''நாட்டில் உள்ள எல்லா கட்சித் தலைவர்களும் தன் கட்சி வளர்வதற்காக தொண்டர்களை உசுப்பி விட்டு பேசுவார்கள். இங்கே எல்லா கட்சித் தலைவர்களும் அப்படித்தான்'' என விஜய் பேசியதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கருத்துத் தெரிவித்துள்ளார்.

''2026 தேர்தலில் தவெகவுக்கும், திமுகவிற்கும்தான் போட்டி என்று விஜய் அவரது கருத்தை சொல்லி இருக்கிறார். நாட்டில் உள்ள எல்லா கட்சித் தலைவர்களும் தன் கட்சி வளர்வதற்காக தொண்டர்களை உசுப்பி விட்டு பேசுவார்கள். இங்கே எல்லா கட்சித் தலைவர்களும் அப்படித்தான். நாங்கள்தான் பிரதான கட்சி என்பதை மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். அதற்கான அங்கீகாரத்தையும் மக்கள் அளித்துள்ளார்கள்.
இதையும் படிங்க: இ.பி.எஸை 3ம் இடத்துக்கு தள்ளிய விஜய்..! இப்போது தேர்தல் நடந்தால் தமிழகத்தில் யார் முதல்வர்..? சி-வோட்டரில் அதிர்ச்சி..!

''பாஜக, திமுக பற்றி விஜய் விமர்சித்து பேசினார். ஆனால் உங்கள் தலைவர்களை விஜய் பெருமையாக பேசியிருக்கிறாரே'' என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த எடப்பாடி பழனிச்சாமி, ''எங்கள் தலைவர்கள் அப்படி இந்த நாட்டை ஆண்டு இருக்கிறார்கள். இன்றைக்கு எதிர்க்கட்சியினரும் சரி, புதிய கட்சி தொடங்குகிறவர்களும் சரி, எப்படி நடக்க வேண்டும் என்று எடுத்துக்காட்டாக விளங்கிய தலைவர்கள் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர், இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா.
அதனால் அவர்கள் குறிப்பிட்டு காட்டுகிறார்கள்.

நேற்றைய தினம் பொதுமக்களுடைய பிரச்சினை குறித்து பூஜ்ஜிய நேரத்தில் எதிர்க்கட்சி என்ற முறையில் கேள்வி எழுப்ப முயற்சி செய்தபோது எனக்கு அனுமதி இல்லை. சட்டப்பேரவை தலைவர் எங்களுக்கு அனுமதி வழங்கவில்லை. குறிப்பாக உசிலம்பட்டியில் ஒரு காவலர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம். மற்றொன்று சிவகங்கை பயிற்சி மருத்துவர் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து பூஜ்ஜிய நேரத்தில் அரசினுடைய கவனத்திற்கு கொண்டுவர வேண்டும் என்ற காரணத்திற்காக நாங்கள் அனுமதி கேட்டோம். அதற்கு அனுமதி மறுக்கப்பட்டு திட்டமிட்டு எங்களை வெளியேற்றி விட்டார்கள்.
திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி எப்பொழுது தமிழகத்தில் அமைக்கப்பட்டதோ, அன்று முதல் இன்று வரை சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கின்ற சூழ்நிலையை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். தொடர் கதையாக இருக்கின்றது. கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை தொடர் கதையாக இருக்கிறது. இந்த அரசின் மெத்தனைப் போக்கின் காரணத்தினால் ஒரு திறமையற்ற முதலமைச்சர் இன்று நாட்டை ஆண்டு கொண்டிருக்கிற காரணத்தினால் இப்படிப்பட்ட நிகழ்வு தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

இது எல்லாம் அரசின் கவனத்திற்கு கொண்டு வந்து, நிறுத்துகின்ற நிலையை இந்த அரசு எடுக்கும் என்ற நம்பிக்கையோடு நாங்கள் எங்களுடைய கருத்தை சட்டமன்றத்தில் தெரிவிக்க முற்பட்டபோது அதை தெரிவிக்க அனுமதி கொடுக்கவும் இல்லை. எங்களை வேண்டுமென்றே திட்டமிட்டு வெளியேற்றி விட்டார்கள்'' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: திமுக நிறுவனத்திற்கு திறப்பு விழா நடத்தியதே விஜய்தான்- டாராகப் பொளந்த அண்ணாமலை