நரை, திரை, மூப்பு ஒருவருடைய வயதை யாரும் சொல்லாமலே அறிவித்து விடும். நரைத்த முடியை பார்த்து அவருக்கு வயதாகி விட்டது, அவரை தொந்தரவு செய்யாதீர்கள் என இயலாத நபராக கருதும் எண்ணம் இன்னும் நம்மிடையே இருந்து வருகிறது. முன்பெல்லாம் ஐம்பது வயதுக்கு மேல் ஒருவருக்கு நரை ஏற்படுவது மாறி இன்றைய காலகட்டத்தில் பதின்வயதினர் முதல் 25, 35 வயது களிலும் கூட நரை முடி ஏற்படுகிறது. இதனால், பதற்றப்பட்டு மருத்துவர்களை சென்று பார்த்து விலை உயர்வான மருந்துகள், ஷாம்புகள் ஆகியவற்றை வாங்கி பயன்படுத்துவார்கள். ஆனாலும் அது சில நாட்களில் பயனற்று போகும்.
இதற்கு மிக முக்கியமான காரணமே உடலில் ஏற்படும் உஷ்ணம் தான் என்று சித்த மருத்துவர்கள் கூறுகிறார்கள். குறிப்பாக நாம் சாப்பிடும் உணவுகளில் அதிக எண்ணெய் பண்டங்களான சிப்ஸ், சமோஸா, போன்ற நொறுக்குத்தீனிகள் எடுத்து கொள்வதும், பொறித்த கோழிக்கறி போன்ற அசைவங்களை தினமும் சேர்த்து கொள்வது முக்கியமான காரணமாக சொல்லப்படுகிறது. எனவே நரை முடி வருவது என்பது நம் உடலில் ஏற்படக் கூடிய குறைபாடுகளை காட்டுகிறது என்பதை நாம் உணர்ந்து செயலாற்ற வேண்டும். அதிகப்படியான உஷ்ணம் மற்றும் பித்தத்தை குறைக்க தினமும் காய்கறிகள், பழங்கள், கீரைகளை உணவில் நாம் சேர்த்து கொள்வது நல்ல பலன் தரும்.

கரிசலாங்கண்ணி கீரையை அவ்வப்போது உணவில் கூட்டாக சேர்த்து வருவது, கரிசலாங்கண்ணி கீரையை வெயிலில் உலர்த்தி பொடி செய்து அதனை தினமும் ஒரு வேளை உணவுக்கு முன் இரண்டு தேக்கரண்டி சுடு தண்ணீரில் கலந்து சாப்பிட்டு வருவது நல்ல பலனைத் தரும், கல்லீரலை நன்கு பலப்படுத்தும், இரத்தத்தை சுத்திகரிக்கும். இது முடிவளர்ச்சியை தூண்டி விடுவதோடு இளநரையை கட்டுப்படுத்தும். கரிசலாங்கண்ணி கீரையை தேங்காய் எண்ணெயுடன் நன்றாக காய்ச்சி அந்த தைலத்தை தினமும் தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் முடி வேர்களை பலப்படுத்தும்.
இதையும் படிங்க: பொடுகு தொல்லையா? இதை பண்ணுங்க...

நெல்லிக்காய் பல பெரிய நோய்களுக்கும் கூட சிறப்பான மூலிகையாக செயல்படுகிறது. குறிப்பாக வயோதிகத்தை கட்டுப்படுத்துகிறது. தோல் சுருக்கம், தோல் தளர்ச்சி, தலைமுடி நரைப்பதை கட்டுப்படுத்த தினமும் ஒரு நெல்லிக்காயை நேரடியாக சுவைத்து சாப்பிட்டால் என்றும் இளமையாக இருக்கலாம்.
கருப்பு எள்ளு, கருவேப்பிலை ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொண்டால் அதுவும் இளநரையை தடுக்கும் வல்லமை கொண்டது. அல்லது, திரிபலா சூரணம் (நெல்லிக்காய், தான்றிக்காய்,கடுக்காய் காயவைத்து அரைத்த பொடி) அரை தேக்கரண்டி தினமும் காலை அல்லது மாலை எடுத்து வரலாம்.

இன்றைய சிறிய வீட்டு விசேஷங்களில் இருந்து கல்யாணம் போன்ற பெரிய நிகழ்சிகள் வரை அனைவரும் தலைக்கு அலங்காரம் செய்ய தவறுவதில்லை. அதற்கு அவர்கள் பயன்படுத்தும் ஹெர் ஸ்பிரே, ஸ்டைலிங் ஜெல், ஹெர் ஸ்டெய்ட்னர் போன்ற பொருட்கள் தலைமுடியின் வேர் வரை சென்று சேதத்தை ஏற்படுத்துகிறது. நாம் இயற்கைக்கு மாறான எந்தவொரு செயல்களில் ஈடுபடும்போதும் கண்டிப்பாக அதன் விளைவுகளையும் சேர்த்து நாம் அனுபவிக்க வேண்டும் என்பதை நாம மறக்கக்கூடாது.

முடி முற்றிலும் நரைத்து விட்டால் அதற்கு மருத்துவர்கள் அறிவுறுத்தும் டையை மாதத்திற்கு ஒருமுறை அடித்துக் கொள்ளலாம். கடைகளில் கிடைக்கும் கெமிக்கல் டையும் வேறு சில தோல் நோய்களை உருவாக்கும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
இவ்வாறு நாம் தலைமுடிக்கு கவனம் எடுத்து பராமரித்து வந்தாலே என்றும் இளமையுடன் வாழலாம்.
இதையும் படிங்க: பொடுகு தொல்லையா? இதை பண்ணுங்க...