2026 சட்டமன்றத் தேர்தலை நினைத்து தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் கடும் நடுக்கத்தில் உள்ளன. திமுக கூட்டணி வலுவாக உள்ளதாகவும், அதிமுக கூட்டணியில் வலுவிழந்து உள்ளதாகவும் கூறப்படும் நிலையில், யார் யார் எந்தக் கூட்டணியில் இடம்பெற உள்ளனர் என்பதே தற்போதைய விவாத களமாக மாறியுள்ளது.
விஜய் கட்சியும் களத்தில் இறங்க இன்னும் விர்ர்றென விஸ்வரூபம் எடுத்துள்ளது தமிழக அரசியல் களம்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை, வானகரத்தில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் பிரமாண்ட கூட்டணி அமைக்கப்படும் என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இது எந்த அளவிற்கு சாத்தியம்?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2016 டிசம்பர் மாதம் 5ம் தேதி மறைந்தார். அப்போது இடைக்கால முதல்வர் பதவியில் இருந்த ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக நீக்கப்பட்டது, சசிகலா முதல்வராவார் என்று எதிர்பார்த்திருந்த நேரத்தில், திடீரென நிலுவையில் இருந்த சொத்து குவிப்பு வழக்கை தூசி தட்டிய உச்சநீதிமன்றம் சசிகலாவிற்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.
அதிமுகவை சேர்ந்த அனைத்து எம்எல்ஏகளும் கூவத்தூரில் கூடி 2017ல் பிப்ரவரி மாதம் 16ம் தேதி எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக உருவாக்கியது என்று அப்போது சுமார் 75 நாட்கள் தமிழ்நாடு புதிய அரசியல் நாடகத்தை கண்டு ரசித்தது.
ஒருவழியாக எடப்பாடியாரிடம் ஆட்சி அதிகாரம் வந்ததும் டிடிவி. தினகரனுக்கு முரண்பாடு ஏற்பட்டது. அவர் தலைமையில் 22 எம்எல்ஏக்கள் பதவி விலகினர். 2019ல் அந்த 22 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் அதிமுக 9 இடங்களில் மட்டுமே வென்றது. மீதி 13 தொகுதிகளில் திமுக வெற்றிப் பெற்றது. அப்போது அதிமுக ஆளும் கட்சியாக இருந்தும், பாமக கூட்டணியில் இருந்தும் பெரிய அளவில் வெற்றி பெறமுடியவில்லை. அதன்பிறகு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 39 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தேனியில் மட்டும் ஓபிஎஸ் மகன் அதிமுக சார்பில் வெற்றி பெற்றார். தொடர்ந்து நடந்த கிராமப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக தோல்வியை தழுவியது.
2021ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக சேர்ந்து 75 தொகுதிகளில் வெற்றிப் பெற்றது. இப்படி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வரும் அதிமுக மீண்டும் 2026ல் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்கிற எண்ணம் இருப்பதில் தவறேதும் இல்லை. ஆனால் எதார்த்தம் என்பது இப்போது அந்த கட்சியில் இருக்கும் 65 எம்எல்ஏகள் மீண்டும் வெற்றிப் பெற்றாலே பெரும் சாதனையாக பார்க்கப்படும்.
அந்த அளவிற்காவது வெற்றி பெற்றால் தான் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமை மீது நம்பகத்தன்மை உருவாகும்.
இந்த நிலையில் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் பிரமாண்ட கூட்டணி அமைக்கப்படும் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். இது எந்த அளவிற்கு சாத்தியம்? பொதுவாக கூட்டணி எப்படி அமையும்?
ஒரு கட்சிக்கும் இன்னொரு கட்சிக்கும் கொள்கை அளவில் இயற்கையாக கூட்டணி அமையும். அப்படி அமைகின்ற கூட்டணி மக்களுக்கு பிரச்சினை, பாதிப்பு என்று வரும்போது சேர்ந்து போராட்டத்தில் இறங்குவார்கள். அப்படி போராடும் போது தொண்டர்களும் ஒன்றிணைந்து கொள்வார்கள்.
அதற்கு அடுத்து வானவில் கூட்டணி. மழைக்காலத்தில் மேகத்தில் கூடும் வானவில்லைப் போல் தேர்தல் நெருங்கும் போது கூட்டணி அமைப்பார்கள். தேர்தல் முடிந்ததும் கூட்டணி கலைந்து விடும். அதற்கு உதாரணமாக இந்தியா கூட்டணியை சொல்லலாம். இவர்களின் நோக்கம் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க வேண்டும். இவர்களுக்குள் முரண்பட்ட கொள்கைகள், முரண்பாடான சிந்தனைகள் இருக்கும். வேறு வழியின்றி அவசரமாக கூட்டணி அமைத்து போட்டியிடுவார்கள். தேர்தலுக்கு பின்னர் விலகி விடுவார்கள்.
மூன்றாவது கதம்பம் கூட்டணி அல்லது ஒட்டுத் துணி கூட்டணி என்று கூறலாம். இதற்கு உதாரணமாக 2016ல் அமைந்த மக்கள் நலக் கூட்டணியை சொல்லலாம். தேர்தலில் அவர்கள் வெற்றிப் பெறுகிறார்களோ இல்லையோ, அவர்கள் யாரை வெற்றிப்பெற கூடாது என்று நினைக்கிறார்களோ அவர்களை தோற்கடிக்க அமைகின்ற கூட்டணி. மக்கள் நலக் கூட்டணி 2016ல் திமுகவை வீழ்த்துவதற்காக அமைந்த கூட்டணி. அவர்கள் நினைத்தவாறு அந்த தேர்தலில் திமுக தோல்வி அடைந்தது.
நான்காவது சாதி சங்கங்கள், அமைப்புக்கள் ஒருங்கிணைந்து உருவாக்கும் கூட்டணி. இந்தியாவில் இப்படித்தான் இதுவரை கூட்டணி அமைந்திருக்கிறது. இனியும் இப்படிதான் அமையும். இந்த நிலையில், தமிழ்நாட்டில் இயற்கையாக கொள்கை அளவில் 2017ல் திமுக தலைமையில் உருவானது தான் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி. அந்த கூட்டணி உருவான காலத்தில் இருந்து நீட், இட ஒதுக்கீடு, ஒன்றிய அரசு எதிர்ப்பு என்று பல்வேறு போராட்டங்களை நடத்தி, கூட்டணி கட்சியை சேர்ந்த தொண்டர்களிடையே ஒருவிதமான புரிதலை உருவாக்கி உள்ளது. ஒற்றுமையை ஏற்படுத்தியுள்ளது. அதனால் அந்த கூட்டணி தொடர்ந்து வெற்றியை பெற்று வருகிறது.
அதிமுகவிற்கு அதுபோன்ற வாய்ப்பு இதுவரை எதுவும் இல்லை. அதிமுகவுடன் பாஜக, பாமக கூட்டணி அமைவதற்கும் வாய்ப்பு இல்லை. பாஜகவில் அண்ணாமலை மாநில தலைவராக இருக்கும்வரை எடப்பாடி பழனிச்சாமியுடன் இணைவதற்கு வாய்ப்பு இல்லை. 6 முதல் 8 சதவீதம் வாக்குகள் உள்ள நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. ஒரு வேளை சீமான் கூட்டணி சேர்ந்தால் அவருக்கு ஏற்கனவே கிடைத்த ஓட்டும் கிடைக்காது. மீதி இருக்கும் கட்சி பாமக மட்டும். பாமகவுடன் மட்டும் கூட்டணி அமைத்து வெற்றிப்பெற முடியாது.
இறுதியாக அதிமுக, தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டால் “முதல்வர் வேட்பாளர் யார்?” என்கிற குழப்பம் இருக்கிறது. எவ்வளவு செல்வாக்கு இருக்கிறது என்று தெரியாத விஜய்யுடன் ஒரு வேளை கூட்டணி சேர்ந்தாலும் வெற்றிப்பெற முடியுமா என்கிற சந்தேகம் இருக்கிறது. 2026ல் அதிமுக கனவு காணும் பிரமாண்ட கூட்டணி என்பது தொண்டர்களுக்கு உற்சாகத்தை கொடுப்பதற்கு சொல்லப்பட்ட நம்பிக்கையை தரும் வெறும் வார்த்தையாக தான் இருக்கும். நடைமுறைக்கு சாத்தியமில்லை.