மக்களவை, மாநிலங்களவை என இரண்டு வகை அமைப்புகள் நமது நாடாளுமன்றத்தில் உள்ளது. நேரடியாக மக்களால் தேர்வு செய்யப்படுபவர்கள் மக்களவை உறுப்பினர்கள் ஆவர். இந்தியாவில் 543 பேர் ஐந்தாண்டுக்கு ஒருமுறை தேர்வு செய்யப்படுகின்றனர். தமிழகத்தில் 39 மக்களவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
அதேபோல் தமிழகத்திற்கு மாநிலங்களவை உறுப்பினர்களாக 18 பேர் உள்ளனர். இவர்கள் பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும். இவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படுகின்றனர். 18 உறுப்பினர்கள் 3 பிரிவுகளாக 6 பேர் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்வு செய்யப்படுகின்றனர்.
இந்தியாவின் மொத்த மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை 245 ஆக உள்ளது. இவர்களில் 233 உறுப்பினர்கள் மாநிலங்களில் இருந்தும், யூனியன் பிரதேசங்களில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். பல்வேறு துறை வித்தகர்கள் 12 உறுப்பினர்களை ஜனாதிபதி நியமிக்கிறார். அதில் நம் இளையராஜாவும் ஒருவர்.
இதையும் படிங்க: திமுக கூட்டணியில் வைகோவுக்கு மீண்டும் எம்.பி. பதவி..? வைகோ சொன்ன பளிச் பதில்..!

இதில் 2019 ஆம் ஆண்டு 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை அடிப்படையில் 4 பேர் (எம்.எம்.அப்துல்லா, வில்சன், சண்முகம், வைகோ) அதிமுக சார்பில் 2 பேர் ( சந்திர சேகரன், அன்புமணி ராமதாஸ்) பதவி காலம் முடிவடைகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் அன்புமணி பாஜகவுடன் இணைந்து போட்டியிட்டதால் இம்முறை அவர் அதிமுக கூட்டணியில் இல்லை. அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒரு ராஜ்ய சபா எம்.பி என வாய்மொழி வாக்குறுதி தந்ததாக கூறப்பட்டது.

அதனால் தேமுதிகவுக்கு சொன்னப்படி ராஜ்ய சபா சீட்டு கொடுக்கப்படும் என இதுவரை அதிமுக வாய் திறக்கவில்லை. ஆனால் பிரேமலதா முந்திக்கொண்டு ஒரு ராஜ்ய சபா சீட்டு பேசியபடி கிடைக்கும் என்று பேட்டி அளித்தார். தேமுதிகவுக்கு வாக்களித்தப்படி கிடைத்தால் அது விஜய பிரபாகரனுக்கு கிடைக்க வாய்ப்புண்டு. அதேபோல் திமுகவில் இம்முறை மீண்டும் வில்சன், எம்.எம்.அப்துல்லா போன்றோருக்கு திரும்ப கிடைக்கும் என கூறப்படுகிறது.

தொமுச தலைவர் சண்முகத்துக்கு மீண்டும் வாய்ப்பில்லை, அதேபோல் வைகோவுக்கு மீண்டும் வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது, ஆனாலும் வைகோ மீண்டும் போராடி வாங்குவார் என்கின்றனர். ஆனால் அந்த இடத்தை திமுகவில் ஒருவருக்கும், சண்முகம் இடத்தை வாக்களித்தப்படி கமல்ஹாசனுக்கும் கொடுக்கலாம் என்கின்றனர். அதே நேரம் உதய்நிதி ஸ்டாலின் திடீரென கமல்ஹாசனை சந்தித்து பேசியதன் மூலம் கமல்ஹாசனுக்கு வேறு ஏதோ சால்ஜாப்பு சொல்லி சமாதானப்படுத்தும் முயற்சியில் திமுக இறங்கியுள்ளதாக திமுகவுக்குள் பேசிக்கொள்கின்றனர்.

இதனிடையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகத்தில் ஒரு ராஜ்ய சபா உறுப்பினர் திமுக சார்பில் அளிக்கப்படும், ஆனால் அது சமீப ஆண்டுகளாக அளிக்கப்படவில்லை. இந்த முறை அதை கேட்டுப்பெற அகில இந்திய பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் சென்னை வந்து முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. ஆனால் பேசியபடி கமல்ஹாசனுக்கு ராஜ்யசபா எம்.பி பதவி அளிக்கப்படும் அதில் மாற்றம் இல்லை என மக்கள் நீதி மய்யத்தினர் தெரிவிக்கின்றனர். ஆகவே கமல், வைகோ, விஜய பிரபாகரன் ராஜ்ய சபா உறுப்பினர் ஆவார்களா பொறுத்திருந்து பார்ப்போம்.
இதையும் படிங்க: திமுக அரசை அகற்றணும்.. கூட்டணியிலிருந்து வெளியே வாங்க.. சிபிஎம், விசிகவுக்கு பாஜக பகிரங்க கோரிக்கை!