அமெரிக்க விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ், பட்ச் வில்மோர் இருவரும் சர்வதேச விண்வெளி நிலையத்தின் பராமரிப்பு பணிக்காக கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஸ்டார்லைன் போயிங் விண்கலம் மூலம் சென்றனர். 8 நாட்களில் பணியை முடித்து பூமிக்கு திரும்ப வேண்டிய நிலையில், இவர்கள் சென்ற விண்கலம் பழுதாகி அதிலிருந்த ஹீலியம் வாயு முழுவதும் வெளியேறியது. இதனால் இருவரும் பூமிக்கு திரும்ப முடியாமல் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்திலேயே சிக்கினர்.

இந்நிலையில், எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உதவியுடன், டிராகன் ராக்கெட் மூலம் சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் இருவரையும் பூமிக்கு அழைத்துவர முடிவு செய்யப்பட்டது. இதன்படி விண்வெளி வீரர்கள் ஆனி மெக்லைன், விமானி நிக்கோல் ஆயெர்ஸ், ஜப்பானிய விண்வெளி வீரர் டகுயா ஒனிஷா, ரஷ்ய விண்வெளி ஆய்வாளர் கிரில் பெஸ்கோவ் ஆகியோருடன் டிராகன் ராக்கெட் விண்வெளிக்குப் புறப்பட்டு சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்தது.
இதையும் படிங்க: சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் நாளை பூமிக்கு திரும்புகிறார்கள்.. நாசா அறிவிப்பு..!
இந்நிலையில் அனைத்து பொறுப்புகளையும் டிராகன் ராக்கெட்டில் வந்த விண்வெளி வீரர்களிடம் ஒப்படைத்த சுனிதா வில்லியம்ஸ், பட்ச் வில்மோர் இருவரும் 9 மாதங்களுக்குப்பின் பூமிக்குத் திரும்ப ஆயத்தமாகியுள்ளனர்.

டிராகன் ராக்கெட்டின் கேப்சூலுக்குள் சுனிதா வில்லிம்யஸ், வில்மோர், ரஷ்ய வீரர் கிரிஸ்பெஸ்கோவ், நிக் ஹாக் ஆகியோருடன் இன்று காலை 10.35 மணிக்கு ராக்கெட் கேப்சூல் சர்வதேச விண்வெளி நிலையத்தைவிட்டு பிரியத் தொடங்கி, 17 மணி நேரப் பயணத்துக்குப்பின் பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழையும்.
புதன்கிழமை அதிகாலை தோராயமாக 3.25 மணி (தோராயம்) அளவில் ராக்கெட்டில் இருக்கும் பாராசூட் விரியத் தொடங்கி, அதன் வேகம் கட்டுப்படுத்தப்பட்டு மெதுவாக கடலில் தரையிறங்கும். காலை 5 மணிக்கு சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் உள்ளிட்டோர் செய்தியாளர்களுடன் பேசுவார்கள்.

டிராகன் கேப்சுலுக்குள் செல்லும் முன் சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் இருவரும் எக்ஸ் தளத்தில் வீடியோ வெளியிட்டு அதிபர் ட்ரம்ப், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் இருவருக்கும் நன்றி தெரிவித்துள்ளனர். சுனிதா வில்லியம்ஸ் கூறுகையில் “ நீண்ட காலத்துக்குப் பின் பூமிக்கு திரும்புகிறோம், நான் இல்லாமல் எந்த திட்டத்தையும் செய்யாதீர்கள். நாங்கள் விரைவில் திரும்பி வருவோம்” எனத் தெரிவித்தார்.
பட்ச் வில்மோர் கூறுகையில் “எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இருவர் மீதும் அதிகபட்ச மதிப்பும், அன்பும் அனைவரும் வைத்துள்ளோம். எங்களை பூமிக்கு அழைத்துவர உழைத்த அனைவருக்கும் நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம். எங்களுக்கு உதவிய அனைவருக்கும் நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தேவதையான எலான் மஸ்க்கின் டிராகன் காப்ஸ்யூல்... சுனிதா எப்படி பாதுகாப்பாக தரையிறங்குவார்..?