தமிழக பாரதிய ஜனதாவின் தலைவரான அண்ணாமலையின் பதவி பறிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளதால் அரசியல் வட்டாரம் சூடுபிடித்துள்ளது.
அதிமுக - பாஜக கூட்டணி உருவாவது கனிந்துள்ள சூழலில் அதற்கு முட்டுக்கட்டையாக இருப்பது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இடையிலான மோதல் தான்.

2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக இடையே உருவான கூட்டணி 2024 நாடாளுமன்ற தேர்தலில் பிய்த்துக் கொண்டு போனது. காரணம், அதிமுக தலைவர்களைப் பற்றி அண்ணாமலை அடிக்கடி உதிர்த்த விமர்சனங்கள் தான். அதன்பின்னர் அவ்வப்போது சீரான இடைவெளியில் கருத்து மோதல்கள் வந்த வண்ணமே இருந்தன.
இதையும் படிங்க: ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம்.. பிரதமர் மோடி, ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து..!
இந்நிலையில் கடந்த வாரம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று நேரில் சந்தித்தார். கூட்டணிக்கான சந்திப்பு இதுவல்ல என்றும் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ளதாக சந்திப்புக்குப் பின்னர் இபிஎஸ் கூறினார். ஆனால் அமித் ஷாவின் எக்ஸ் தள பதிவு மற்றும் பேட்டிகள் அதிமுக உடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக வெளிப்படையாக அறிவித்தார்.

ஒருபுறம் இபிஎஸ் டெல்லி சென்று வந்த நிலையில், அதிமுகவின் மூத்த நிர்வாகியும், கோபிச்செட்டிப்பாளையம் எம்எல்ஏவுமான செங்கோட்டையன் இரண்டு முறை டெல்லிக்கு திடீர் விசிட் அடித்துள்ளார். ஒருமுறை நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார். இது பாஜக உடனான கூட்டணிக்கு இபிஎஸ் இடம்கொடுக்க மறுத்தால் அவரை ஒதுக்கி வைத்துவிட்டு செங்கோட்டையன் தலைமையில் அதிமுகவை இணங்கச் செய்வதற்கான வேலையாக பார்க்கப்படுகிறது.
இந்த பரபரப்பு அடங்குவதற்கு முன்னதாகவே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லிக்கு அழைக்கப்பட்டார். அவரும் அமித் ஷாவை சென்று சந்தித்துப் பேசினார். இந்நிலையில் இன்று கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலையிடம், பாஜக தலைவர் பதவியில் இருந்து மாற்றப்பட உள்ளீர்களா என கேள்வி எழுப்பினர்.

நான் 2020-ல் பா.ஜ.க.வில் சேர்ந்தது முதல் எந்த பதவியையும் எதிர்பார்த்து வேலை செய்யவில்லை. என்னை பொறுத்தவரை தமிழ்நாடு நன்றாக இருக்க வேண்டும். தமிழக மக்கள் நன்றாக இருக்க வேண்டும். பா.ஜ.க.வின் வளர்ச்சி தங்கு தடை இல்லாமல் இருக்க வேண்டும் என்பதுதான் என் எண்ணம். எந்த தலைவர் மீதும், எந்த கட்சியின் மீதும் தனிப்பட்ட முறையில் எந்த கோபமும் கிடையாது.
கூட்டணி பற்றி எல்லாம் தலைவர்கள்தான் முடிவு எடுப்பார்கள். எனது கடமை நடுநிலையாக இருந்து தமிழகத்தின் களநிலவரத்தை உள்ளதை உள்ளபடியே கட்சி மேலிடத்துக்கு தெரிவிக்க வேண்டும். அந்த கடமையை செய்து இருக்கிறேன். அது சரியாக இருந்தால் தான் அதற்கேற்ப தலைவர்கள் முடிவெடுக்க முடியும்.

என்னால் யாருக்கும் பிரச்சனை வராது. நான் கடுமையாக விமர்சித்தேன் என்பது சரியல்ல. தனிப்பட்ட முறையில் யாருடனும் எனக்கு எந்த பிரச்சனையும் கிடையாது. கருத்துக்களைத்தான் கருத்துக்களால் எதிர்கொண்டு வருகிறேன். எல்லா சூழ்நிலைகளையும் ஆய்ந்து தமிழக தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதை கட்சி தலைவர்கள் முடிவு எடுப்பார்கள். விரைவில் பார்ப்பீர்கள்.
இவ்வாறு அண்ணாமலை பேசியிருப்பதன் மூலம் தமிழக பாஜக தலைவர் பதவியில் மாற்றம் வருவது உறுதி என்கிறார்கள். புதிய தலைவருக்கான ரேசில் பாஜக தேசிய மகளிர் அணிச் செயலாளரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன், நெல்லை எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவரும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் களத்தில் உள்ளனராம்..
இதையும் படிங்க: இந்து - முஸ்லீம் சண்டை வராமல் இருக்க பள்ளியில் மத உணர்வை கற்றுக்கொடுங்கள்- அண்ணாமலை..!