சீனாவில் கொரோனா வைரஸுக்கு பின் அதிகளவில் மக்கள் கூட்டம்கூட்டமாக மருத்துவமனையில் சிகிச்சைக்கு நிற்பது போலவும், மருத்துபவப் பரிசோதனை செய்வது போலவும் காணொலிகள் யூடியூக்களிலும், சமூக வலைத்தளங்களில் வெளியாகின.
இது தொடர்பாக சர்வதேச மருத்துவ ஆய்வு நிறுவனங்கள் வெளியிட்ட தகவலின்படி, சீனாவில் கொரோனாவைப் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும் எச்என்பிவி வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தது. இந்த வைரஸின் பாதிப்பு, தீவிரத்தன்மை குறித்து சீனா உண்மையான தகவல்களை வெளியிட வேண்டும் என உலக சுகாதார அமைப்பும் கேட்டுக்கொண்டது. இதையடுத்து, இந்த வைரஸ் பாதிப்பு இந்தியாவில் வந்துவிடக்கூடாது என்பதை தீவிரமாகக் கவனம் செலுத்திய மத்திய அரசு கண்காணிப்பை தீவிரப்படுத்தியது. சீனாவில் இருந்து வருவோர், சீனா வழியாக வரும் பயணிகள், சுற்றுலாப் பயணிகள், இந்தியர்களை தீவிரமான பரிசோதனைக்குப்பின்பே அனுமதித்தது.

இந்நிலையில், எச்என்பிவி வைரஸ் பாதிப்பு பெங்களூரிவில் இருவருக்கு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசின் ஐசிஎம்ஆர் அமைப்பு இன்று தெரிவித்துள்ளது.
ஐசிஎம்ஆர் அமைப்பு அதிகாரிகள் கூறுகையில் “ ஐசிஎம்ஆர் அதிகாரிகள் வழக்கமான பரிசோதனை, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, நுரையீரல் தொற்று தொடர்பான நோயுடன் இரு குழந்தைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பெங்களூருவில் உள்ள பாப்டிஸ்ட் மருத்துவமனையில் முதல் குழந்தை நுரையீரல் தொற்றால் சிகிச்சை பெற்று வந்தது தெரியவந்தது. 3 மாதமே ஆன இந்த குழந்தைக்கு ஏற்பட்ட பாதிப்பு தற்போது சீராகி படிப்படியாக குணமாகி வருகிறது.
2வதாக 8 மாத ஆண் குழந்தைக்கு கடந்த 3ம் தேதி தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, அந்த குழந்தைக்கு தற்போது தனிஅறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த குழந்தையின் உடல்நிலையும் தேறிவருகிறது.” எனத் தெரிவித்தனர்.
வெளிநாடு பயணம் சென்றார்களா...
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதுவதா:
“ இந்த தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், குடும்பத்தினர் யாரும் வெளிநாடுகளுக்கு ஏதும் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆதலால் இந்த சூழலையும், வைரஸ் பரவலையும் மத்திய சுகாதாரத்துறை தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.
எச்எம்பிவி வைரஸ் ஏற்கெனவே உலகம் முழுவதும் வியாபித்து பரவக்கூடியது, இந்தியாவிலும் ஏற்கெனவே இருக்கிறது. நுரையீரல் தொடர்பான எச்எம்விபி வைரஸ் மூலம் பரவும் வைரஸ் தொற்று பல நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் ஐசிஎம்ஆர் அமைப்பின் ஒருங்கிணைந்த நோய் தடுப்பு கண்காணிப்பு திட்டம் மூலம்தான் இந்த வைரஸ் பரவும் கண்டறியப்பட்டது. ஆனால், நாட்டில் வழக்குத்துக்கு மாறாக, இயல்புக்கு மாராக வைரஸ் பரவலோ, இன்புளுயன்ஸா காய்ச்சல் பரவலோ இல்லை, தீவிர நுரையீரல் தொற்று நோய் பரவும் இல்லை” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இந்தியாவில் முதல் எச்எம்பிவி வைரஸ் : பெங்களுரு மருத்துவமனையில் குழந்தைக்கு பாதிப்பு உறுதி

பதற்றம் வேண்டாம்...
கர்நாடக மாநில முதன்மை சுகாதாரத்துறை மற்றும் குடும்பநலத்துறை செயலர் ஹர்ஸ் குப்தா வெளியிட்ட அறிக்கையில் “ 11 வயதுக்கு கீழ்பட்ட குழந்தைகளுக்குத்தான் வழக்கமாக எச்எம்பிவி வைரஸ் கண்டுபிடிக்கப்படும். அவ்வாறு தொற்றுள்ள குழந்தைகளில் ஒரு சதவீதம் பேருக்கு மட்டும் எச்எம்பிவி வைரஸ் இருக்கும். இது இந்தியாவில் முதல் பாதிப்பு எனச் சொல்ல முடியாது, இந்த வைரஸ் குறித்து யாரும் பதற்றப்படத் தேவையில்லை. மற்ற வைரஸ் போன்று இது இல்லை, நுரையீரலை அதிகமாக பாதிக்கக்கூடிய கொடிய வைரஸ் இல்லை. தீவிரமான காய்ச்சல், ஜலதோஷம், ப்ளூகாய்ச்சல் போன்று இருக்கும். குறிப்பாக இளம் வயதினர், வயதானவர்களை எளிதாக பாதிக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
கர்நாடக அமைச்சர் தினேஷ் குண்டுவார் நிருபர்களிடம் கூறுகையில் “ பெங்களூருவில் கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ் சீனாவில் இருந்து பரவிய வைரஸா என இதுவரை உறுதி செய்யப்படவில்லை.இது ஏற்கெனவேஇந்தியாவில் பரவி இருந்த வைரஸ். இந்த சூழல் குறித்து அறிந்து அதிகாரிகளுடன் விரைவில் ஆலோசிப்போம். இது உண்மையில் ஆபத்தான வைரஸா, பதற்றப்பட வேண்டுமா, கொரோனா போன்று தொற்று இருக்குமா என்பது குறித்து மருத்துவக் குழுவினருடன் கலந்தாய்வு செய்வோம்” எனத் தெரிவித்தார்.

எச்எம்பிவி வைரஸ் என்றால் என்ன..?
எச்எம்பிவி வைரஸ் என்பது ஹியூமன் மெடாப்நியூமோவைரஸ் என்பதாகும்.சமீபத்தில் சீனாவில் உள்ள மருத்துவமனைகளில் மக்கள் அலை மோதுவதாகவும், சிகிச்சைக்காக வரிசையில் நிற்கும் வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வெளியானது. இந்த மக்கள் அனைவரும் எச்எம்பிவி எனும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என அந்த வீடியோக்கள் தெரிவித்தன. எச்எம்பிவி வைரஸ், இன்ஃப்ளூயன்சா ஏ, மைக்கோபிளாஸ்மா நிமோனியா, கோவிட்-19 ஆகிய வைரஸ்கள் பரவலும் இருப்பதாகவும் அந்த வீடியோக்களில் தெரிவிக்கப்பட்டது.
எச்எம்பிவி வைரஸ் முதன் முதலில் கடந்த 2001ம் ஆண்டு நெதர்லாந்தில் ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் மனிதர்களின் சுவாச உறுப்பு, நுரையீரலில்தொற்றை ஏற்படுத்தி, பாதிப்பை உண்டாக்கும் என அமெரிக்க நுரையீரல் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருக்கமான தொடர்பு வைத்திருந்தால், அவர்களின் எச்சில் பட்டாலோ அதாவது தும்முதல், இருமும் போதும், பாதிக்கப்பட்டவர்கள் தொட்ட பகுதிகளை தொடும்போது இந்த வைரஸ் மற்றவர்களுக்குப் பரவும். இந்த வைரஸ் குறிப்பாக குளிர்காலம், கோடை காலத்தில் அதிகமாகப் பரவும் தன்மை கொண்டது.

அறிகுறிகள் என்ன..?
இந்த எச்எம்பிவி வைரஸின் அறிகுறிகள் பாதிக்கப்பட்டவருக்கு தொடர் இருமல், காய்ச்சல், மூக்கில் நீர்வடிதல், தொண்டை கட்டுதல் போன்றவை இருக்கும். சிலருக்கு மூச்சுவிடச் சிரமும், மூச்சுவாங்குதலும் இருக்கும், சிலருக்கு தோலில் அரிப்பு, தடிப்புகளும் இருக்கும்.
இதையும் படிங்க: சீனாவில், கொரோனாவை போல் அச்சுறுத்தும் புதிய வைரஸ்: "பீதி வேண்டாம்" என்கிறது, இந்தியா