100 நாள் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் ஆத்தூர், பழனி, நிலக்கோட்டை, வேடசந்தூர், நத்தம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், ஆத்தூர் சட்ட மன்றத்திற்குட்பட்ட பித்தளைப்பட்டியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்துகொண்டு தலைமை வகித்தார்.

அப்போது, தேசிய ஊரக வேலை வாய்ப்புத்திட்டத்தில் தமிழகத்திற்கு கடந்த 4 மாதமாக வழங்க வேண்டிய 4 ஆயிரத்து 39 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்காமல் உள்ளது என கூறினார். இதனால் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சம்பள வரவு வைக்கப்படாமல் இருப்பதாகவும், கிராமப்புற பெண்கள் இத்தொழில் மூலம் சுய சார்பு நிலையை அடைந்து வருவதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 2026 தேர்தலில் தவெக vs திமுகவிற்கும்தான் போட்டி: விஜய் பேச்சுக்கு இ.பி.எஸ் கொடுத்த ரியாக்ஷன்.!

வியர்வை சிந்தி உழைத்த மக்களுக்கு 4 மாதமாக சம்பளம் வழங்காமல் மத்திய அரசு வஞ்சித்து வருவதாகவும், இதேபோல் கல்வி நிதியை வழங்காமல் மத்திய அரசு தாமதம் செய்வதாகவும் குற்றம்சாட்டினார். தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்வதை பொறுத்துக்கொள்ள முடியாமல் பல்வேறு இடையூறுகளை மத்திய அரசு ஏற்படுத்தி வருவதாகவும் குற்றம்சாட்டினார். அமைச்சரிடம் மனு அளித்தும் பதிலளிக்கவில்லை என்பதால் மத்திய அரசின் மெத்தன போக்கை கண்டித்து பிரதமர் மோடியின் செவிகளுக்கு விழும்வரை எங்களது போராட்டம் தொடரும் என கூறினார்.

தொடந்து பேசிய அமைச்சர் பெரியசாமி, தமிழகத்தில் மன்னராட்சி நடைபெறுவதாக நடிகர் விஜய் கூறியதைப் போல இல்லை என்றும் மன்னர் ஆட்சி என்றால் எப்படி இருக்கும் என்று அவருக்கு தெரியாது எனவும் கூறினார். மக்கள் வாக்களித்து அவர்களுக்காக செயல்படும் திராவிட மாடல் அரசாக திமுக விளங்கி வருகிறது என்றும் திமுக தான் தங்களுக்கு போட்டியென நடிகர் விஜய் கூறி இருப்பது அவருடைய சொந்த கருத்து என்றும் தெரிவித்தார். திமுகவுக்கு யாரும் போட்டி கிடையாது என்று கூறிய அமைச்சர், 2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் ஆதரவுடன் மீண்டும் மகத்தான வெற்றியை பெறுவோம் என்று உறுதியளித்தார்.
இதையும் படிங்க: 100 நாள் வேலை உறுதி திட்டத்திற்கான நிதி எங்கே..? மத்திய அரசைக் கண்டித்து திமுக போராட்டம்..!