''நான் பேசிய கருத்தை வேறுவிதமாக எதிர்க்கட்சிகள் திரித்து பரப்புகின்றனர். நான் பயன்படுத்திய வார்த்தை உங்கள் மனதை காயப்படுத்தி இருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன்'' என திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மன்னிப்பு கேட்டுள்ளார்.
சென்னை வண்ணாரப்பேட்டை போஜராஜன் நகரில் நேற்று இரவு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 72 வது பிறந்தநாள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பகுதி செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி நடிகர் விஜய் பற்றி பேசிவிட்டு, ''தொப்பி போட்டு இஸ்லாமியர்கள் எச்சை சோறுகள்'' என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், நேற்றைக்கு முன்தினம் ராயபுரம் மேற்கு பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில், நான் பேசியபோது, ''கலைஞர் அவர்கள் இஸ்லாமிய இயக்கங்களுக்கும், இஸ்லாமிய மக்களுக்கும் என்னென்ன சாதனைகளை, நன்மைகளை உதவிகளை செய்திருக்கிறார் என்று பட்டியலிட்டேன்.
இதையும் படிங்க: முஸ்லீம்கள் 'எச்சச்சோறு...' தரக்குறைவாகப்பேசிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி: ஒன்று திரண்ட இஸ்லாமியர்கள்..!
அப்போது, முஸ்லிம் மக்களை எப்படி எல்லாம் ஏமாற்றி அவர்களால் எனக்கு ஆபத்து இருக்கிறது என்று சொல்லி பாதுகாப்பு கேட்டார் விஜய்? அவரின் உண்மை முகத்தை தோல் உரித்து காட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் நான் பேசுகின்ற போது முஸ்லிம் மக்களை நான் ஏதோ இழிவு படுத்தி விட்டதாக அறிந்து கொள்கிறார்கள்.

அதை சில பேர் இட்டுக்கட்டி பரப்பரை செய்கிறார்கள். நான் வாழுகின்ற பகுதி முஸ்லிம் நிறைந்த பகுதி. என் வீட்டின் அருகில் இருப்பது மசூதி. ஆகவே எனக்கு ஓட்டுனராக, என்னை கண்காணிப்பவராக என் நலம் சார்ந்து இயங்கும் நலம் விரும்பிகளாக முஸ்லிம் மக்கள் இருக்கிறார்கள். ஆகவே முஸ்லிம் மக்கள் மீது எனக்கு எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லை. ஆதங்கத்தில் கேட்டேனே தவிர, அதில் வார்த்தை தடுமாறி இருந்தால் அதற்காக என் வருத்தத்தை பதிவு செய்கிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.
''தேர்தல் நெருங்கிவரும் சூழலில் பத்த வைக்க ஒரு குண்டூசியாவது கிடைக்காதா என திமுக-வை கண்ணில் விளக்கெண்ணெய் இட்டு கூர்ந்து நோக்கும் எதிர்க்கட்சிகளுக்கு நாமே தீனி போட்டுவிடக்கூடாது சிவாஜிண்ணே... இந்து முஸ்லிம் கிறிஸ்தவர் என பிரித்துப் பார்க்காத பிரியமான இயக்கம் திமுக என்பது பிஞ்சு குழந்தைகளுக்கும் தெரியும்.

இஸ்லாமியர்களை எச்சை சோறு திங்கலாம்னு நீ பேசின. ஆனால், உன் கேவலமான பேச்சை எதிர்க்கட்சிகள் திரித்து பரப்புகின்றனர் என வாய்கூசாமல் பேசுறீயே'' என அவரது பதிவுக்கு கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கராத்தே மாஸ்டருக்கு உதவிக்கரம் நீட்டிய தமிழக அரசு!