ரிசர்வ் வங்கியின் சில கட்டுப்பாடுகளால் நகைக் கடனை மறு அடமானம் வைப்பதில் ஏழை, எளிய மக்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதேபோல விவசாயிகளும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான எஸ்.குணசேகரன், சங்கப் பொதுச் செயலாளர் பி.எஸ். மாசிலாமணி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், " இந்திய ரிசர்வ் வங்கி என்பது நாட்டின் கடைகோடியில் உள்ள ஏழை, நடுத்தர மக்களின் வாழ்க்கையைப் பற்றிக் கவலைப்படாத அமைப்பு என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது.

ரிசர்வ் வங்கி அண்மையில் அமல்படுத்திய புதிய கொள்கையால், விவசாயிகள், ஏழை, நடுத்தர மக்களுக்கு, அவசரத் தேவைக்கு நகை ஈட்டுக் கடன் கிடைக்காத நிலை ஏற்பட்டிருக்கிறது. புதிய அறிவிப்பின்படி, நகை அடமானம் வைத்து பெறப்பட்ட கடன் தொகையை வட்டியுடன் ஓராண்டு முடிவில் முழு தொகையையும் திருப்பிச் செலுத்த வேண்டும். இந்த நகையை மறு அடமானம் வைத்து கடனைப் புதுப்பிக்க முடியாது.
ஏனெனில் வாங்கிய கடனுக்கான காலக்கெடு முடிந்தால், ஒரு நாள் கழித்துதான் இக்கடனை புதுப்பிக்க முடியும் என்று அறிவிப்பு வந்துள்ளது.

ஓராண்டுக்குள் கடன் தொகையை வட்டியுடன் முழுமையாக செலுத்தியாக வேண்டும். இந்தக் காலக்கெடுவுக்குள் அடகு வைத்த நகையை மீட்க முடியாது போனால், அடுத்த நாளே அந்த நகையை ஏலம் விடுவதற்கான ஏற்பாட்டை வங்கிகள் தொடங்கிவிடும். இதுவரை பெற்ற நகைக் கடனை செலுத்த இயலாதவர்கள், அதே நகைக் கடனை புதுப்பித்து மறுகடன் பெற்று வந்தார்கள், புதிய அறிவிப்பின்படி இனி கடன் பெற முடியாது. விவசாயிகள், சிறு வியாபாரிகள், நடுத்தர, சாமானிய மக்களுக்கு நகைக்கடன் மட்டுமே அவசரத் தேவைக்கு உதவியாக அமைகிறது. இப்பொழுது இது தடை செய்யப்படுகிறது. எனவே, புதிய அறிப்பை மறுஆய்வு செய்து, பழைய நடைமுறையே தொடர அனுமதிக்க வேண்டும்." என்று அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: வங்கிக் கணக்கில் இவ்வளவு பணத்தை டெபாசிட் செய்தால்.. அபராதம் கட்டணும்.. உங்களுக்கு தெரியுமா?
இதையும் படிங்க: ஏப்ரல் முதல் வங்கிகள் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே இயங்குமா? அரசின் முடிவு என்ன?