நாட்டில் பலவிதமான வரிவிதிப்பு முறைகள் உள்ளன, அதை எளிமைப்படுத்தி ஜிஎஸ்டி வரியை அறிமுகம் செய்கிறோம் என்று மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசாங்கம் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்தது. ஒரு தேசம், ஒரு வரி என்ற கொள்கையில் பாஜக அரசாங்கம் அறிமுகம் செய்தும் இதுவரை தெளிவான நிலை இல்லை.
இதுவரை 55முறை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டமும் நடத்தப்பட்டுவிட்டது, ஆனால், ஒவ்வொரு கூட்டத்துக்குப்பின் ஜிஎஸ்டி வரியில் இருக்கும் குழப்பம் அதிகரித்துள்ளதேத் தவிர குறையவில்லை.
எளிமையான வரி எனச் சொல்லப்படும் ஜிஎஸ்டியின் ஆழமான சிக்கல் ஒவ்வொரு கூட்டத்திலும் வெளிப்பட்டு வருகிறது. அதன் சமீபத்திய வெளிப்பாடுதான் பாப்கார்னுக்கான வரியாகும்.
சமீபத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடத்தப்பட்ட 55-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பாப்கார்னுக்கு 3 விதமான வரிகள் விதிக்கப்பட்டன. அதாவது கேரமல் பாப்கார்னுக்கு 18%, பாக்கெட்டில் அடைக்கப்பட்ட மசாலா பாப்கார்னுக்கு 12%, லேபில் செய்யப்படாத பாப்கார்னுக்கு 5% ஜிஎஸ்டி வரி என அறிவிக்கப்பட்டது.

ஏற்கெனவே இதுபோன்ற குளறுபடி சம்பவங்கள் நடந்துள்ளன, குறிப்பாக பேக்கிங் செய்யப்பட்ட பரோட்டாவுக்கு 18% ஜிஎஸ்டியும், ரொட்டிக்கு 5% வரியும் விதிக்கப்பட்டது.
பாரசூட் தேங்காய் எண்ணெ விவகாரத்திலும் குழப்பம் ஏற்பட்டது. உணவுக்கு பயன்படுத்தும் எண்ணெய் என்று பெயரிட்டால் 5% வரியும், தலைமுடி பராமரிப்புக்கான தேங்காய் எண்ணெய் என்று பெயரிட்டால் 18% ஜிஎஸ்டி வரியும் விதி்க்கப்பட்டு நீண்ட சட்டப்போராட்டத்துக்குபின் சமையல் எண்ணெய்க்கான வரி விதிக்கப்பட்டது. டாபர் நிறுவனப் பொருட்கள், கிட்கேட் சாக்லேட் போன்றவற்றின் மீதும் ஜிஎஸ்டி வரி குழப்பங்கள் ஏற்பட்டன ஆனால், தெளிவான விளக்கம் இல்லை. பாலுக்கு வரியில்லை, மில்க் ஷேக்கிற்கு 5%, பாலாடைக்கு 12% வரி, பதப்படுத்தப்பட்ட பாலுக்கு 12% என பாலில் இருந்து எடுக்கப்படும் பொருட்களுக்கும், அதிலிருந்து உருவாக்கப்படும் பொருட்களுக்கு பல்வேறு வரிகள் விதிக்கப்படுகின்றன. ஆனால் லஸி, தயிர், மோருக்கு வரிவிலக்கு இருக்கிறது. நெய், வெண்ணெய், பாலாடைக்கு 12% வரி.
முட்டைக்கு வரியில்லை, முட்டை மஞ்சள்கரு மட்டும் தனியாகவிற்றால் 5% வரி, சென்னா(கொண்டைகடலை), பனீர் ஆகியவற்றை வாங்கினால் வரியில்லை, அதை மசாலா போட்டு சமைத்து பேக்கிங் செய்து விற்பதை வாங்கினால் 5% வரி விதிக்கப்படுகிறது. ஆனால், குறிப்பாக, பூஜைகளுக்கு பயன்படுத்தும் ருத்ராக்சம், பஞ்சாமிர்தம், விபூதி உள்ளிட்ட பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி இல்லை.
கடும் விமர்சனங்கள்
மக்களவைக் குழப்பும் மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி முறையை பொருளாதாரவல்லுநர்களும் கடுமையாக விமர்சித்துள்ளனர். பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி வி சுப்பிரமணியன் தனது எக்ஸ் தளத்தில் “ குழப்பம் என்பது அதிகாரிகளுக்கு மகிழ்ச்சி, மக்களுக்கு கொடுங்கனவு” என விமர்சித்தார்.
முன்னாள் தலைமைப்பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் தனது எக்ஸ் பக்கத்தில் “ இது தேசிய அவலம், ஜிஎஸ்டி என்பத நல்ல(குட்), எளிமையான(சிம்பிள்), வரியாக இருக்க வேண்டிய நிலையில் அதன் தாத்பரியத்தையே மீறுகிறது. குறைந்தபட்சம் நாம் எளிமையான திசையில் செல்வதற்குப் பதிலாக, அதிக சிக்கலான தன்மைக்கும், அமலாக்கத்தில் சிரமத்துக்கும் மற்றும் பகுத்தறிவற்ற தன்மைக்கு மாறி வருவதால், முட்டாள்தனம் மேலும் அதிகரிக்கிறது” என காட்டமாக வமர்சித்திருந்தார்.
இதையும் படிங்க: ஜிஎஸ்டி சர்வர் டவுன்! ரிட்டன் தாக்கல் இன்று கடைசி நாளில் வரி செலுத்துவோர் அவஸ்தை...
ஜிஎஸ்டியால் யார் பாதிப்பு
எளிமையான வரி, மக்களுக்கு சுமை ஏற்றவில்லை, மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பல பொருட்களுக்கு வரியைக் குறைத்துள்ளோம் என்று மத்திய அரசும், நிதி அமைச்சரும் பேசினாலும் உண்மையில் ஜிஎஸ்டிவரி நடுத்தர மக்கள், ஏழை மக்களிடம் இருந்துதான் அதிகமாக கறக்கப்படுகிறது.
2023ம் ஆண்டு ஆக்ஸ்ஃபாம் அறிக்கை “Survival of the Richest: The India Story” என்ற தலைப்பில் வெளியானது. அதில் இந்தியாவில் உள்ள மக்கள் தொகையில் அடித்தளத்தில் உள்ள 50% மக்கள்தான், 10 சதவீத கோடீஸ்வரர்களுடன் ஒப்பிடும்போது, 6 மடங்கு அதிகமாக மறைமுக வரி செலுத்துகிறார்கள் எனத் தெரிவித்திருந்தது.
ஜிஎஸ்டி வரியில் உள்ள குழப்பங்களைத் தீர்க்க 2021 செப்டம்பரில் மாநில நிதிஅமைச்சர்களைக்(GOM) கொண்ட குழு அமைக்கப்பட்டது. 3 ஆண்டுகள் ஆகியும், ஜிஎஸ்டி வரி முறையில் இருக்கும் குழப்பங்களை அகற்ற முடியவில்லை.

ஜிஎஸ்டி வரியில் தற்போது 5%, 12%, 18%, 28% ஆகிய படிநிலைகள் உள்ளன. ஆனால், உண்மையில்ஜிஎஸ்டி வரி கொண்டுவந்ததன் நோக்கம் அதிகபட்சம் 3 படிநிலை வரிகள்தான் இருக்க வேண்டும் என்பதுதான். 5-8%, 6-10% எனவும், 10% மேல் வரிவிகிதம் செல்லக்கூடாது என்றும் திட்டமிடப்பட்டிருந்தது என்று ஓபி ஜிண்டால் பல்கலைக்கழகத்தின் பொருளாதார பேராசிரியர் தீபான்சு மோகன் தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறோம் என மத்திய அரசு கூறுகிறது. ஆனால் பெண்கள் பயன்படுத்தும், சானிடரி நேப்கின், டாம்பான்ஸ், நேப்கின் லைனர் ஆகியவற்றுக்கு 12% வரி விதிக்கப்பட்டு 2018 முதல் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், நாப்கின் தயாரிக்கப்படும் கச்சா பொருட்களான பாலிஎத்திலின் பிலிம், பசை, பேக்கிங் கவர் ஆகியவற்றுக்கு 18% வரியும், தெர்மல் பாண்ட், பேப்பர், உள்ளிட்டவற்றுக்கு 12% வரியும் விதிக்கப்படுகிறது.
கல்வி தொடர்பான பெரும்பாலான சேவைகளுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டாலும், வர்த்தகரீதியான பயிற்சி, கோச்சிங் சேவைகளுக்கு 18% வரி விதிக்கப்படுகிறது. பள்ளிக் குழந்தைகள் பயன்படுத்தும் கிரையான்ஸ், பென்சில், பேஸ்டல், கலர் கிரையான்ஸ் ஆகியவற்றுக்கு 12% வரி, பேனாக்களுக்கு 18% வரி விதிக்கப்படுகிறது.
மக்கள் வருமான வரி விலக்கிற்காகவும், வாழ்நாள் பாதுகாப்புக்காகவும் எடுக்கப்படும் காப்பீடுகளுக்கு 18 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. இந்த 18% பிரிவிலிருந்துதான் 70 முதல் 75% வரி 2023-24ம் ஆண்டில் கிடைத்துள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்திலும் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் ஜிஎஸ்டி கவுன்சிலில் செய்யப்பட்ட திருத்தத்தின்படி, பழைய கார்களை விற்பனை செய்யும் போதுவிதிக்கப்பட்டிருந்த 12 சதவீத வரி தற்போது 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஆக ஒட்டுமொத்த மறைமுக வரியில் 64.3% வரியை ஏழைமக்களில் 50 சதவீதம் பேர் செலுத்துகிறார்கள். 31.8 சதவீதத்தை, நடுத்தர மக்களில் 40 சதவீதம் பேர் செலுத்துகிறார்கள். 3.9 சதவீதத்தைதான் வசதிபடைத்த 10 சதவீதம் பேர் செலுத்துகிறார்கள். நாட்டில் பொருளாதார இடைவெளி வளர்ந்து கொண்டே வருகிறது, சமத்துவமின்மை அதிகரித்து வருகிறது என ஆக்ஸ்ஃபாம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி வரியில் யாருக்கு லாபம்
கொரோனா தொற்று காலத்தில் கச்சா எண்ணெய் வரலாற்றில் இல்லாத அளவு சரிந்தது. ஆனால், அப்போதும் இந்தியர்கள் பெட்ரோலுக்கு 59 சதவீதமும், டீசலுக்கு 49 சதவீத வரியும் செலுத்த வேண்டியிருந்தது.
எந்த ஒருபொருளுக்கும் ஜிஎஸ்டி வரி வசூலிக்கம்போதும் சரிபாதியாக பிரிக்கப்பட்டு மாநில ஜிஎஸ்டி வரி, மத்திய ஜிஎஸ்டி வரி என்று பிரித்து பில்போடப்படுகிறது. இதில் மாநில அரசுக்கு பாதித் தொகையும், மத்திய அரசுக்கு கிடைக்கும் தொகையில் குறிப்பிட்ட சதவீதமும் மாநில அரசுகளுக்கு கிடைக்கிறது. ஆதலால், ஜிஎஸ்டிவரியால் அதிகமாக வருவாயை மாநில அரசுகள்தான் ஈட்டுகின்றன.
பெட்ரோல் மற்றும் டீசலை எந்தவிதமான வரியுமின்றி மக்களுக்கு நேரடியாக விற்றால் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.55.66 பைசாவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.56.42 ஆகவும் விற்பனை செய்ய முடியும்.
ஆனால், பெட்ரோல் மீது 55 சதவீத வரியும், டீசல் மீது 50 சதவீதமும் மத்திய அரசு வரிவிதித்துள்ளது. அதாவது பெட்ரோல் மீது கலால் வரியாக லிட்டருக்கு ரூ.19.90 காசுகளும், டீசலுக்கு லிட்டருக்கு ரூ.15.80 காசுகளும் வரிவிதிக்கப்படுகிறது.
இது தவிர ஒவ்வொரு மாநிலமும் பெட்ரோல், டீசல் மீது விற்பனை வரி, வாட் வரி, உள்ளிட்ட பலவரிகளை விதிக்கின்றன. அந்த வகையில் தமிழகத்தில் பெட்ரோல் மீது 13% வாட் வரி அல்லது லிட்டருக்கு ரூ.11.52 காசுகளும், டீசல் மீது 11% வாட் வரி அல்லது லிட்டருக்கு ரூ.9.62 காசுகளும் வரி விதிக்கப்படுகிறது.
பெட்ரோலின் உண்மையான விலையான ரூ.55.66 விட, வரியாக மக்கள் ரூ.45 வழங்குகிறார்கள். அதேபோல டீசல் லிட்டர் ரூ.56.42 விட, வரியாக மக்கள் ஏறக்குறைய 40 ரூபாய் வழங்குகிறார்கள். இதில் மக்களை வரியால் வாட்டி வதைப்பதில் மத்திய அரசுகளுக்கு இணையாக மாநில அரசுகளின் பங்கும் இருக்கிறது.
இதையும் படிங்க: அது 'ஜிஎஸ்டி' வரி அல்ல "Give Seetharaman Tax"- வெளுத்து வாங்கிய காங்கிரஸ்