முதல் நாள் முதல் காட்சி என்றாலே ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு அளவு இருக்காது. ஆனால் அஜித் ரசிகர்கள் விடாமுயற்சி திரைப்பட ரிலீஸின் போது செய்த பல்வேறு காரியங்கள் முகம் சுழிக்க வைப்பதாக அமைந்துள்ளது.
மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்குமார், ஆரவ், த்ரிஷா, அர்ஜுன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ‘விடாமுயற்சி’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இப்படத்திற்கான சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்த நிலையில், அதிகாலை முதலே அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அஜித் திரைப்படம் வெளியாவதால் ஃபுல் செலிபிரேஷன் மூடில் இருக்கும் ஏகே ஃபேன்ஸ், கொண்டாட்டம் என்ற பெயரில் எல்லை மீறியுள்ளது சோசியல் மீடியாவில் விமர்சனங்களைக் குவித்து வருகிறது.

துபாயில் நடைபெற்ற கார் ரேஸில் 3வது இடம் பிடித்த நடிகர் அஜித்குமார் பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அஜித் வாழ்க... விஜய் வாழ்க... என்கிறார்கள்... எப்போது நீங்கள் வாழப்போகிறீர்கள்...” என ரசிகர்களுக்கு அட்வைஸ் கொடுத்தார். அதுமட்டுமல்ல தன்னை “கடவுளே அஜித்” என அழைக்க வேண்டாம் என்றும், ரசிகர்கள் தங்களது குடும்பத்திற்கு தான் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அவ்வப்போது கடிவாளம் போட்டுக்கொண்டு தான் இருக்கிறார். ஆனால் அஜித் ரசிகர்கள் தான் அவரது அட்வைஸை காதில் வாங்கியதாக தெரிவதில்லை.
இதையும் படிங்க: விடாமுயற்சி படத்திற்கு வெறித்தன வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்!
திறந்தவெளி ஜீப்பில் குத்தாட்டம்:
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு திரையரங்குகளில் நடிகர் அஜித் நடித்த விடாமுயற்சி திரைப்படம் திரையிடப்பட்டது. இதனைக் காண வந்த அஜித் ரசிகர்கள் திறந்தவெளி ஜிப்பில் ஊர்வலமாக வந்து ஆட்டம், பாட்டத்துடன் அலப்பறையில் ஈடுபட்டனர். அத்துடன் அஜித் இனி தன்னை கூப்பிடக்கூடாது எனக்கூறியிருந்த “அஜித்தே.. கடவுளே..” என்ற கோஷங்களை எழுப்பி திரையரங்கு வளாகத்தில் வட்டமடித்தனர்.

காலை 10:30 மணி காட்சிகள் ஆரம்பம் என அறிவிக்கப்பட்ட நிலையில் அதிகாலை முதல் தியேட்டருக்கு வந்த ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், தாரை தப்பட்டை அடித்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதேபோல் தஞ்சாவூரில் காரின் மீது அமர்ந்து கொண்டும், தொங்கிக்கொண்டும் அஜித் ரசிகர்கள் ரவுண்ட் அடித்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தியேட்டர் வளாகத்திற்குள்ளேயே பைக் வீலிங் செய்த காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. மேலும் “கடவுளே அஜித்தே... உயிரே அஜித்தே...” என கும்பலாக கூடி நின்று கோஷங்களை எழுப்பி அலப்பறை செய்தனர்.
பீர் அபிஷேகம்:
தனது கட் அவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்ய வேண்டாம் என அஜித்குமாரே சொல்லியிருக்கும் நிலையில், அவரது ரசிகர்கள் ஒருபடி மேலே போய் விடாமுயற்சி பட கட் அவுட்டிற்கு பீரால் அபிஷேகம் செய்து அதிர்ச்சி கொடுத்துள்ளனர். புதுக்கோட்டையில் ஆர்கேபி, சாந்தி, விஜய் ஆகிய மூன்று திரையரங்குகளில் காலை 10:45 மணிக்கு விடாமுயற்சி திரைப்படம் திரையிடப்பட்டது. மற்ற மாவட்டங்களில் காலை 9 மணிக்கு சிறப்பு காட்சி திரையிடப்பட்டாலும் புதுக்கோட்டையில் வழக்கமாக ஒளிபரப்பப்படும் காட்சிகள் மட்டுமே ஒளிபரப்பாகி வருகிறது.

இந்நிலையில் விடாமுயற்சி படத்தை வரவேற்று அஜித் ரசிகர்கள் புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஆர்கேபி திரையரங்கு முன்பு வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பதாகையில் உள்ள அஜித்தின் படத்திற்கு மலர் தூவி பீராலும் பாலாலும் அபிஷேகம் செய்தும், மேல தாளங்கள் முழங்க பட்டாசுகள் வெடித்து ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை அம்பத்தூரில் உள்ள ராக்கி திரையரங்கில் அமைக்கப்பட்டிருந்த அஜித்தின் 50 அடி உயர கட் அவுட்டிற்கு ரசிகர் ஒருவர் பீர் அபிஷேக செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. குறிப்பாக 12 மணிக்கு தான் டாஸ்மாக் கடை திறக்கப்படும் நிலையில், தியேட்டருக்கு எதிரே இருக்கும் டாஸ்மாகில் காலை 10 மணிக்கே கள்ளச்சந்தையில் பீரை வாங்கி வந்து அந்த நபர் அபிஷேகம் செய்துள்ளது காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அரிய வகை மரபணு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உயிரைக் காக்க ஒருபுறம் கோடிக்கணக்கில் நிதி திரட்டி வரும் அஜித் ரசிகர்கள் மத்தியில், இப்படி பீர் அபிஷேகம், பால் அபிஷேகம், பட்டாசு என உழைத்துச் சம்பாதித்த பணத்தை கறியாக்கும் ரசிகர்களும் இருப்பது வேதனை அளிப்பதாக உள்ளது.
இதையும் படிங்க: போடுறா வெடிய...! தமிழக அரசு வெளியிட்ட தடாலடி அறிவிப்பு... உற்சாகத்தில் துள்ளி குதிக்கும் அஜித் ஃபேன்ஸ்!