திமுகவினர் நடத்தும் சிபிஎஸ்இ பள்ளிகளில் மும்மொழி பின்பற்றப்படுகிறது என்றும் அந்தப் பள்ளிகளில் இந்தி கற்பிக்கப்படுவதாகவும் பாஜகவினர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். இதற்கு திமுக சார்பில் சரிவர விளக்கம் அளிக்காத நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் இது பற்றி விளக்கம் அளித்துள்ளார்.அதில், "திமுகவினரின் மாநில அரசின் பாடத்திட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளை நடத்துபவர்களும். சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின் கீழ் பள்ளிகளை நடத்துபவர்களும் உரிய அனுமதியுடன்தான் நடத்துகிறார்கள்.
அதில் இந்தி கற்றுத்தர மத்திய அரசின் கல்விக் கொள்கைதான் காரணம். தமிழ்நாடு அரசின் பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் தனியார் பள்ளிகள் எதிலும் இந்தி மொழி கட்டாயம் இல்லை" என்று ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

முதல்வர் ஸ்டாலினின் இந்தக் கருத்துக்கு தமிழக பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில், "தமிழ்நாட்டில் சிபிஎஸ்இ பள்ளிகளில் இந்தி கற்றுத்தரப்படுகிறது என்றால் அதற்கு காரணம் மத்திய அரசின் கல்விக் கொள்கையே தவிர திமுகவினரோ வேறு எந்த கட்சியினரோ அல்ல என்கிறார் தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின். மத்திய அரசின் கல்விக் கொள்கையை ஏற்காத தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறகு ஏன்? எதற்காக? எப்படி? தனது மகள் செந்தாமரை சபரீசன் சன்ஷைன் மாண்டசோரி ஸ்கூல் (CBSE) நடத்த அனுமதி அளித்தார்?
இதையும் படிங்க: அரசுப் பள்ளி மாணவர்கள் மீது ஒருதலையான கல்வி திணிப்பு.. திமுகவை அலறவிடும் அண்ணாமலை.!

உண்மையிலேயே தமிழகத்தில் இருமொழி கல்விக் கொள்கை மட்டுமே அமலில் இருக்க வேண்டும் என்பதில் திமுகவின் முன்னணி தலைவர்கள் உறுதியாக இருந்தால் அவர்கள் குடும்பத்தினர் நடத்தும் பள்ளிகளை மு.கருணாநிதி முன்மொழிந்த சமச்சீர் கல்வி பள்ளிகளாக உருவாக்காமல் மும்மொழி கற்பிக்கும் சிபிஎஸ்இ பள்ளிகளாக உருவாக்கியது ஏன்? பதிலளிப்பீர்களா முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களே?
ஹிந்தி எதிர்ப்பு என்பது திமுகவின் அரசியல் கோஷம்! தமிழ் பற்று என்பது திமுகவின் அரசியல் வேஷம்! அரசியலுக்காக மும்மொழி எதிர்ப்பு? ஆதாயத்திற்காக சிபிஎஸ்இ பள்ளிகள்! இந்தப் பித்தலாட்டத்திற்கு பெயர்தான் "திராவிட மாடல்"" என்று ஹெச். ராஜா விமர்சித்துள்ளார்.
இதையும் படிங்க: இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் வளையல் திருடும் திமுக கவுன்சிலர்… வீடியோ வெளியிட்ட அண்ணாமலை..!