அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி இல்ல திருமண விழாவில் பங்கேற்க சென்ற பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தடபுடலான வரவேற்பு கொடுத்தது எடப்பாடி பழனிசாமியை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
அதிமுக தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ் பி வேலுமணியின் மகன் விஜய் விகாசுக்கும், தீக்ஷனா என்பவருக்கும் கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள பிரபல மஹாலில் இன்று திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களான தங்கமணி, செங்கோட்டையன், எம்.எல்.ஏ க்கள் மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்கள் நேரில் கலந்து கொண்டனர். அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், நடிகர், நடிகைகள் என பல்வேறு தரப்பினரும் விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

மேலும் பா.ஜ.கவை சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜன், எல்.முருகன், குஷ்பூ மற்றும் மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் எஸ்.பி வேலுமணியின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டனர். குறிப்பாக பாஜக மாநிலத் தலைவர் திருமண மண்டபத்திற்குள் மாஸாக என்ட்ரி கொடுத்த போது, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எழுந்து நின்று மரியாதையாக வரவேற்றனர். அதிலும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி வரும், செங்கோட்டையன், தங்கமணி ஆகியோர் கூட அண்ணாமலையை எழுந்து நின்று வரவேற்றதும், சிரித்த முகத்துடன் நலம் விசாரித்ததும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: அடப்பாவமே... அதிமுகவிற்கு இப்படியொரு நிலையா?... கூட்டத்திற்கு ஆள் சேர்க்கப்பதற்காக அதிரடி அறிவிப்பு...!

2026ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வர உள்ள நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தைகள் தற்போதே கலைக்கட்ட ஆரம்பித்துள்ளன. திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் இணக்கமான சூழ்நிலை கடைபிடித்து வரும் நிலையில், அதிமுக - பாஜக இடையிலான அரசியல் சூழ்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. வர உள்ள சட்டமன்ற தேர்தலை மனதில் கொண்டாவது அதிமுக- பாஜக இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அதிமுக முன்னாள் அமைச்சர்களும், முக்கிய நிர்வாகிகளும் பாஜகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என விரும்பினாலும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதனை விரும்பவில்லை எனக்கூறப்படுகிறது.

ஒரு பக்கம் கூட்டணி தொடர்பான குடைச்சல் என்றால், மற்றொரு பக்கம் உட்கட்சி பிரச்சனைகளில் சிக்கித் தவித்து வருகிறார். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலரும் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூட எடப்பாடி மீதான தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

இதனிடையே, அதிமுக - பாஜக இடையே கூட்டணியை மீண்டும் துளிர்விட வைக்க எஸ்.பி.வேலுமணி முயன்று வருவதாகவும், இதனால் அவர் மீது எடப்பாடி பழனிசாமி கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம். அதனை உறுதிப்படுத்தும் வகையில் ஈஷா யோகாவில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் பங்கேற்றார். அதன் தொடர்ச்சியாகவே தனது மகன் திருமண விழாவில் ஏராளமான பாஜக முக்கிய தலைவர்களை எஸ்.பி.வேலுமணி அழைத்ததாக கூறப்படுகிறது. இதனால் தான் இந்த திருமண நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவில்லை எனக்கூறப்படுகிறது.
இதையும் படிங்க: நீங்க 2001இல்தான் எம்.எல்.ஏ... நான் 1989இலேயே எம்.எல்.ஏ.. ஓபிஎஸ் சொந்த ஊரில் மாஸ் காட்டிய இபிஎஸ்..!