ஊழல் விவகாரம் தொடர்பாக தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தில் பணியாற்றும் மத்திய கலால் துறை மூத்த அதிகாரி மற்றும் தெற்கு மத்திய ரயில்வே மூத்த அதிகாரி மீது சிபிஐ வழக்குகளை பதிவு செய்தது.
இதை எதிர்த்து இரு அதிகாரிகளும் ஆந்திர உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். தெலங்கானா அரசு அனுமதி அளிக்காத நிலையில், சிபிஐ பதிவு செய்த வழக்குகள் செல்லாது என்று இருவரும் உயர் நீதிமன்றத்தில் வாதிட்டனர்.
இந்த வழக்கை விசாரித்த ஆந்திர உயர் நீதிமன்றம் கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரலில் தீர்ப்பு வழங்கியது. அதில், “ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம் இருந்தபோது மத்திய அரசு ஊழியர்கள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது. தற்போது ஆந்திரா, தெலங்கானா என இரு மாநிலங்கள் உதயமாகி உள்ளன.
இதையும் படிங்க: சீப்பை ஒளித்துவைத்தால் கல்யாணம் நின்றுவிடுமா? - மு.க.ஸ்டாலினை சீண்டிய கே.பாலகிருஷ்ணன்!

இந்த சூழலில் சிபிஐ-க்கு முன்னர் அளிக்கப்பட்ட அனுமதி செல்லாது. புதிதாக மாநில அரசின் அனுமதியை பெற வேண்டும். இரு அதிகாரிகள் மீதும் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படுகிறது. மாநில அரசிடம் அனுமதி பெற்று சிபிஐ வழக்கு பதிவு செய்யலாம்" என்று கூறப்பட்டிருந்தது.
இதை எதிர்த்து சிபிஐ தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நீதிபதிகள் சி.டி.ரவிகுமார், ராஜேஷ் பிண்டால் அமர்வு விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கியது.
அந்தத் தீர்ப்பில், "மத்திய அரசு ஊழியர்கள் மீதான வழக்கில் மாநில அரசிடம் புதிதாக அனுமதி பெறும்படி ஆந்திர உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த தீர்ப்பை ரத்து செய்கிறோம். மத்திய அரசு ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்ய மாநில அரசின் அனுமதியை சிபிஐ பெற தேவையில்லை.

குற்றம் சாட்டப்பட்ட இரு அதிகாரிகளும் மத்திய அரசு பணியாளர்கள். அவர்கள் மீது லஞ்ச ஊழல் தடுப்பு சட்டத்தை மீறியதாக கடுமையான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. மத்திய அரசின் சட்டப் பிரிவுகளின் மீது இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஊழல் விவகாரங்களில் எந்த மாநிலத்தை சேர்ந்த மத்திய அரசு ஊழியர்கள் மீதும் சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தலாம். ஐதராபாத்தை சேர்ந்த 2 மத்திய அரசு அதிகாரிகள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது செல்லும்". இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
இதையும் படிங்க: மருத்துவமனையில் மதுரை எம்.பி... சு.வெங்கடேசனுக்கு என்ன ஆச்சு!