்ற அமைச்சர்கள் வெறும் பேச்சளவில் எவ்வித ஆளுமையும் இல்லாதவர்களாக இருந்தனர். ஆனாலும் தமிழக அரசை வெற்றிகரமாக அவர் வழிநடத்தி சென்ற காரணம் ஜெயலலிதா என்கிற தலைமை தங்களை வழி நடத்துகிறது என அனைவரும் நம்பியதுதான்.

ஜெயலலிதாவின் வாழ்வில் ஏற்றம் இருந்தது போல் இறக்கங்களும் இருந்தது என்று சொல்லலாம். பொதுவாக ஆணாதிக்க உலகில் சினிமா போன்ற பல கோடி புரளும் இண்டஸ்ட்ரியில் அதிகமாகவே ஆணாதிக்கம் இருக்கும். ஹீரோக்களுக்கு கிடைக்கும் சம்பளம் ஹீரோயின்களுக்கு கிடைக்காது. ஹீரோயின்களை தங்களை இஷ்டப்படி பயன்படுத்தும் நிலை திரையுலகில் இருப்பதை யாராலும் மறுக்க முடியாது. அதில் ஜெயலலிதா விதிவிலக்காக தள்ளி நிற்க முடியாமல் பெரும் போராட்டம் நடத்த வேண்டி இருந்தது. பெரும் நடிகர்கள் மத்தியில் தன்னை தனித்துவமாக காட்ட ஜெயலலிதா எடுத்த முயற்சிகள் பல நேரம் தோல்வி அடைந்திருந்தது.
இதன் காரணமாக திரையுலகில் எம் ஜி ஆர் போன்ற ஆளுமைகளுடன் ஜெயலலிதாவுக்கு மோதல் ஏற்பட்டது. கொஞ்ச காலம் தெலுங்கு சினிமா பக்கம், கொஞ்ச காலம் திரைத்துறையில் இருந்து விலகியும் ஜெயலலிதா வாழும் நிலை ஏற்பட்டது. அவருக்கான திருமண வாழ்க்கை அமைய விடாமல் தடுக்கப்பட்டது. தனிமையில் சூழப்பட்ட வாழ்க்கை, திருமண வாழ்வுக்கு பலரும் இடையூறாக இருப்பதை ஜெயலலிதா உணர்ந்தார், இந்த நேரத்தில் தான் அவரது தாயாரும் மறைந்தார். ஆதரவு தரவேண்டிய அண்ணன் அதிகாரத்துக்கு பயந்து ஜெயலலிதாவை ஒதுக்கினார்.

தாயாரின் மறைவு, தனிமையில் தள்ளப்பட்ட வாழ்க்கை ஜெயலலிதாவை பெரிதும் துன்பப்படுத்தியது. திரையுலக வாழ்க்கையும் கிட்டத்தட்ட முடிவுற்ற நேரத்தில், திருமண வாழ்வும் இல்லாமல் யாரும் இல்லாத நிலையில் போயஸ் தோட்ட இல்லத்தில் தனிமையில் வாடிய ஜெயலலிதா தைரியம் இல்லாத பெண்ம்ணியாக இருந்திருந்தால் அத்தோடு தன் வாழ்வை முடித்துக் கொண்டிருப்பார். ஆனால் ஜெயலலிதா அந்த ரகம் அல்ல எதையும் மோதி பார்த்து ஜெயிக்க வேண்டும் என்று நினைக்கிற ரகம். அதனால் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கிய அவர் 80-களில் தன்னுடைய திரைப்பட நடிப்பை நிறுத்திக் கொண்டார்.

தன்னுடைய சினிமா ஆசான் எம்ஜிஆர் அரசியலுக்கு அழைக்க அதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி சாதிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அதிமுகவில் அவருக்கு அளிக்கப்பட்ட மாநில சத்துணவு அமைப்பாளர், கொள்கை பரப்புச் செயலாளர் போன்ற பதவிகளை திறம்பட பயன்படுத்திக்கொண்டு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அரசியலை அறிந்து கொண்டார். தனக்கு பொறுப்பு கிடைத்துவிட்டது தான் அதிகாரம் மிக்கவர் என்று வீட்டிற்குள்ளேயே இருந்து கொண்டு அல்லது வீட்டிற்கும் அதிமுக அலுவலகத்திற்கு மட்டும் சென்று வரும் அரசியல் செய்யாமல் தமிழக முழுவதும் சுற்றி மக்களுடைய வாழ்க்கை நிலையை மக்களுடைய பிரச்சனைகளை நேரடியாக மக்களை அணுகி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் ஜெயலலிதா.

அதன் பின்னர் அவர் ராஜ்யசபா உறுப்பினர் ஆக்கப்பட்டது டெல்லியில் தனது காலை பதித்த ஜெயலலிதா, நான்கு மொழிகளுக்கு மேல் அறிந்திருந்ததால் டெல்லி அரசியல் அவருக்கு இயல்பாக பழகிப்போனது. டெல்லி அரசியல் செய்து கொண்டிருந்த நேரத்திலேயே, தமிழகத்திலும் தனது பிடியை அவர் விடவில்லை. 1984 ஆம் ஆண்டு எம் ஜி ஆர் உடல் நலம் பாதிக்கப்பட்டு அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு சென்ற பொழுது நடந்த சட்டமன்றத் தேர்தலில் எம்ஜிஆர் இல்லாத குறையை தீர்க்கும் வகையில் தமிழகம் முழுவதும் ஜெயலலிதா சுற்றுப்பயணம் செய்து அதிமுகவுக்காக பிரச்சாரம் செய்தார்.
அதிமுக ஜெயலலிதா வசம் சென்று விடுமோ என்கின்ற அச்சத்தில் எம்ஜிஆர் உடன் இருந்த மூத்த அமைச்சர்கள் ஜெயலலிதாவிற்கு பலவித இடையூறுகளை செய்தனர். ஆனாலும் அதிமுகவுக்குள் ஒரு பகுதியினர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக இருந்தார்கள். ஜெயலலிதாவின் கடும் பிரச்சாரம் காரணமாக மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தது சிகிச்சை முடிந்து அமெரிக்காவில் இருந்து திரும்பிய எம்ஜிஆர் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். முதல்வராக எம்ஜிஆர் பொறுப்பேற்ற பொழுது ஜெயலலிதா செய்த பிரச்சாரங்கள் வெளியே தெரியாத அளவிற்கு புறக்கணிக்கப்பட்டது.

ஆனாலும் அது குறித்து கவலைப்படாமல் ஜெயலலிதா தன்னுடைய பணியை தொடர்ந்தார். இந்த நேரத்தில் 1987 ஆம் ஆண்டு எம்ஜிஆர் திடீரென மரணம் அடைந்தார். எம்ஜிஆர் மாதிரி இனி அதிமுகவை வழி நடத்த உறுதியான தலைவர் ஜெயலலிதா தான் என்று இளைய தலைமுறை நம்பி அவர் பின்னால் நின்றனர். ஆனால் மூத்த அமைச்சர்கள், அதிகப்படியான எம்எல்ஏக்கள் அரசியலில் இல்லாத எம்ஜிஆர் மனைவி ஜானகி அம்மாளை முதல்வராக பரிந்துரை செய்து அதிமுகவிற்கு தலைமை ஏற்க வைத்தனர். இதனால் ஏற்பட்ட குழப்பத்தில் அதிமுக ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அதன் பின்னர் அதிமுக ஜா அணி, ஜெ அணி என இரண்டாக பிளவுபட்டது. 89 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக பிளவின் காரணமாக திமுக எளிதாக 12 ஆண்டுகள் கழித்து ஆட்சிக்கு வந்தது.

ஜெ அணி 27 எம்எல்ஏக்களை பெற்றிருந்த நிலையில் ஜானகி படுதோல்வி அடைந்தது. அரசியல் குறித்த அனுபவம் இல்லாத தனது தலைமையின் கீழ் அதிமுகவை கட்டமைக்க முடியாது, எம்ஜிஆர் கண்ட கனவு திமுக வீழ்த்த வேண்டும் என்பதே, அதற்கு ஏற்ற நபர் எம்ஜிஆர் உடன் பயணித்த ஜெயலலிதா தான் என்று உணர்ந்த ஜானகி அம்மாள், ஜெயலலிதாவிடம் கட்சியை ஒப்படைத்து தான் ஒதுங்கிக் கொண்டார். இதன் மூலம் மீண்டும் அதிமுக ஒன்றுபட்டது. இழந்த இரட்டை இலை மீட்கப்பட்டது. இந்த நேரத்தில் ஜெயலலிதா தன்னுடைய ஆளுமையை மீண்டும் நிரூபித்தார் ஒரு சிறந்த தலைவிக்குரிய பண்புடன் தன்னை எதிர்த்த தலைவர்களையும் ஏற்றுக்கொண்டு அதிமுகவை வழி நடத்தினார்.
90 ஆம் ஆண்டு திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. 91 இல் அதிமுக மீண்டும் தேர்தலில் பெரு வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அதுவரை அரசியலில் தனது அனுபவத்தின் மூலம் பயணித்து வந்த ஜெயலலிதா, ஆட்சி கட்டிலில் அமர்ந்த போது தடுமாறித்தான் போனார். அதிகாரிகளின் தவறான வழிகாட்டலும், உடன் நிற்பவர்களின் போதனைகளும் ஜெயலலிதாவை வெளிஉலகம் தெரியாத முதல்வராக மாற்றியது. இதனால் விரைவில் மக்களின் வெறுப்பை ஜெயலலிதா சம்பாதித்தார். இது குறித்து அறியாத ஜெயலலிதா அதிகாரிகள் சொன்னதை நம்பி நல்லாட்சி நடப்பதாக நினைத்துக் கொண்டிருந்தார்.
வெளியில் திமுக அதன் ஊடகங்கள் மூலம் ஜெயலலிதா குறித்த பல்வேறு பிரச்சாரங்களை செய்து வந்தது. இந்த நிலையில் 96 தேர்தலில் ஜெயலலிதா பெரும் தோல்வியை அடைந்தார். 2 இடங்களில் நின்ற அவரே தோற்றுப்போனார். இதனால் அவரை விட்டு உடன் இருந்த பலரும் விலகி ஓடினர். இதோடு ஜெயலலிதா கதை முடிந்தது, அதிமுகவின் கதை முடிந்தது என்று அனைவரும் கணக்கு போட்டனர். இந்த நேரத்தில் தான் ஜெயலலிதாவின் ஆளுமை வெளிப்பட்டது. தான் செய்த தவறுகளை அவர் எடை போடத் தொடங்கி, அதற்கான மாற்றத்தை தேட தொடங்கினார்.

இந்த நேரத்தில் தான் அவருக்கு சோதனையாக கைது செய்யப்பட்டு 28 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். தான் கைது செய்யப்பட்ட பொழுதும் எவ்வித பயம், பதட்டமின்றி போலீசருடன் ஒத்துழைத்து அவர் சிறைக்கு சென்ற காட்சிகள் இன்றும் சமூகவலைத்தளங்களில் கிடைக்கின்றது. அதில் அவரது ஆளுமையை காணலாம் போலீசார் உடன் சிறிது நேரம் பேசிவிட்டு ஒரு ஐந்து நிமிடம் நேரம் கிடைக்குமா என்று கேட்டு தயாராகி வந்து பின்னர் போலீஸ் வாகனத்தில் ஏறி சிறைக்கு செல்வார். இப்படிப்பட்ட ஒரு நடத்தையை வேறு யாரிடமும் பார்த்திருக்க முடியாது.
அதேபோல் சிறைவாசத்திற்கு பின் வெளியில் வந்த ஜெயலலிதா கட்சியை கட்டமைப்பதில் கவனம் செலுத்தினார். மீண்டும் களத்தில் இறங்கிய ஜெயலலிதா 98 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து 30 இடங்களை பெற்றார். குறுகிய காலத்தில் அதிமுக ஒன்றும் இல்லாமல் போய்விடும் என்ற அனைவரும் கணக்கு போட்ட நிலையில் மீண்டும் அதிமுக ஜெயலலிதா தலைமையில் புத்துணர்ச்சி பெற்றது. அதன் பிறகு 2001 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தன் தோல்விக்கு காரணமான மூப்பனாரை ஒன்றிணைத்து வெளியில் ஓடிய தலைவர்கள் மீண்டும் வந்த போது அவர்களை அரவணைத்துக் கொண்டு தேர்தலில் நின்று 2001 இல் மீண்டும் ஆட்சியை கைப்பற்றினார்.

ஜெயலலிதாவின் இந்த முயற்சி அவர் ஒரு ஆளுமைமிக்க தலைவர் தோல்வி வந்தாலும் துவளாதவர் என்பதை மீண்டும் எடுத்துக்காட்டியது. அதன் பின்னர் ஜெயலலிதா தோல்வி, வெற்றி என மாறி மாறி பயணப்பட்டாலும் தன்னுடைய ஆளுமை குணத்தை மட்டும் விட்டதில்லை. திமுக போன்ற பெரிய கட்சிகள் ஜெயலலிதாவை மட்டுப்படுத்த வேண்டும் என்று அவரை பல வகையில் சிறுமைப்படுத்திய போதும் கொஞ்சம் கூட அசராமல் எதிர் கருத்துக்களை கூறி அனைவரையும் எதிர்கொண்டவர் ஜெயலலிதா.
தனது உடல் நலம் பாதித்த நிலையில் அமெரிக்காவிற்கு சென்று சிகிச்சை பெற வேண்டிய நிலையில் தான் இருந்தார். ஆனால் அப்போது இந்த அரசியல் சூழ்நிலை அவர் சிகிச்சைக்கு செல்வதை தள்ளிப் போட்டார். இதனால் அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலை ஏற்பட்டது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா 75 நாட்கள் சிகிச்சையில் இருந்த நிலையில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார்.

தான் இருக்கும் வரை அதிமுகவை தனது ஆளுமையின் கீழ் ஜெயலலிதா வைத்திருந்தார் என்று சொல்லலாம். அவரை மீறி அதிமுகவில் யாரும் சிந்திக்க முடியாது. ஆணாதிக்கம் நிறைந்த உலகில் ஒரு பெண்மணி ஒரு கட்சியை 30 ஆண்டுகளுக்கு மேலாக தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது என்பது சாதாரண காரியம் அல்ல. அதற்கு அதீத துணிவும் அபாரமான அறிவாற்றலும் வேண்டும். அது ஜெயலலிதாவிடம் நிரம்பவே இருந்தது என்று சொல்லலாம்.

ஜெயலலிதா ஒரு உறுதியான இரும்பு பெண்மணி அதிகாரம் மிக்கவர் என்றெல்லாம் பலரும் எண்ணினாலும் மறுபுறம் நமது ஆட்சியில் பெண்கள் குழந்தைகள் உள்ளிட்டோருக்கு நல திட்டங்கள் கிடைக்க வேண்டும் என்பதில் அதிக அக்கறை காட்டினார். தொட்டில் குழந்தைகள் திட்டம் தொடங்கி தாலிக்கு தங்கம், இலவச லேப்டாப், பள்ளி மாணவர்களுக்கான திட்டங்கள், அம்மா உணவகம், விலையில்லா கறவை மாடுகள் என ஜெயலலிதா கொண்டு வந்து திட்டங்கள் ஒவ்வொன்றும் பேசப்படும் திட்டங்கள் என்று சொல்லலாம். தமிழகத்தின் உரிமைக்காக டெல்லியில் சட்டம் மூலம் சண்டை இடுவதிலும் ஜெயலலிதா முதன்மையாக இருந்தார். 69 சதவீத இட ஒதுக்கீட்டை பட்டியலில் இணைத்ததும், காவிரி பிரச்சனைக்காக சட்ட போராட்டம் நடத்தி வென்றதும் ஜெயலலிதாவின் ஆளுமைக்கு உதாரணமாக சொல்லலாம்.

ஜெயலலிதா என்றால் ஆளுமை, ஜெயலலிதா என்றால் நம்பிக்கை, ஜெயலலிதா என்றால் எதிர்காலம் என்று அதிமுகவினர் நம்பி இருந்த நிலையில் அவரது மறைவு அதிமுகவுக்கு பெரும் இழப்பு என்று சொல்லலாம். இதைப் பயன்படுத்தி வலதுசாரிகள் உள்ளே நுழைவதும் நடக்கிறது. ஜெயலலிதாவின் வாழ்க்கை, அவரது ஆளுமையை பார்க்கும்போது இனி ஒருவர் அப்படி வருவாரா என்பது அசாத்தியமே.
இதையும் படிங்க: ஆடு, ஓநாய் குறித்து இபிஎஸ்-யிடம் கேளுங்கள்... செங்கோட்டையன் பாய்ச்சல்...!