தமிழகத்தில் கொலை, கொள்ளை மற்றும் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதற்கு முக்கியமான காரணமாக போதை பழக்கங்கள் பார்க்கப்படுகிறது. கஞ்சா, அபீன், கொக்கைன் போன்ற போதைப்பொருள்கள் புழக்கத்தில் அதிகம் கிடைப்பதால் இளைஞர்கள் எளிதில் பாதை மாறி செல்லும் சம்பவங்களும் ஆங்காங்கே அரங்கேறி வருகின்றன. இதனை கட்டுக்குள் கொண்டுவர, தமிழக போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

கஞ்சா புழக்கத்தை கட்டுக்குள் கொண்டு வர கஞ்சா ஆப்ரேஷன் 1.0, கஞ்சா ஆப்ரேஷன் 2.0, கஞ்சா ஆப்ரேஷன் 3.0 என கஞ்சா ஆப்ரேஷன் 4.0 வரை போலீசார் மேற்கொண்டுள்ளனர். இதில் டன் கணக்கில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு அவர்களின் சொத்துகளும் முடக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் மேற்கொண்டு வரும் தீவிர நடவடிக்கையால் பெருமளவில் கஞ்சா விற்பனை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழகத்தில் கஞ்சா செடி வளர்ப்பும் பெருமளவில் குறைந்துள்ளது. இதனால் வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சா கடத்தி வந்து தமிழகத்தில் விற்பனை செய்வது அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: 7 பேரால் சிதைக்கப்பட்ட சிறுமி! மாணவர்கள் போர்வையில் காம அரக்கன்கள்! கோவையில் கல்லூரி மாணவர்கள் கைது!

வடமாநிலங்களில் இருந்து ரயில் மூலமும், பஸ் மூலமாகவும் பல்வேறு வாகனங்கள் மூலமும் தமிழகத்திற்குள் கஞ்சா கடத்தி வருவது தொடர்வாதால் எல்லைகளில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் கல்லூரி மாணவர்களிடம் இருந்தும் அவ்வப்போது போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள கல்லூரிகளில் போலீசார் அதிரடியாக சோதனை செய்து கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை பறிமுதல் செய்துவருகின்றனர். அந்த வகையில், கோவையில் கல்லூரி மாணவர்கள் வாடகைக்கு எடுத்து தங்கிய வீட்டின் மாடியில் கஞ்சா செடி வளர்த்து வந்தது தெரியவந்துள்ளது.

கோவை, குனியமுத்தூர் மற்றும் கோவைப்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான கல்லூரி மாணவர்கள் தனியாக அறை எடுத்து தங்கி படித்து வருகின்றனர். இப்பகுதியில் போதைப் பொருள்கள் விற்பனை, புழக்கம் குறித்து காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, கோவை மாநகர போலீசார் குனியமுத்தூர், கோவை புதூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் தங்கி இருக்கும் அறைகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின்போது குனியமுத்தூர் பகுதியில் கல்லூரி மாணவர்கள் தங்கியிருந்த அறை ஒன்றில், அவர்கள் அறையில் 24 கஞ்சா செடிகளை கல்லூரி மாணவர்கள் வளர்த்து வந்தது சோதனையில் தெரிய வந்தது. இதனையடுத்து காவல்துறையினர் அந்த 24 கஞ்சா செடிகளையும் பறிமுதல் செய்தனர்.
அறையில் கஞ்சா வளர்த்து வந்த கல்லூரி மாணவர்கள் விஷ்ணு, அனிருத், தனுஷ், அபிநவ் கிருஷ்ணா மற்றும் கலைவாணன் ஆகிய ஐந்து பேரை கைது போலீஸார் செய்தனர். கைது செய்யப்பட்ட மாணவர்களில் கலைவாணனைத் தவிர மற்ற நான்கு பேரும் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட மாணவர்கள் ஐந்து பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: 16 நாட்களும் 24 மணி நேர வீடியோ அழைப்பு... ரூ.1.11 கோடி டிஜிட்டல் மோசடி- கோவையில் டுபாக்கூர் சிபிஐ..!